தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, June 29, 2017

மட்டக்களப்பில் ஐந்தாவது பெண் குழந்தையுடன் நாகபாம்பும் இரட்டையாகப் பிறந்த வரலாற்று அதிசம்

மட்டக்களப்பு மாவட்டத்தில் சிறப்புற்று விளங்கும் ஆலயங்களில், பண்டாரியாவெளி நாகதம்பிரான் ஆலயமும் பிரசித்தி பெற்றது.
மட்டக்களப்பில் இருந்து தெற்கே மண்முனைத் துறையினூடாக சுமார் 19 கிலோ மீற்றர் தூரத்தில் பண்டாரியாவெளி கிராமத்துக்கு மேற்கே பரந்த நெல்வயல் சூழ்ந்த பெரும் நிலப்பரப்பின் மத்தியில் படையாண்ட குளத்து வயல்களின் கிழக்கே தனியாக நாகட்டு என அழைக்கப்படும் பரந்த இடத்தில் அமைந்துள்ளது. இவ் ஆலயம் இற்றைக்கு அறுநூறு வருடங்களுக்கு
முன்பிருந்தே ஆரம்பிக்கின்றது என்பதனை வரலாறு கூறுகின்றது.
மட்டக்களப்பிலே தீர்த்தக்கரை என்ற சிறப்பு பெயர் பெறுவது மாமாங்கேஸ்வரர் தீர்த்தோற்சவம். தேரோட்டம் என்ற சிறப்பை பெறுவது கொக்கட்டிச்சோலை தான்தோன்றீஸ்வரம், நாககட்டுப் பொங்கல் அல்லது தேசத்துப்பொங்கல் என்ற பெருமையினை உணர்த்துவது பண்டாரியாவெளி நாகதம்பிரான் பொங்கலாகும்.
பண்டாரியாவெளி நாகதம்பிரான் தோற்றம்:
மட்டக்களப்பு நாட்டை குணசிங்க மன்னன் கி.பி.398 இல் ஆட்சி செய்தான். அக் காலத்தில் கலிங்க ஒரிசா தேசத்தில் இருந்து உலக நாச்சி என்ற பெண்ணரசி வந்து மண்முனைப் பகுதியை குணசிங்க மன்னனிடம் நிந்தகமாய் பெற்று குடியேற்றத்தை அமைத்து ஆட்சி செய்தாள் எனக் கல் வெட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது. இக் காலத்தில் தான் மண்முனையில் இருந்த கலிங்க குலப் பெண்ணுக்கு ஐந்து பெண்குழந்தைகள் பிறந்தனர்.
ஐந்தாவது பெண் குழந்தையுடன் ஒரு சத்திரிய வம்ச நாகபாம்பும் இரட்டையாகப் பிறந்தது. பிள்ளைக்கு முலைப்பால் கொடுத்தும் நாகத்துக்கு பால் கறந்து ஊட்டியும் வளர்த்தனர். நாகத்துடன் அக் குழந்தைக்கு நாகம்மை எனப் பெயரிட்டனர்.
மூத்த சகோதரிகள் நால்வரும் வாழ்க்கைப்பட்டு கோறளைப்பற்று மற்றும் இடங்களிலும் தத்தங்கணவன்மார்களுடன் சென்று வாழ்வராயினர். காரணம் மண்முனை தன்சிறப்பிழந்து, வளங்குன்றியிருந்தமையும் கலிங்ககுலப் பெண்களுக்கு விவாகத் தொடர்பு படையாட்சி குலத்தவருடன் தான் என்ற நியதியும் என ஊகிக்க இடமுண்டு. தாயதி முதுச சொத்தான தம் வீட்டில் முதுமையடைந்த தாயும் நாகம்மையும் உடன் பிறந்த நாக பாம்பும் வாழ்ந்து வந்தனர். நாகம்மை திருமணம் முடித்து ஒரு குழந்தைக்கு தாயானாள் எனினும் இல் வாழ்க்கை தொடரவில்லை.
கணவன் இறந்ததும் தாயுடன் கைம்பெண்ணான நாகம்மையும் தனது ஒரு பிள்ளையும் நாகபாம்பும் அவ்வீட்டில் வாழ்ந்தனர். சில காலம் செல்ல முதுமையுற்ற தாயும் மரணமானார். தாய் இறந்ததும் தாயார் சொத்துக்கள் வெண்கலம், வெள்ளி, பொன் முதலிய வீட்டுப்பொருட்கள் பங்கிடுவதற்காக மூத்த சகோதரர்கள் நால்வரும் வந்தனர்.
வீட்டில் இருந்த எல்லாப் பொருட்களையும் ஐந்து பங்காக பிரிக்க முற்பட்டனர். அப்போது பாம்போடு கூட இரட்டையாக பிறந்த நாகம்மை தன்னுடன் பிறந்த நாகத்திற்கும் ஒருபங்கு வேண்டும் என வாதாடினாள். அதனை எவரும் ஏற்கவில்லை.
பாம்புக்கு பொருட்கள் எதற்கு என மறுத்துவிட்டனர். அதனை உணர்ந்தது போல் நாகம் சீறி படம் எடுத்து ஆடி ஐந்து பங்குகளையும் ஒன்றாக்கியதாம். முடிவில் மூத்த சகோதரிமார்களுக்கும் நாகம்மைக்கும் வாக்குவாதம் ஏற்பட்டு பெரிய கலவரமாக மாறியது.
இதனால் மனமுடைந்த நாகம்மை தான் குல தெய்வமாக வழிபட்டு வந்த கண்ணகியம்மன் சிலையை ஒரு ஓலைப்பெட்டியில் வைத்து தலைமீது சுமந்தபடி தனது மூன்று வயது குழந்தையுடன் வெளியேறிய போது நாகமும் பின் தொடர்ந்ததாம். மண்முனையில் இருந்து வாவியை கடந்து இக் கரையில் கல்லடித்துறையென இன்றும் அழைக்கப்படும் துறையின் ஊடாக வந்தாள்.
மண்முனையில் இருந்து கல்லடித் துறையில் வந்து இறங்கிய நாகம்மையும் பிள்ளையும் சேவகப் பற்று வயலின் ஊடாக நடந்து வந்து கொண்டிருந்தனர். மகிழடித்தீவு கிராமம் அப்போது குடியடர்த்தி அற்றதாகவும் இடையிடையே காடுகள் செறிந்தும் கிராமத்தைச் சுற்றி நீர் நிலைகளும் இருந்ததால் காட்டெருமைகள் ஒரு பருவகாலத்தில் கூடுதலாக நடமாடுவது வழக்கம். அப்பருவகாலமே நாகம்மையும் வந்த காலமாகும்.
இப் பெண்ணும் முன் சொன்ன சேவகப்பற்று வயலின் ஊடாக வந்து கொண்டிருந்தாள். மகிழடித்தீவு கிராம வாசிகள் காடடெருமைக் கன்றுகளை பிடித்து பெரு மர நிழல்களிற் கட்டி வைத்து மரத்தின் மேல் ஏறியிருந்து கன்றுக்கு பால் கொடுக்க வந்ததும் கயிறு போட்டுத் தாய் எருமைகளைப் பிடிப்பது வழக்கம்.
இந்த வழியாக இப் பெண் பிள்ளையுடன் வருவதை மாடு பிடிக்க மரத்தின் மேல் ஏறியிருந்தவர்கள் கண்டு அவ்வழியே வர வேண்டாம் என்றும் எருமைகள் குத்திக் கொன்றுவிடும் விலகி வேறு வழியே வருமாறு சத்தமிட்டு சைகை காட்டினார்கள். நாகம்மை அதனைப்பொருட்படுத்தாமல் நடந்து வந்தாள். அப்பொழுது ஒரு பெரிய காட்டெருமை அப்பெண்ணை எதிர்த்து வந்தது.
உடனே அப்பெண் கண்ணகியம்மன் இருந்த சிலை இருந்த பெட்டி தலையில் இருக்க தன் இடுப்பில் இருந்த குழந்தையை கீழே இறக்கிவிட அக் குழந்தையும் பயத்தினால் தாயின் கால்களைப் பிடித்தது. தாய் தன்னை நெருங்கி வந்த காட்டெருமையின் கொம்புகளிரண்டையும் தனது இருகைகளாளும் பிடித்தாள்.
எருமை அப்படியே அசயாமல் நின்றது. இதனைக்கண்டு மக்கள் வியந்தனர். அத்துடன் இப் பெண் ஒரு தெய்வப்பிறவியாக இருக்க வேண்டும் என நினைத்து தலையில் இருக்கும் பெட்டிக்குள் என்ன இருக்கிறது என வினாவினர். அது தமது குல தெய்வமான கண்ணகி அம்மன் சிலை என நாகம்மை பதிலளித்தாள். மகிழடித்தீவு மக்கள் அவளை வணங்கி அச்சிலையைத் தம்மிடம் தரும்படி கோரிப்பெற்றனர். அச்சிலை மகிழடித்தீவு மக்களின் வழிபாட்டுத் தெய்வமாயிற்று.
அப் பெண்ணும் (நாகம்மையும்) அதன்கூட வந்த பாம்பும் நேராக போய்க்கொண்டிருக்கும் வேளையில் படையாண்ட குளத்து வயல்களின் கிழக்கு எல்லைக்காட்டிலே உள்ள ஒரு புற்றில் பாம்பு புகுந்து கொண்டது. அதன் காரணமாகவே இக் கட்டு நாககட்டு என இன்றும் அழைக்கப்படுகிறது. நாகம்மையும் பிள்ளையும் கடுக்காமுனை கிராமத்தவர் உதவியுடன் வீடு அமைத்து வாழ்ந்து வந்தனர். இவரது வழி வந்த சந்ததியினர் கொம்பிக்கிழவி வகுத்துவார் என அழைக்கப்படலாயினர்.
நாகதம்பிரான் ஆலயம் அமைக்கப்படலும் உருவ வழிபாடும் :
புற்றில் புகுந்த நாத்திற்கு நாகம்மை நாள் தோறும் அதற்குரிய உணவாக கோழிமுட்டை பால் என்பன வைத்துப் பராமரித்து வந்தாள். அவ்வழக்கம் இன்றும் நாகதம்பிரானுக்குரிய பொங்கல் பூசைகள் முடிந்ததும் குருக்கள் பால் பழம் வைத்தல் நிகழ்வு ஒவ்வொரு கிழமையிலும் வரும் வெள்ளி செவ்வாய் ஞாயிறு ஆகிய தினங்களிலும் மற்றும் விசேட தினங்களிலும் இடம்பெறும்.
இப் பால் பழம் வைத்தல் நிகழ்வு வருடாந்த உற்சவ காலங்களில் ஆனிமாதத்தில் வரும் உத்தர நட்சத்திரத்தில் மிகவும் விமர்சையாக நாகதம்பிரானுக்கு பொங்கல் செய்து பால் பழம் வைக்கும் கைங்கரியமான புனித நிகழ்வு ஆண்டு தோறும் நடைபெற்று வருகின்றது.
இவற்றை ஆரம்பத்தில் நாகம்மைதான் செய்து வந்தனர். அதனடிப்படையில் தான் இன்றும் அந் நிகழ்ச்சி அச் சந்ததியினராலேயே செய்யப்பட்டு வருகின்றது. இதனைக் கண்ணுற்ற ஏனைய மக்களும் தமக்கு எதுவித இடையூறும் வராமல் நேர்த்தி வைத்து நாகதம்பிரானுக்கு பொங்கல் செய்து வந்தான்.
அதன் பின் அப்புற்றருகில் பந்தலிட்டு ஆனி உத்தரத்தில் பொங்கல் பூசைகள் செய்தும் அதனையடுத்து வரும் வெள்ளிக்கிழமை பொதுவான தேசத்துப் பொங்கல் என மக்கள் பொங்கல் செய்து படைத்து பூசித்து வந்தனர். இது நாகட்டுப் பொங்கல் என இன்றும் அழைக்கப்படுகின்றது.
இவ்வாறு பொங்கல் செய்து வழிபட்டு வரும் காலத்தில் நாகம் குடி கொண்ட புற்று மக்கள் மத்தியில் மிகுந்த நம்பிக்கையை ஏற்படுத்தியதால் நாக தம்பிரானுக்கு சிலை வைத்துக் கோயில் அமைத்து விழாவெடுக்க முற்பட்டனர். அதனால் 1903 ம் ஆண்டில் நாகதம்பிரானுக்கு கோயில் மடாலயமாக கட்டப்பட்டு பசுமை வெள்ளியினால் செய்யப்பட்ட நாகமும் பிரதி~;டை பண்ணப்பட்டது. இது 9 அங்குல உயரமான நாகதம்பிரான் விக்கிரகம் வைத்து ஆலயமும் அமைத்தனர்.
இதற்கு இன்றும் பூசைகள் நடைபெறுவதுடன் நேர்த்திக் கடன் கட்டுதல் வழக்கில் உள்ளது. அதனை தொடர்ந்து 20 ஆண்டுகளின் பின்னர் படையாண்டவெளி அ.பொ.த.தம்பிமுத்துப்போடி அவர்களால் விநாயகர் கோயிலும் வைரவர் மேடையும் கட்டப்பட்டன.
அதன் பின் நாகதம்பிரான் ஆலயம் இடிக்கப்பட்டு சிகரகோபுரமாக கட்டி கருங்கல்லினால் நாக சிலை வைத்து 1970.07.10ந் திகதி ஆனி உத்தரத்தன்று கும்பாவிசேகமும் நடைபெற்றது.
தொடர்ந்து மதில்கள் மணித்தூண்கள் கிணறுகள் என்பன அமைக்கப்பட்டும் உள்ளன. எனினும் 1973ம் ஆண்டு முன்பு கட்டப்பட்டிருந்த விநாயகர் ஆலயம் இடிக்கப்பட்டு வேறு இடங்களில் விநாயகர் ஆலயமும் கந்தசுவாமி ஆலயமும் கட்டப்பட்டன.
தொடர்ந்து 1993ம் ஆண்டு ஐப்பசி மாதம் மீண்டும் நாகதம்பிரான் கோயில் மூலஸ்தானம் இடிக்கப்பட்டு புதிதாக மூலஸ்தானமும் அர்த்த மண்டபமும் கட்டப்பட்டதுடன் மகாமண்டபம், சபாமண்டபம் என்பன திருத்தங்கள் செய்யப்பட்டதுடன் வைரவர் கோயிலும் மணித்தூணும் மீண்டும் இடிக்கப்பட்டு 2000ம் ஆண்டு கும்பாவிசேகம் நடைபெறுவதற்கு முன்னர் புதிதாக கட்டப்பட்டன.
2000ம் ஆண்டு 6ம் மாதம் கும்பாவிசேகம் நடைபெற்று அன்றிலிருந்து இன்றுவரை தினமும் ஒரு நேரப்பூசை நடைபெறுகின்றதுஃ அத்துடன் 2000ம் ஆண்டு கும்பாவிசேகம் நடைபெறுவதற்கு முன்னர் ஆலயத்தின் கிழக்கு புறத்தில் தங்குமிடம் அமைக்கப்பட்டது. அத்துடன் ஞா.வ.வி.அலையப்போடி வண்ணக்கர் அவர்களால் நவக்கிரக கோயில் கட்டப்பட்டு கும்பாவிசேகமும் நடைபெற்றது.
இவ்வாறு விளங்கும் நாகதம்பிரான் ஆலயம் 2008.11.09ந் திகதி பாலஸ்தானம் செய்யப்பட்டு 2015ம் ஆண்டு கும்பாவிசேகம் நடைபெற்றது.
(படுவான் பாலகன்)
http://www.jvpnews.com/srilanka/04/129750

No comments:

Post a Comment