தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, June 7, 2017

மகத்துவமான நோன்புக் கஞ்சி!


மகத்துவமான நோன்புக் கஞ்சி!
`நோன்பு உங்களுக்குக் கேடயமாக இருக்கிறது’ என்கிறது இஸ்லாம். ரமழான் மாதம் முழுவதும் நோன்பிருப்பது இஸ்லாமியர்களின் கடமைகளுள் ஒன்று.
அதிகாலை தொடங்கி மாலை வரை உண்ணாமல், நீர் அருந்தாமல், புகைக்காமல் இருப்பதுடன் வேறு தீய பழக்கங்களில் ஈடுபடாமல் இருப்பதே இந்த நோன்பின் சிறப்பு. காலை முதல் மாலை வரை எந்த உணவையும் உண்ணாமல் இருந்துவிட்டு, மாலையில் சூரியன் மறைந்த பிறகு, நோன்பு துறந்து உணவு உண்பதை வழக்கமாகக்கொண்டுள்ளனர்.
அப்படி காலையில் இருந்து மாலை வரை எந்த உணவும் உண்ணாமல் இருந்து, நோன்பு திறந்த பிறகு திட உணவுகளை உண்பதால், அது உடலுக்குச் சில தொந்தரவுகளைத் தர வாய்ப்பு உள்ளது. அதைத் தவிர்ப்பதற்காகவும், நோன்பிருப்பவர்கள் உடனடியாகப் புத்துணர்ச்சிப் பெறவும் உதவும் ஓர் அற்புதமான உணவே ‘நோன்புக் கஞ்சி’. இதனால் உடலுக்கு பல்வேறு நன்மைகள் கிடைக்கின்றன. இந்த நோன்புக்கஞ்சியை நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி, மற்றவர்களும் குடித்தால், அது உடலுக்கு பல்வேறு நன்மைகளைத் தரும்.
நோன்புக் கஞ்சியால் கிடைக்கும் நன்மைகள் பற்றி மருத்துவர் ஃபாமிதா கூறுகிறார்..
“நோன்பு இருப்பதால், நம் உடலில் உள்ள தேவையற்ற ரசாயனப் பொருள்கள் சுத்தப்படுத்தப்படும். நோன்பு ஆரம்பித்து முதல் இரண்டு நாள்கள் பல்வேறு உடல் உபாதைகள் ஏற்படும். மேலும், உடலில் நீர்வறட்சி ஏற்படும். இதைத் தவிர்க்க நோன்பு காலங்களில் நாம் எடுத்துக்கொள்ளவேண்டிய முக்கியமான உணவு நோன்புக்கஞ்சி.
நோன்புக்கஞ்சியை சாப்பிட்டதும், நம் உடலில் நீர்வறட்சி சரியாகி உடல் சராசரி நிலைக்கு வந்துவிடும். மேலும், நாள் முழுவதும் நோன்பு இருப்பதால், உடல் சூடாகி விடும். நோன்புக் கஞ்சியில் இருக்கும் மைசூர் பருப்பானது உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியைத் தருகிறது
நாள் முழுவதும் உணவு உண்ணாமல் இருப்பதால், நம் வயிற்றுக்கு அரைக்கும் வேலை இருக்காது. அதனால் நாம் நோன்பு திறந்த பிறகு உடனடியாக முழுமையான திடப் பொருள்களை உண்ணும்போது, வயிற்றுத் தொந்தரவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது.
ஆகவே, நோன்புக் கஞ்சி போன்ற திரவ உணவை உட்கொண்டால், அது நன்றாக செரிமானமாகும். நோன்புக் கஞ்சி செய்வதற்கு பெரும்பாலும் பாசுமதி, பொன்னி போன்ற அரிசிகளே பயன்படுத்தப்படுகின்றன. இதன் மூலம் உடலுக்குத் தேவையான கார்போஹைட்ரேட் கிடைக்கும். அதேபோல் பருப்பு, நெய் மற்றும் இறைச்சி வகைகளைச் சேர்ப்பதால், உடலுக்குத் தேவையான புரதச்சத்து கிடைக்கும்.
நோன்புக்கஞ்சி வயிற்றில் உள்ள கழிவுகளைச் சுத்தப்படுத்தும்; அல்சர் தொந்தரவுகளையும் சரி செய்யும். கஞ்சியில் சேர்க்கப்படும் கொத்தமல்லி, புதினா, மஞ்சள், வெங்காயம், வெள்ளைப்பூண்டு, தக்காளி ஆகியவை நம் வயிற்றை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள உதவுகின்றன. எளிதில் செரிமானம் ஆக்கக்கூடிய எளிய வகை உணவு.
இதில் நிறைந்துள்ள நார்ச்சத்து சிறந்த மலமிளக்கியாகச் செயல்படுகிறது. மலச்சிக்கலைத் தீர்க்கும். நோன்புக் கஞ்சியானது வயிறு நிறைந்த ஓர் உணர்வைத் தரக்கூடியது. அதற்கும் மேலாக உடலுக்குத் தேவையான அத்தனைச் சத்துகளையும் தரக்கூடியது. நோன்பு இருப்பவர்கள் மட்டுமின்றி அனைவரும் இதை உட்கொள்ளலாம். இது உடலுக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தரும் என்பதில் சந்தேகமில்லை..
நன்றி
விகடன்
- See more at: http://www.asrilanka.com/2017/06/06/47118#sthash.IQt9M5mk.dpuf

No comments:

Post a Comment