தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 4 மே, 2018

ஏலியன்களால் கட்டப்பட்ட கோவில்? எல்லோராவின் விலகாத மர்மங்கள்


உலகின் அதிசயங்கள் என்று பட்டியலிடப்பட்டிருக்கும் கட்டிடங்கள் பற்றி அதிசயித்து தீராத மனித இனத்திற்கு தனக்கு அருகிலேயே அமைந்திருக்கும் அதிசயங்கள் பற்றி அறிந்து கொள்ள எப்போதும் ஆர்வம் இருந்ததே இல்லை.
அந்த வகையில் இந்தியாவில் அமைந்துள்ள ஒரு அதிசயமான கோயில் பற்றியும் அதன் கட்டமைப்பு பற்றியும் தெரிந்து கொள்ளுங்கள்.
மஹாராஷ்டிராவில் அவுரங்காபாத் மாவட்டத்தில் இருக்கும் எல்லோராவில் அமைந்துள்ள கைலாசநாதர் கோயில்தான் இத்தகைய அசாத்திய கட்டமைப்பை கொண்டுள்ளது.
இங்கு உலக புகழ் பெற்ற நூற்றுக்கும் மேற்பட்ட குகை கோயில்கள் உள்ளன, அதில் பதினாறாவது குகை கோயில்தான் கைலாசநாதர் கோயில்.

எட்டாவது நூற்றாண்டில் முதலாம் கிருஷ்ணா மன்னரால் கட்டப்பட்ட இக்கோயில் தற்போதுள்ள மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பதற்கான சில காரணங்களை பார்ப்போம்.
மிக பிரம்மாண்டமான இந்த கோயில் பார்ப்பதற்கு ஒன்றின் மேல் ஒன்றாக கற்களை அடுக்கி கட்டப்பட்டிருப்பது போல தோன்றினாலும் இதன் கட்டுமானம் அப்படி நடக்கவில்லை என்பதே உண்மை.
ஒரு முழு மலையை அப்படியே குடைந்து முழு கோயிலாக உருமாற்றியிருக்கிறார்கள். உலகில் உள்ள அனைத்து குடவரை கோயில்களிலும் கோயிலின் முன்புறத்திலிருந்து செதுக்கி உள்வரை குடைந்து செல்வதுதான் வழக்கம்.
ஆனால் இந்த கைலாசநாதர் கோயிலில் மலையின் உச்சியிலிருந்து தொடங்கி கீழ்நோக்கி குடைந்து செதுக்கி இருக்கிறார்கள். இதன்மூலம் இதனை கட்டிய பொறியாளர்களின் அறிவுக்கு கூர்மையும் திட்டமிடலும் எவ்வளவு துல்லியமாக இருந்திருக்கும் என்பது புலப்படுகிறது.

நூறடிக்கும் மேல் உயரமுள்ள பிரம்மாண்ட தூண்கள் பெரிய பாறைகளை உன்றன் மேல் ஒன்றாக அடுக்கி உருவாக்கப்படவில்லை, மாறாக தூணின் நான்கு பக்கமும் உள்ள மிக கடினமான பாறைகளை மேலிருந்து நேர்த்தியாக வெட்டி அந்த பாறைகளை அகற்றி இந்த தூண்கள் நிறுவப்பட்டிருக்கின்றன.
இந்த தூண்களின் பிரம்மாண்டத்தை நாம் அறிந்து கொள்ள அதன் அருகில் நிற்கும் மனித உருவங்களின் அளவே சாட்சி.

இந்த கோயிலை முழுமையாக கட்ட 4 லட்சம் டன் பாறைகளை அப்புறப்படுத்தி உள்ளதாக ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.
18 வருடத்தில் கட்டி முடிக்கப்பட்ட கோயில் இவர்களது கணக்கின்படி பார்த்தால் அங்கிருந்த தொழிலாளர்கள் அத்தனை பேரும் ஒரு நாளைக்கு இடைவெளி இன்றி, 12 மணிநேரம் தொடர்ந்து இப்பாறைகளை வெட்டி எடுத்திருந்தாலும் ஒரு நாளைக்கு 65 டன் வரை அப்புறப்படுத்தி இருக்க வேண்டும்.


இன்றிருக்கும் நவீன இயந்திரங்கள் பயன்படுத்தினால் கூட இந்த எண்ணிக்கை அளவிற்கு அப்புற படுத்துவது என்பது நடக்காத காரியம். இந்நிலையில் அந்த கால மனிதர்களுக்கு இது எவ்வாறு சாத்தியப்பட்டது?
இதற்கடுத்த வியப்பு என்னவென்றால் வெட்டி நீக்கப்பட்ட அந்த பாறைகள் அனைத்தும் அந்த சுற்று வட்டாரத்தில் எங்குமே காணக் கிடைக்கவில்லை.
வேறு கட்டிடம் எதுவும் கட்ட பயன்படுத்தவும் இல்லை என்பதும் உறுதியாகிற நிலையில் அந்த மலையின் மிச்சங்கள் எங்கிருக்கும் எப்படி மாயமானது என்பது இன்னமும் மர்மமாகவே உள்ளது.

மேலும் இங்குள்ள இணைப்பு பாலம் மழை நீர் சேமிப்பு குழாய்கள் , வடிகால்கள், எண்ணிலடங்காத குகைகள் , நுட்பமான சிற்ப வேலைப்பாடுகள், தனித்தனியே உள்ள பால்கனி அமைப்புகள், நேர்த்தியாக அமைக்கப்பட்ட படிக்கட்டுகள் இவை அனைத்தையும் முன்கூட்டியே தீர்மானித்து அதற்கான வரைபடம் நிறுவி ஒரு மலையையே மேலிருந்து கீழாக செதுக்கி உருவாக்குவது என்பது மனித சக்திக்கு அப்பாற்பட்டது என்பதுதான் நிதர்சனம்.

1682ஆம் ஆண்டு அவுரங்கசீப் ஆயிரத்துக்கும் மேற்பட்ட படை வீரர்களை கொண்டு இந்தக் கோயிலை முற்றிலுமாக அழிக்க முயற்சித்தார். அதற்காக மூன்று ஆண்டுகள் இரவு பகலாக இந்த படைகள் வேலை செய்தன.
இருந்த போதிலும் இதில் ஒரு சிறிய பகுதியை மட்டுமே அவர்களால் சேதப்படுத்த முடிந்தது என்றால் அந்த காலத்தில் இந்த கோயிலை நிறுவிய பொறியாளரின் திறமைகள் மற்றும் கோயில் அமைந்த கருங்கல்லின் உறுதி ஆச்சர்யப்படுத்துகின்றன.

இந்த பிரம்மாண்ட கோயிலை சுமார் 1000 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த அக்கால மனிதர்கள் சாதாரண உளி சுத்தி மட்டும் வெட்டு கருவிகளை கொண்டு, வெறும் 18 ஆண்டுகளில் உருவாக்கியது எப்படி என்ற கேள்விக்கு ஆய்வாளர்களிடம் கூட இன்றளவும் பதில் இல்லை.
இந்த மாதிரி பல வகையான ஆச்சர்யங்கள் கொண்டதால் இந்த கோயில் கட்ட வேற்று கிரக வாசிகள் உதவி செய்திருக்கலாம் என்று நம்பப்படுகிறது.



http://news.lankasri.com/spiritual/03/177993?ref=ls_d_others

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக