இயேசுநாதர் திருமணமானவர் என்றும் அவருடைய முதன்மையான சிஷ்யையாக கருதப்படும் மேரி மெகதலீன்தான், இயேசுநாதரின் மனைவி என்றும் புதிய தகவல் ஒன்று வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தின் இறையியல் பிரிவு தலைவரான பேராசிரியர் கேரன் கிங் என்பவர்தான் இதுதொடர்பான ஆய்வு முடிவை வெளியிட்டுள்ளார்.
இயேசுநாதர் குறித்த இந்த முக்கிய தகவலை வெளியிட்ட அவர் கூறுகையில், மிக மிகப் பழமையான கையால் எழுதப்பட்ட வாசகங்கள் அடங்கிய கோரைப்புல்லால் ஆன கையெழுத்துப் படி ஒன்று கிடைத்துள்ளது. அதில் இயேசுநாதரின் தனிப்பட்ட வாழ்க்கை குறித்த வாசகங்கள் இடம் பெற்றுள்ளன.
முழுமையான வாசகங்கள் அதில் இல்லை. பண்டைய எகிப்திய கோப்டிக் மொழியில் வாசகங்கள் உள்ளன. அதை ஆராய்ந்து பார்த்ததில், இயேசுநாதரின் மனைவிதான் அவரது முதன்மையான பெண் சிஷ்யையான மேரி மெகதலீன் என்பது தெரிய வருகிறது. இருவரும் கணவன், மனைவியாக இருந்துள்ளனர் என்பதும் தெரிய வந்துள்ளது.
இந்த கையெழுத்துப் படியானது 8 செமீ நீளமும், 4 செமீ அகலமும் கொண்டதாக அமைந்துள்ளது. இந்த கையெழுத்துப் படியில் உள்ள வாசகங்கள் மூலம் இயேசுநாதரும், மேரி மெகதலீனும் கணவன் மனைவி என்பது திட்டவட்டமாக தெரிய வருகிறது.
ஒரு இடத்தில் மேரி மெகதலீனை எனது மனைவி என்று இயேசுநாதர் தனது சீடர்களிடம் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது. நான் அவருடன் வசித்து வருகிறேன் என்றும் குறிப்பிட்டதாக கூறப்பட்டுள்ளது.
இந்த கையெழுத்துப் படி நம்பகத்துக்குரியதாக இருக்க வேண்டும் என்றே நம்புகிறோம் என்றும் அப்படி இருந்தால் இது மிகப் பெரிய ஆச்சரியகரமான தகவலாக அமையும் எனவும் கூறியுள்ளார்.
ஏற்கனவே மேரி மெகதலீனும், இயேசுநாதரும் தம்பதியர் என்று அமெரிக்க எழுத்தாளர் டேன் பிரவுன் தனது “தி டாவின்சி கோட்” நூலில் குறிப்பிட்டிருந்தார். இது பெரும் சர்ச்சையையும், எதிர்ப்புகளையும், புயலையும் கிளப்பியிருந்தது என்பது நினைவிருக்கலாம்.
இந்நிலையில் மேரி மெகதலீன், இயேசுநாதரின் மனைவிதான் என்று அமெரிக்க ஆய்வாளர் ஒருவர் கூறியிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
யார் இந்த மேரி மெகதலீன்?
மேரி மெகதலீன் குறித்து பைபிளில் பல்வேறு தகவல்கள் உள்ளன. அவர் குறித்த சர்ச்சைக்கிடமான கருத்துக்களும் நிறைய உள்ளன. மேரி மெகதலீன் இயேசுநாதரின் முதன்மையான பெண் சீடராக இருந்தவர். அவருக்கு சீடர்கள் குழுவில் மிகுந்த முக்கியத்துவம் இருந்தது.
மேரி மெகதலீன் ஒரு விபச்சாரப் பெண்ணாக ஆரம்பத்தில் இருந்தார் என்று 591ம் ஆண்டு ஒரு குறிப்பு உள்ளது. பின்னர் இயேசுநாதர் அவரை சீர்திருத்தி தனது சிஷ்யையாக ஏற்றுக் கொண்டார் என்று கூறப்படுகிறது.
மேரி மெகதலீன் குறித்து இயேசுநாதரின் சீடர்களான லூக், மார்க், ஜான் ஆகியோரும் நிறையவே குறிப்பிட்டுள்ளனர்.
இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட பின்னர் அவரது ஆண் சீடர்கள் பலரும் போய் விட்டனர். ஜான் மட்டுமே உடன் இருந்தார். அவருடன் உடன் இருந்தவர் மேரி மெகதலீன்.
இதேபோலஇயேசுநாதர் உயிர்த்தெழுந்தபோது அதை முதலில் கண்டவர் மேரி மெகதலீன்தான். இதை ஜானும், மார்க்கும் தங்களது குறிப்புகளில் சொல்லியுள்ளனர்.
இந்நிலையில்தான் இயேசுநாதருக்கு மிகவும் நெருக்கமானவராக இருந்த மேரி மெகதலீன் உண்மையில் இயேசுநாதரின் மனைவி என்று அமெரிக்க ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக