இறைவன் உள்ளிருக்கிறான் என்ற உண்மையை கல்வி கேள்விகளால் தெளிவுபடுத்திக் கொள்கிறோம்(தெளிவுறுதல்) பின் அதைப்பற்றி நமக்கு நாமே ஆராய்ந்து உறுதிப்படுத்திக் கொள்கிறோம் (உறுதி கொள்ளல்) இந்த உறுதியானது நமது ஒவ்வொரு உணர்விலும் நிலைபெற்று விடுகிறது. (உணர்வில் நிலைபெறுதல்)
இந்த ஒளியைக் காணவேண்டும் என்ற தீவிர விருப்பம் ஏற்படுகிறது. இந்த நிலையை அடைந்தபின் அட்டாங்க யோகம் மூலம் இறைவனை அடையமுடியும் இதற்கு எட்டுவிதமான படிகள் உள்ளன எனவே அட்டாங்க யோகம் எனப்படுகிறது.
1. இயமம்; மனமாக இல்லாமை, கொல்லாமை, களவு குணம் இல்லாமை, ஆகியவற்றைப் பழக்கப்படுத்திக் கொண்டால் நல்லவை செய்யும் நெறி ஏற்பட்டுவிடும்.
2. நியமம்: தூய எண்ணங்களை வளர்த்தல். கருணை பொறுமை ஆகியவற்றால் மனதைச் செம்மைப்படுத்துதல்.
ஆசனம்: பத்மாசனம், ககாசனம் போல ஏழு ஆசனங்கள் சொல்லப்படுகின்றன. இவற்றில் நமக்கு வசதியாக இருப்பதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.
4. பிராணாயாமம்: மூச்சை நிதானமாக இழுத்து, அடக்கி, வெளிவிட்டுச் செய்கின்ற செயலில் உடலுக்கும் மனதுக்கும் வலிமையும் ஆக்கமும் கிடைக்கும். இதை முறையாக யாரிடமாவது கற்றுக்கொண்டால் நல்லது மூச்சுப்பயிற்சியின் மூலம் எண்ணங்களை ஒடுக்க முடியும்.
5. பிரத்தியாகாரம்: மூச்சுப் பயிற்சியால் மனதில் எண்ணங்கள் அடங்கி மனம் ஒரு நிலைக்கு வந்தபின், மனதை வெளிச் செய்திகளில் போகவிடாமல் உள்நோக்கித் திருப்புதல்.
6. தாரணை: வெளியே செல்ல விடாமல் தடுத்த எண்ணங்களை, மூலாதாரம் முதலான ஆறு ஆதாரங்களில் நிறுத்தி ஒரே கவனத்துடன் இருத்தல்
7. தியானம்: தாரணை சித்திக்கப் பெற்றவுடன், தியானம் செய்வது சுலபம். முதலில் 15 நிமிடங்கள். பிறகு 30 நிமிடங்கள் என்று நேரத்தைக் கூட்டிக் கொள்ளலாம். 30 நிமிடங்கள் உட்கார்ந்தாலும் 5 முதல் 7 நிமிடங்கள் வரைதான் மனது தியானத்தில் வசப்படும். 30 நிமிடங்கள் அமர்ந்தால்தான் 5 நிமிட தியான அனுபவமாவது கிடைக்கும். எப்பொழுதும் குளத்தை தோண்டிக் கொண்டே இருக்கும் ஒருவன், எப்பொழுது அந்தக் குளத்திலிருந்து நீர் குடிப்பான்? தனது உடலில் சேற்றைக் கழுவுவான்? என்கிறார் துளசிதாசர் நூல்களைப் படித்துக்கொண்டே இருப்பதால் பேருண்மையை அனுபவிக்க முடியாது. மனதார நினைத்து தியானியுங்கள் என்பதுதான் இதன் பொருள்.
8. சமாதி: தினமும் இரண்டு அல்லது மூன்று முறை தியானம் செய்து பழகும்போது அதற்குண்டான அமைதி, மகிழ்ச்சி கிடைக்கும். அருளாளர்களுக்கும் சித்தர்களுக்குமே நிலைத்த சமாதிநிலை கிடைக்கும்.
எல்லாம் தானாகி இருந்திடினும் இஃதறிய
வல்லார் சிலர் என்பர் வாய்மை எல்லாம் கண்டவரே என்பது பாரதியின் கூற்று
சரணாகதி தத்துவம்: யோகம், தியானம் சிலருக்கு சாத்தியமில்லை என்றால், சரணாகதி தத்துவம் மூலம் இறைவனை அடைவதென்பது எளிமையான வழி பக்தி, வைராக்கியம், மன உறுதி இருந்தால் இந்த முறை சுலபம். இறைவனை சரணடைவதைத் தவிர வேறு வழியில்லை என்ற உணர்வு உறுதியாக நெஞ்சில் பதிந்தால் இறையுணர்வு எப்போதும் இருக்கும்.
மகாபாரதத்தில் திரவுபதியின் அனுபவம் இந்த உண்மையை எடுத்துக்கூறும் பலரும் நிறைந்த சபையில் துச்சாதனன் துகிலுரிந்தபோது அவளது செல்வாக்கோ படைபலமோ உதவவில்லை பலமும் வீரமும் புத்திக் கூர்மையும் மிக்க ஐந்து கணவர்களும் உதவ இயலவில்லை.
செயலற்ற நிலையில் கண்களை மூடி கிருஷ்ணா கிருஷ்ணா என்று உள்ளமும் உணர்வுகளும் நெகிழ தியானித்து, முழுமையாக கண்ணனிடம் சரணடைந்தபோது திரவுபதிக்கு கண்ணன் உதவினான் என்று பாரதத்தில் படிக்கிறோம். முழுமையாக சரணடையும் உணர்வு ஏற்பட்டுவிட்டால், நாள் முழுவதும் அருள் ஓட்டம் இருக்கும்.
தொட்டில் குழந்தைக்கு பாடும் தாலாட்டு ஆராரோ ஆரிரரோ
யார் யாரோ யார் இவரோ? என்ற வார்த்தைகள், சற்று மாறிய நிலைதான் ஆராரோ ஆரிரரோ.
நீ யாரோ நான் யாரோ என்று ஆராய வேண்டும் என்பதுதான் இதன் உட்கருத்து. நான், எனது என்ற வார்த்தைகளை ஆராய்ச்சி செய்தால் நிஜமான நான் என்பது எது என்ற உன்னத தத்துவம் புரியும். இதைத்தான் ரமணர், நான் யார் என்று ஆராய்ச்சி செய்தால் தெளிவு வரும், நான் என்பது சிவனைத் தவிர வேறில்லை என்கிறார். மிகவும் சிரமமான பயிற்சிதான் இது. இதை ஆராரோ என்ற எளிமையான வார்த்தைகளில் நமக்குப் புரிய வைத்திருக்கிறார்கள் நமது முன்னோர்கள்.
அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் என் இனிய வணக்கம் மற்றும் இந்த நாள் இனிய நாளாக உங்களுக்கும் தங்களின் குடும்பத்தினருக்கும் மிக சிறப்பாய் அமைய எல்லாம் வல்ல இறைவனை இத்தருணத்தில் வேண்டுகிறேன்- சாம்

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக