தொலைக்காட்சி!!

Search This Blog

Sunday, November 5, 2017

விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் எங்குள்ளது என்று தெரியுமா?


இலங்கையின் வட மாகாணத்திலுள்ள யாழ்ப்பாண மாவட்டத்தில் வடமராட்சிப் பகுதியில் பருத்தித்துறைப் பிரதேசத்தில்வல்லிபுரம் எனும் ஊரில் உள்ள பிரபலமான விஷ்ணு ஆலயம் ஆகும்.
வரலாற்றுப் பெருமை கொண்ட இவ்வாலயம் மூர்த்தி தலம், தீர்த்தம் ஆகிய மூன்றும் ஒருங்கமையப்பெற்ற புராதன தலமாகும். இவ்வாலயத்தின் மூல மூர்த்தியாக விஷ்ணுவின் சுதர்சனச் சக்கரம் உள்ளது.
இறைவன் ஒருவனே என்ற கருத்தின் அடி நாதத்தை வெளிப்படுத்தும் வகையில் சிவனும் திருமாலும் ஒருவரே என்ற உண்மையை வெளிப்படுத்தும் திருத்தலமாக இக்கோவில் விளங்குகிறது.

சிறப்பு
யாழ்ப்பாணத்தில் நாகர்களுடைய ஆட்சி கி.பி. 303 இலும் லம்பகர்ணர் ஆட்சி 556 இலும் முடிவுக்கு வந்தது என்பது வரலாற்று ஆசிரியர்களின் கருத்தாகும். இப்பகுதிகளில் குடியேறிய படை வீரர்களின் ஆதிக்கம் வளர்ச்சியடையத் தொடங்கியபோது வட மறவர்கள் ஆட்சி செய்த இடம் வடமராட்சி எனப்பட்டது.
தொண்டை நாட்டின் வடக்கில் வசித்த மக்களில் ஒரு பகுதியினர் இங்கு குடியேறியதாகவும் அவர்கள் குடியேறிய பிரதேசத்திற்கு வடமராட்சி என்று பெயரிட்டதாகவும் தெரியவருகிறது.
அக்குழுவின் தலைவனாக வல்லியத்தேவன் என்பவன் இருந்ததாகவும் அவனின் பெயரைக் குறிக்கும் முகமாக இக்கிராமத்திற்கு வல்லிபுரம் என்று பெயரிடப்பட்டதாகவும் கூறப்படுகிறது
வல்லி என்ற சொல்லுக்கு ஆயர்பாடி என்ற ஒரு கருத்தும் புரம் என்றால் கோவில் என்றும் பொருள் கொள்ள முடியும். எனவே வல்லிபுரம் என்பது ஆயர்பாடிக் கோவிலாகவும் கண்ணன் வளர்ந்த இடமாகவும் கொள்ளப்படுகிறது.

வரலாறு
வல்லிபுர ஆழ்வார் கோவிலின் ஐதீக வரலாறு அற்புதமானதாகும். இக் கோவில் தீர்த்த உற்சவம் நடைபெறும் வங்கக் கடல் பகுதியிலே அதிசயமான மச்சமொன்று துள்ளிக்குதித்து, ஆரவாரம் செய்து மக்களை அதிசயத்தில் ஆழ்த்தியது.
கற்கோவள கடலோடிகள் அந்த மச்சத்தைப் பிடிப்பதற்கு எடுத்த முயற்சிகள் கை கூட வில்லை. இவ்வேளையில் வராத்துப் பளையைச் சேர்ந்த நாகசாபம் பெற்ற லவல்லி எனப்படும் வல்லி நாச்சி பயபக்தியுடன் தவமிருந்தார். அவர் கனவில் தோன்றிய பகவான் சிலவற்றைக் கூறி மறு நாள் குறித்த இடத்திற்கு வருமாறு பணித்தார். மறு நாள் காலை அங்கு சென்று கரையில் உட்கார்ந்து பகவானின் திருநாமங்களை உச்சரித்தார்.
அப்போது அந்த மச்சம் கடலில் இருந்து அவர் மடியில் துள்ளிக் குதித்து அழகிய குழந்தையாக மாறியது. கண்ணன் உதித்தான் என ஆரவாரம் செய்த அடியவர்கள் குழந்தையை பல்லக்கில் வைத்து தூக்கிச் சென்றனர். களைப்புற்ற மக்கள் ஓர் இடத்தில் பல்லக்கை வைத்து இளைப்பாறினர்.
பின்னர்பல்லக்கைத் தூக்க முயற்சி செய்தபோது பல்லக்கு மாயமாக மறைந்தது. சக்கரம் ஒன்று தோன்றியது. எனவே அம்மக்கள் அவ்விடத்தில் ஆலயம் ஒன்றை அமைத்து அச்சக்கரத்தை வழிபடத் தொடங்கினார்கள். இக்கதை ஐதீகக் கதையாகக் காணப்படுவதனால் அன்று தொட்டு இன்று வரை செவி வழியாகப் பேணப்பட்டு வருகிறது.

திருவிழாக்கள்
புரட்டாதி மாதம் பூரணைத் திதியில் தீர்த்த உற்சவம் நிகழக் கூடிய வகையில் 15 நாட்கள் திரு விழா நடைபெறும் 16 ஆம் நாள் கடலாடு தீர்த்த உற்சவம் இடம் பெறும் அடுத்த நாள் பட்டுத் தீர்த்தம் நிகழ்த்தப்படும்.
இக்கோவில் ஆவணி மாதம் கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்படும்.
நாராயணனின் நரகாசுர சம்காரம் தீபாவளி தினத்தன்றும், மார்கழி மாதம் முழுவதும் காலையில் விசேட பூசைகள் நடைபெறும்.
ஞாயிற்றுக் கிழமையே வல்லிபுர ஆழ்வாருக்கு சிறப்பான நாளாகும்.
http://news.lankasri.com/spiritual/03/136105

No comments:

Post a Comment