தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 27 மே, 2019

பூமியில் தோன்றிய முதல் சிவன் கோயில் எங்குள்ளது என்று தெரியுமா?


பல்லாயிரக்கணக்கான பழமையான சிவன் கோயில்கள் உலகம் முழுதும் இருக்கிறது. ஆனால் இந்த பூமியிலேயே பழமையான சிவன் கோயிலாக உத்திரகோசமங்கை என்ற சிவா தலமே கருதப்படுகிறது.
இராமநாதபுரம் மாவட்டம், இராமேஸ்வரம் செல்லும் வழியில் உள்ளது உத்திரகோசமங்கை திருத்தலம். இத்திருக்கோயில் யாரால் எப்பொழுது கட்டப்பட்டது என்று அறியமுடியவில்லை.ராமாயண காலத்திற்கு முன்பு இருந்தே, இந்தக் கோவில் சிறப்பு பெற்று விளங்கியதாக அறியப்படுகிறது.
ராவணனும், அவர் மனைவியான மண்டோதரியும் வழிபட்டு வரம் பெற்றத் தலம் இது என்று கூறப்படுகிறது. ராவணனுக்கு திருமணம் தாமதமாகிக் கொண்டே சென்றபோது, அவர் இந்த ஆலயத்திற்கு வந்து வழிபட்டு திருமணப் பேறு பெற்றதாக தகவல் காணப்படுகிறது.
வேறு எந்த தலத்திலும் காண முடியாத அற்புதமான மரகத நடராஜர் சிலை இங்கு உள்ளது. இந்த மரகதத் திருமேனியை மார்கழி மாதம் நடைபெறும், ஆருத்ரா தரிசனத்தின் போது மட்டுமே காண முடியும். மற்றபடி வருடம் முழுவதும் இந்த நடராஜர், சந்தனக் காப்பு அலங்காரத்திலேயே காட்சியளிப்பார்.
ஈஸ்வரத் தலங்களிலேயே இங்கு மட்டும் தான் இறைவனுக்கு தாழம்பூ சார்த்தலாம் என்பது சிறப்பான செய்தி. ஏனெனில் இறைவனின் முடியைக் கண்டதாக தாழம்பூவின் சாட்சியுடன் பொய் சொன்ன பிரம்மா இத்தலத்தில் வணங்கி சாப விமோசனம் பெற்றார். இறைவன் சுயம்புவாக ஒரு இலந்தை மரத்தடியில் தோன்றினார். அந்த மரம் இன்னும் உள்ளது.
மரகதக் கல் நடராஜர் மீது சாத்தப்பட்டு எடுத்துத் தரப்படும் சந்தனத்தை வெந்நீரில் கரைத்து குடித்தால் தீராத நோய்கள் தீருவதாக பக்தர்கள் கூறுகின்றனர்.
முன்னோர் சாபம், திருமணத் தடை, குழந்தைப் பேறு இல்லாமை, கல்வியில் தடை, வெளிநாட்டுப் பயணத்தில் தாமதம் போன்ற இடையூறுகளில் இருந்து விடுபட, இத்தல இறைவன் வழிவகை செய்கிறார். தினமும் இரவு 7.30 மணிக்கு நடைபெறும் பள்ளியறை பூஜையில் கலந்துகொண்டால், பிரிந்த தம்பதிகள் ஒன்று சேருவார்கள் என்பது நம்பிக்கையாகும். இங்கு தட்சிணாமூர்த்தி பகவான் யோக நிலையில் வீற்றிருந்து அருள்பாலிக்கிறார். தினமும் காலை 6 மணி முதல் 11 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரையிலும் கோவில் திறந்திருக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக