தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 3 ஜனவரி, 2019

சபரிமலைக்கு இருமுடி சுமந்து மலையேறச் சொல்வது ஏன்?


சபரிமலை யாத்திரைக்கு செல்லும் அனைவரும் தலையில் இருமுடி சுமப்பது வழக்கமான முறைகளில் ஒன்றாகும். உண்மையில் இருமுடி சுமப்பதற்கு பல காரணங்கள் புராணங்களில் சொல்லப்படுகின்றது.
இருமுடி சுமப்பதற்கு ஓர் புராணக்கதை ஒன்றும் சொல்லப்படுகின்றது.
பந்தளராஜன் மனைவிக்கு தலைவலி ஏற்படுகிறது. உடனே புலிப்பாலால் தலைவலி தீரும் என பொய்க்காரணம் காட்டி ஐயப்பனை காட்டுக்கு அனுப்புகின்றனர்.
வளர்ப்புத் தந்தையான பந்தள மன்னன் மிக வருத்தத்துடன் மகனை வழியனுப்பும் போது, காட்டில் உண்பதற்காக பல நாட்கள் கெட்டுப்போகாமல் இருப்பதற்காக நெய்யில் தயாரித்த சில உணவு வகைகளை ஒரு முடியாகக் கட்டினான்.
அதே சமயம், சிவபக்தனான பந்தள மன்னன், முக்கண்ணனான சிவனின் அம்சம்போல் ஒரு தேங்காயை மற்றொரு முடியில் வைத்துக் கொடுத்தான். அந்த இருமுடிகளையும் இணைத்து திருமுடிமேல் ஏந்திய சிறுவன் மணிகண்டன், புலிப்பால் கொண்டுவர காட்டுக்குச் சென்றான்.
இருமுடியை முதன்முதலில் தலையில் ஏற்றியது ஸ்ரீஐயப்பன் என்று புராணம் கூறுகிறது.
இவ்வாறு ஐயப்பன் செய்தது போலவே, இருமுடியை தலையில் தாங்கி ஐயப்பனை வழிபடும் முறையாக அதுமாறி, நாளடைவில் நிலைத்தும்விட்டது.
மலைமீது பல இடங்களில் செங்குத்தாகவோ குறுகிய ஒற்றையடிப்பாதையிலோ ஏறவேண்டியிருக்கும். அந்த சமயத்தில் தலையைத் திருப்பிப் திருப்பி பார்ப்பது கவனத்தை திசைதிருப்பி விபத்தினை ஏற்படுத்திவிடக்கூடும் என்பதாலேயே இருமுடிப்பையினை தலைமீது தான் சுமக்க வேண்டும் என்ற கட்டாயத்தை ஏற்படுத்தினார்கள்.
அப்படிச் சுமப்பதால் தலையை சட்டெனத் திருப்பிவிடாமல் பாதைமீது கவனம் செலுத்தி நேராக நடக்க முடியும்.
இன்று பயணப்பாதை சீராக்கப்பட்டு வசதிகள் பல வந்துவிட்டாலும், மனதை ஒருமுகப்படுத்தி கவனம் திசைதிரும்பாமல் செல்ல இது அவசியமாக இருக்கிறது.
எல்லாமே மாறிவிட்டாலும் சபரிகிரி வாசனின் சன்னதி முன் இருக்கும் பதினெட்டுப் படிகள் செங்குத்தாக, குறுகலாக, வழுக்கலாகவே இன்றும் இருக்கிறது.
தொன்மை மாறாத தெய்வீகம் நிறைந்த அந்தப் படிகளில் ஏறும்போது ஐயனைத் தவிர வேறு எதுவும் கவனத்தில் இருக்கக் கூடாது. அப்படி இருக்கவேண்டுமானால் இருமுடி பக்தர் தம் திருமுடியிலிருப்பது அவசியம்.
இன்னொரு முக்கியமான விஷயம், சபரி யாத்திரையின்போது, சன்னதிக்குச் செல்லும் வரை, இருமுடியின் பின்புறப்பையில் இருப்பவை குறைந் துகொண்டே வரும்.
முன்புறம் இருப்பவை அப்படியே இருக்கும். இது, இறைவனை நெருங்க நெருங்க தலைகனம் குறைந்து, பக்தி மட்டுமே நிறைந்திருக்கும் என்பதன் அடையாளம் இதுவே நாம் இருமுடியை எடுத்து செல்லும் காரணம் சொல்லப்படுகின்றது.
- Dina Malar

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக