சங்கத் தமிழ் மூன்றும் தா!
(ஒளவையின் புலமையும் பாரதிதாசன் மடமையும்)
இனப்பற்று மொழிப்பற்று என்கின்ற அழகிய போர்வைகளால் திராவிடக் குப்பைகளை மூடிப் பாதுகாத்த அறிஞர்களும் எழுத்தாளர்களும் கவிஞர்களும் பேச்சாளர்களும் பலர்! தவிடு வைக்க பெரிய சாக்கும் தங்கம் வைக்க சிறு பெட்டியும் போதும் என்பது போல தமிழ் உணர்வாளர்கள் பலரின் புத்தக அலுமாரியில் திராவிட நூல்கள் பலவாகவும் சமய நூல்கள் சிலவாகவும் இருக்கக் காண்கின்றோம்!
தங்களைச் சார்ந்த கூட்டத்தினரால் அறிவாளிகள் என்று கோபுரத்தில் தூக்கி வைக்கப்பட்ட சில திராவிட இலக்கிய வாதிகள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து தமிழுக்கும் சமயத்துக்கும் சமூகத்துக்கும் தங்களை விடத் தொண்டு அதிகம் செய்த முன்னோர்களை அவர்களின் கருத்துக்களை இழித்தும் பழித்தும் நூல்கள் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்!
தங்களைச் சார்ந்த கூட்டத்தினரால் அறிவாளிகள் என்று கோபுரத்தில் தூக்கி வைக்கப்பட்ட சில திராவிட இலக்கிய வாதிகள் நாடோடி வாழ்க்கை வாழ்ந்து தமிழுக்கும் சமயத்துக்கும் சமூகத்துக்கும் தங்களை விடத் தொண்டு அதிகம் செய்த முன்னோர்களை அவர்களின் கருத்துக்களை இழித்தும் பழித்தும் நூல்கள் செய்து விட்டுப் போயிருக்கிறார்கள்!
அப்படிப் பட்டவர்களில் ஒருவர் தான் பாரதிதாசன்! தலை சிறந்த கவிஞர் பாரதிதாசன் என்பதில் எதிரிகளுக்கும் மாற்றுக் கருத்து இருக்க முடியாது! அவரின் இனவுணர்வுப் பாக்களும் சமூகக் கொடுமைகளைச் சாடும் தன்மைகளும் விலைமதிக்க முடியாதவை என்பதையெல்லாம் ஒரு புறம் வைத்து விட்டு அவரின் அறியாமைக் கருத்தொன்றை ஒளவையிடம் கொண்டு வருகின்றோம்!
இங்கே ஒளவை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை! ஒளவைக்கு என்ன அறிமுகம் சொல்வது? கிழவி தமிழ்க் கடல்! அவ்வளவு தான் சொல்ல முடியும்!
இங்கே ஒளவை பற்றி அதிகம் சொல்லத் தேவையில்லை! ஒளவைக்கு என்ன அறிமுகம் சொல்வது? கிழவி தமிழ்க் கடல்! அவ்வளவு தான் சொல்ல முடியும்!
அந்த ஆச்சி ஒரு பாட்டுப் பாடினாள்! தன் நல்வழி என்ற நூலுக்கு காப்புச் செய்யுளாக!
பாலும் தெளிதேனும் பாகும் பருப்பும் இவை
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம் செய்
துங்கக் கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
நாலும் கலந்து உனக்கு நான் தருவேன் – கோலம் செய்
துங்கக் கரி முகத்து தூமணியே நீ எனக்கு
சங்கத் தமிழ் மூன்றும் தா
பாரதிதாசன் கிழவியின் பாட்டை தன் அறிவில் எடுத்துக் கொண்டார்! பிள்ளையாருக்கு பாலும் தேனும் பாகும் பருப்பும் லஞ்சமாககக் கொடுத்து சங்கத் தமிழ் மூன்றையும் தா என்று கேட்டால் சமுதாயம் எப்படி உருப்படும்? குழந்தைகளுக்கு சிறு வயதிலேயே படிக்காமல் எப்படிப் பலன் அடைவது என்று ஒளவைப் பாடல் வழி சொல்கின்றது என்று தன் சிரிக்கும் சிந்தனைகள் என்ற நூலில் அந்தப் பாடலைப் போட்டு நார் நாராக கிழித்திருக்கிறார் பாவேந்தர்!
வெளிப்படையாக யார் பார்த்தாலும் ஓ! பாவேந்து சொல்வது சரிதான்! என்றுதான் நினைப்பார்கள்! காரணம் பாவேந்தர் இருந்த இடமும் அவரின் வாக்கு வன்மையும் அப்படி! அது மட்டுமல்ல என்னதான் தலை கீழாக நின்றாலும் இந்தப் பாட்டுக்கு வெளிப்படையான பொருள் இது தான்; என்பதில் யாராலும் மாற்றம் காண முடியாது! பாரதிதாசன் கண்ட பொருளிலே தப்பில்லை!
ஒளவையின் ஏனைய தனிப் பாடல்களையும் கற்று அவளின் மனப் போக்கைப் புரிந்து கொண்டவர்களின் உள்ளத்தில் பாரதிதாசனின் கருத்தைக் கண்டதும் இந்த மனிதர் இப்படிக் குற்றம் சொல்லும் அளவுக்கு தன் பாட்டிலே கிழவி தப்புப் பண்ணியிருக்குமா? இருக்காதே! இல்லையில்லை! இதுக்கு வேறு என்னவோ பொருள் இருக்க வேண்டும் என்ற என்ற சந்தேகம் உடனேயே தோன்றி விடும்!
உண்மையும் அது தான்! பாரதிதாசனும் மற்றவர்களும் நினைக்கும் கருத்தில் ஒளவை இந்தப் பாடலைப் பாடிவிடவில்லை! பாரதிதாசன் போன்ற ஈக்கள் மொய்க்க அவள் இனிப்பல்ல! அவள் நெருப்பு! அப்போ இந்தப் பாடலுக்கு என்ன பொருள்?
விநாயகப் பெருமானே! விலங்கிலே சுரக்கும் பாலும்! தேனிக்கள் தேடிய தேனும் முளைவிட வேண்டிய தானியங்களால் ஆன பாகும் பருப்பும் என்ற இவையெல்லாம் நிலையில்லாத பொருட்கள்! அத்தோடு இவை விலங்கிலும் தாவரத்திலும் இருந்து திருடப்பட்ட பொருட்கள்! இவை உனக்கு வேண்டாம்! நான் உனக்கு இவற்றையெல்லாம் விடச் சுவை மிக்க பாலும் தேனும் பாகும் பருப்பும் சங்கத் தமிழாலே பாடித் தருகின்றேன்! அவை என்றும் அழியாதவை! அதைச் செய்வதற்குச் சங்கத் தமிழ் மூன்றின் அறிவையும் எனக்குத் தந்துவிடு அப்பனே!
இதைத்தான் பிள்ளையாரிடம் ஒளவை கேட்டாள் பாரதிதாசனாரே! நீங்கள் நினைப்பது போல லஞ்சம் தருகின்றேன் கல்வி தா என்று அவள் கேட்கவில்லை! நான் தருவேன்! என்றால் மற்றைய திருட்டுப் பொருட்களை ஏற்காதே என்று கடவுளுக்கே அறிவுரை சொல்லும் கிழவியின் பாட்டை உணர்ந்து கொள்ளாமல் திராவிட வாள் கொண்டு பிளக்கிறார்களே! இவர்கள் தான் தமிழ்த் திருடர்கள்!
எனது கன்றுக்குப் பால் போதும் மீதியை நீ எடுத்துக் கொள் என்று பசு சொல்லவில்லை! சிறிய சிறகு கொண்டு அலைந்து மலர் தோறும் தேன் தேடிக் கூட்டில் வைக்கின்றேன். கூட்டைப் பிழிந்து அதை எடுத்துக் கொள் என்று தேனி சொல்லவில்லை! என் இனம் முளைப்பதற்குச் சிறிது போதும் மீதியை நீ எடுத்து பாகும் பருப்பும் செய்து கொள் என்று பயிர்கள் உபதேசிக்கவில்லை! அவற்றையெல்லாம் வருத்தி எடுத்த பொருட்களை மனிதன் உபயோகிக்கலாம்! தெய்வமே நீ அனுபவிக்கலாமா? அவை உனக்கு வேண்டாம்! அவை திருட்டுப் பொருட்கள்! நான் தமிழாலே செய்து தரும் இந்தப் பால் தேன் பாகு பருப்பு தான் குற்றம் அற்றவை என்றாள் ஒளவை!
இன்றைக்கு சாப்பாடு கிடைக்கவில்லை! பொறுத்துக் கொள் என்று சொன்னாலும் கேட்க மாட்டேன் என்கிறாய்! நல்ல சாப்பாடு கிடைக்கும் போது இரண்டு நாளுக்கு ஏற்றுக் கொள் என்றாலும் அதைச் செய்கின்றாய் இல்லை! உன்னோடு வாழ இயலாமல் இருக்கின்றது என்று பசியால் வருந்தி சலித்துக் கொண்ட ஒளவையிடம் பாலும் தேனும் பாகும் பருப்பும் எங்கே இருக்கப் போகின்றது? அவளிடம் இருந்ததெல்லாம ஒரே ஒரு சொத்தான தமிழ் அறிவு மட்டும் தானே என்று ஏன் பாரதி தாசன் சிந்திக்கவில்லை? எத்தனையோ மன்னர்களிடம் பழகிய அவள் ஒரு சல்லிக் காசு கூட இரந்து கேட்டதாக வரலாறு இல்லை.
இந்தக் கருத்தோடு பாரதி தாசன் சொன்னதை ஒப்பிட்டுப் பாருங்கள் ஒளவையின் புலமையும் பாவேந்தரின் அறியாமையும்; அதிலே புதைந்து கிடப்பதைக் காணலாம்!
இரா. சம்பந்தன் (கனடா)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக