தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 7 மார்ச், 2019

"குழந்தையை திட்டவேமாட்டேன்" என்று சொல்கிறவரா...


"குழந்தையை திட்டவேமாட்டேன்" என்று சொல்கிறவரா நீங்கள் அப்படியெனில் நீங்கள்தான் இதை கட்டாயம் வாசிக்கவேண்டும்.

இப்பொழுது ஐரோப்பியதேசமொன்றில் மனோவியல் ஆலோசகராக இருக்கும் நண்பர் ஒருவரை சந்திக்கிறேன்.

வயது ஐம்பதைத்தாண்டியிருக்கும்.

திருமணம்செய்துகொள்ளவில்லை.
தனிக்கட்டை.

பேருந்துநிலையத்தில் வந்து காத்திருந்தார்.
இரவு எட்டுமணிவாக்கில் சந்தித்துப்பேசினோம்.

கையில் கத்தையாக செய்தித்தாள்களின் கத்தரிப்புகள்.

வழக்கமான குசல விசாரிப்புகளுக்குப் பிறகு அந்த கோப்பினை
கையில் கொடுத்தார்.
குழந்தைகளின் தவறானமுடிவுகள்பற்றிய செய்தித்துண்டுகள் அவை.

எப்பொழுதாவது இந்தியாவந்துபோகிறார்.

"தற்கால இந்தியக்குழந்தைகளின் மனநிலை"குறித்து
ஓர் ஆராய்ச்சிசெய்துகொண்டிருக்கிறாராம்.

அதற்கு தோதாக
கடந்த சிலநாட்களாக சேகரித்த செய்திகள் அவை.

நீலத்திமிங்கலவிளையாட்டால் ஏற்பட்ட தற்கொலைகளை
அவர் பொருட்படுத்தவில்லை.

அது உங்களை தற்கொலைசெய்யவைக்க திட்டமிட்டு, வற்புறுத்தித்தூண்டுகிறது’ என்றுசொல்லி அவற்றைத் தவிர்த்திருக்கிறார்.

மிகச்சாதாரணமாக விளையாடிக்கொண்டிருந்த
குழந்தை ஏன் தவறானமுடிவெடுக்கிறது என்பதுதான் முக்கியமான கேள்வியாக இருந்தது.

கடந்த பதினைந்துநாட்களுக்கு முன்பான செய்தி ஒன்றை காட்டினார்.

டெங்குகொசுவொழிப்பு விழிப்புணர்வுக்காக தெருவைச்சுத்தம்செய்துவிட்ட
வீடுதிரும்பியிருக்கிறான்
பனிரெண்டு வயதுப் பையன்.

‘ஏண்டா உனக்கு ஏதாச்சும் காய்ச்சல் வந்துட்டா என்னடா பண்ணுறது?’ என்று ஏதோ சொல்லி அம்மா திட்ட,
அறைக்குள் தூக்குப்போட்டுக்கொண்டான்.

இப்படி பல செய்திகள் இருந்தன. மனம் பாரமாக இருந்தது. அவற்றை மூடிவைத்துவிட்டு சில வினாடிகள் அமர்ந்திருந்தேன்.

‘என்ன சொல்லுறீங்க?’ என்று கேட்டார்.

அமைதியாக இருந்தேன். மிக நுணுக்கமானவிஷயம் இது.

குழந்தைகளின் தற்கொலை என்பது அங்குமிங்குமாக கண்களில் பட்டிருக்கும். பொருட்படுத்தியதாக நினைவில்லை.

பதினைந்துமுதல் இருபத்தொன்பதுவயது வரையிலானவர்கள் இந்தியாவில்தான் மிக அதிக அளவில் தற்கொலைசெய்துகொள்கிறார்களாம்.

தண்ணீரை குடித்துவிட்டு
'இந்தக் காலத்துக் குழந்தைகளுக்கு தடிச்சதோல் இல்லை’ என்றார்.

எதைச்சொன்னாலும் அவர்களால் பொறுத்துக்கொள்ளமுடிவதில்லை.
#பெரியவர்கள்தான் முக்கியக்காரணம் என்றார்.

வாஸ்தவமான சொல்.

குழந்தைகளைத்திட்டுவதில்லை என்பதை பல பெற்றோர்கள் பெருமையாகச்சொல்லிக்கொள்வதுண்டு.
நானும் கூட அப்படித்தான்.

ஏதேனும் ஒரு காரணத்துக்காக திட்டும்போது....
திட்டக்கூட வேண்டியதில்லை!
கோமாளி, முட்டாள் என்று ஏதேனும் கேளிச்சொல்லை பயன்படுத்தினால் கூட பொலபொலவென்று கண்ணீர் வந்துவிடும் மகனுக்கு.

‘இவன் என்ன இப்படியிருக்கான்?’ என்று அவ்வப்போது யோசித்திருக்கிறேன். ஆனால் தீர்வுகுறித்து சிந்தித்ததில்லை.

மனோவியல்நிபுணர்,
‘உங்க தலைமுறையில் இப்படி இருந்தீங்களா?’ என்றார்.

இல்லை.

அம்மா கடுமையாகத்திட்டுவார்.
ஆசிரியர் அடிப்பார்.
அப்பா எப்பொழுதாவதுதான் அடிப்பார் ஆனால் செமத்தியான அடியாக இருக்கும்.

அடி வாங்குவதும் வசைச்சொற்களைக் கேட்பதும் சலித்துப் போய்விடும்.
எப்படி ஏய்ப்பது, அடிவாங்காமல் தப்பிப்பது எப்படி, வசவுக்கு வாய்தாவாங்குவதற்கான வழிமுறைகள் குறித்தெல்லாம்தான் மனம் கணக்குபோடும்.

Too sensitive என்றெல்லாம் இருந்ததேயில்லை.
உண்மையாக அழுததைக்காட்டிலும்
அடிவாங்குவதிலிருந்து தப்பிப்பதற்காக பாவனையாக அழுததுதான் அதிகம்.

இன்றைய குழந்தைகள் அப்படியில்லை.

மனிதர்களுடன் உரையாடுவதைவிடவும் திரைகளுடன்தான் அதிகம் உரையாடுகிறார்கள்.

கணினித்திரை, அலைபேசித்திரை, தொலைக்காட்சித்திரை என எதுவும் குழந்தைகளுக்கு மனிதர்களின்மனங்களை சொல்லித்தருவதில்லை.

அவை குழந்தைகளை
மேலும்மேலும் ரத்தமும் சதையுமான மனிதர்களிடமிருந்து அந்நியப்படுத்துகின்றன.

சக குழந்தைகளுடன் விளையாடுவதும் சண்டையிடுவதும் வெகு அரிது.

பள்ளிகளிலும் கண்டிப்புகள் இருப்பதில்லை.
பள்ளிகளில் கண்டிப்பதை அரசாங்கமே
தடைசெய்கிறது.

அம்மா அப்பாவும் செல்லம் என்ற பெயரிலும் தடித்தசொற்களைப் பயன்படுத்துவதில்லை.

நண்பர், தனது செய்திச்சேகரிப்புகளை சுட்டிக்காட்டி
'இந்த மொத்தச்செய்திகளுக்கும் ஆதாரப்புள்ளின்னு இதைத்தான் சொல்வேன்’ என்றார்.

அவர் மிக இலாகவமாகவும் நிதானமாகவும் பேசினார். என்ன இருந்தாலும் மனோவியல் நிபுணர். அவர் பேசுவதை என்னால் மறுக்க முடியவில்லை. அவர் சொல்வதில் உண்மை இல்லாமல் இல்லை.

Too sensitive to everything என்பது நல்லதில்லை. கோபமும் வசவும் மனிதர்களுக்குரிய குணங்கள்.

அதை குறைந்தபட்ச அளவிலாவது குழந்தைகளிடம் காட்டுவதும், அவர்களை திட்டுவதும், வசவுகளுக்கு அவர்களைப் பழக்குவதும் தவறில்லை என்பது அவரது வாதம்.

வீட்டில் குழந்தைகளுடன் இருக்கும்போது
ஒருமுறை அழைத்துப்பார்த்தால் குழந்தைகளின் கவனம் நம் பக்கம் திரும்பவில்லையெனில்
‘டேய்’ என்று சற்றே அதட்டுவதில் தவறொன்றுமில்லை.

நமக்கே அது கடினமாகத்தான் இருக்கும். குழந்தைகளுக்கும் அந்த அதட்டலை ஏற்றுக்கொள்வது கடினம்தான்.

முதல் ஒன்றிரண்டு முறை அழுவார்கள். சுணங்குவார்கள்.
அது பிரச்சினையில்லை.
இரண்டாம் மற்றும் மூன்றாம் முறை அவர்களுக்குப் பழகிவிடும்.

நம்முடைய கோபத்தை நாம் மறைத்துக்கொண்டு குழந்தைகளிடம் எப்பொழுதுமே காட்டாமல் இருந்துவிட்டு
நம்மையும் மீறி ஏதேனும் தருணத்தில் கொட்டிவிடும்போது
அந்த பிஞ்சுகளால் அதனை
தாங்கிக்கொள்ளமுடிவதில்லை.
விபரீதமுடிவுகளை எடுக்கிறார்கள்.

பதின்பருவத்துக்குழந்தைகள்தான் (Teen age) தற்கொலை என்ற உச்சகட்ட முடிவுகளை அதிகம் எடுக்கிறார்கள்.

அவர்களது வயது அப்படி.
தம்மை பெரியவர்களாக நினைத்துக்கொள்கிறார்கள்.

சென்சிடிவ்வாக வளர்ந்துநிற்கும் அவர்களால்
அம்மாவும் அப்பாவும் திட்டுவதை பொறுத்துக்கொள்ளமுடியாமல் அவசரப்பட்டுவிடுகிறார்கள்.

ஆரம்பத்திலிருந்தே ‘அம்மா திட்டுவாங்க’ ‘அப்பா திட்டுவாங்க’ என்ற மனநிலையை உருவாக்காமல் விட்டுவிடுவது பெற்றோரின் முக்கியமான தவறாக இருக்கிறது.

அப்படி குழந்தைகளை உருவாக்குவதுங்கூட
ஒருவகையிலான அவர்களின்
மனவழுத்த மேலாண்மைதான்.

‘யோசிச்சுப்பாருங்க’ என்றார்.

அவர் சுட்டிக்காட்டியது மிக முக்கியமான விஷயமாகத் தெரிந்தது.

இப்படியொரு கோணத்தில் யோசித்ததில்லை.

உணவை முடித்துவிட்டு பேருந்தில் ஏறி அமர்ந்தபிறகும் இதுதான் மனதுக்குள் உலாத்திக்கொண்டிருந்தது.

நீங்களும் யோசித்துப்பாருங்கள்..!


nuvaijur Mayuran
 June 12, 2018 · 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக