தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, June 12, 2017

முகப்பரு, வியர்க்குரு விரட்டும்... கோடைக்கேற்ற கீரைகள்!


கீரைகள்... உடல் ஆரோக்யத்துக்குக் காய்கறிகள் எவ்வளவு தேவையோ அதேபோல் நம் அன்றாட உணவில் கீரைகளையும் சேர்த்துக்கொள்ள வேண்டியது அவசியமாகும். மழைக்காலங்களில் கீரைகள் பயன்படுத்துவது அவ்வளவு ஏற்புடையதல்ல. ஆனால் இதுதான் கோடைக் காலமாயிற்றே... விருப்பப்படி உண்டு உடல் ஆரோக்கியம் பேணுவதோடு நோய்களில் இருந்தும் நம்மைக் காத்துக்கொள்ளலாம்.
வெயிலினால் ஏற்படும் பாதிப்புகளில் இருந்து நம்மைக் காக்க நம் அன்றாட உணவில் கீரைகளைச் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும். குறிப்பாக, பசலைக்கீரையைப் பருப்புடன் சேர்த்தோ அல்லது தனியாகவோ கடைந்து சாப்பிட்டு வந்தால்... நீர் எரிச்சல், நீர்க்கட்டு, உடல்சூடு போன்றவை சரியாகும். அதுமட்டுமல்லாமல், வெயில் காலத்தில் ஏற்படும் மலச்சிக்கல் கோளாறை பசலைக்கீரை சரிசெய்வதோடு சொறி, சிரங்கையும் குணப்படுத்தும்.
மணத்தக்காளிக் கீரை
மணத்தக்காளிக்கீரையை வாரம் 2 நாள் வீதம் பருப்புடன் சேர்த்து கடைந்தோ, தனியாகவோ அல்லது சூப், ஜூஸ் ஆகவோ சாப்பிட்டு வந்தால் வயிற்று நோய்கள், வாய்வுக்கோளாறு, குடல்புண், சிறுநீர் செல்லும் இடத்தில் ஏற்படும் எரிச்சல் போன்றவை சரியாகும். முன்கூட்டியே சாப்பிட்டால், மேற்சொன்ன கோளாறுகள் வருவதில் இருந்து காத்துக்கொள்ள முடியும்.
இதேபோல் பொன்னாங்கண்ணிக் கீரையைச் சாப்பிடுவதால் உடல் உஷ்ணம் தணியும். அத்துடன், கண்ணில் நீர் வடிதல், கண் எரிச்சல் போன்ற கண் சம்பந்தமான பிரச்னைகளும் சரியாகும்.
சிறுகீரையைப் பருப்பு சேர்த்துக் கடைந்து சாப்பிட்டால்… பித்தம், நீர்க்கடுப்பு, கை, கால் வீக்கம் குறையும்.
வெந்தயக்கீரையில் உயிர்ச்சத்துக்கள் அதிகம் உள்ளன. இதை வாரத்தில் இரண்டு நாள் சமைத்து உண்டு வந்தால் ரத்தச்சோகை எட்டிப்பார்க்காது. வெந்தயக்கீரையுடன் பருப்பு சேர்த்து கடைசல், குழம்பு வைப்பார்கள். இப்படிச் செய்த குழம்பு அல்லது கடைசலுடன் கொஞ்சம் நெய் சேர்த்து சாப்பிட்டால் சுவை கூடும். வெறுமனே வெந்தயக்கீரை என்றில்லாமல் கொஞ்சம் கொத்தமல்லிக்கீரை, பூண்டு, இஞ்சி, புதினா, பெருங்காயம், சீரகம் சேர்த்துத் தாளித்தால் கூடுதலாகச் சாப்பிடத் தூண்டும்.
பசலைக் கீரை
வெயில் காலங்களில் வரக்கூடிய நோய்கள் மற்றும் உடல் கோளாறுகளைத் தீர்ப்பதில், பசலைக் கீரையும் முக்கிய இடம் வகிக்கிறது. பசலையில் கொடிப்பசலை, குத்துப்பசலை, தரைப்பசலை, வெள்ளைப் பசலை, சிலோன் பசலை எனப் பலவகை உள்ளன. இதில் குறிப்பாகக் குத்துப்பசலையில் நோய் எதிர்ப்பு சக்தி அதிகமாக உள்ளது. அடிக்கடி இந்தக் கீரையைச் சாப்பிட்டு வந்தால் நோய்கள் அணுகாது. புதிய ரத்தத்தை உற்பத்தியாக்கி உடலுக்குப் பலம் தரக்கூடிய இந்தக் குத்துப் பசலையின் இலையை நன்றாக அரைத்துப் பற்று போட்டால் கொப்புளம், கழலை, வீக்கம் சரியாகும். இதன் இளம் தண்டை அரைத்து வியர்க்குரு, கைகால் எரிச்சல் போன்றவற்றுக்குத் தடவினால் குணமாகும்.
பசலைக்கீரை சாப்பிடுவதால் சிறுநீர்க் கடுப்பு, நீரடைப்பு, வெள்ளை ஒழுக்கு போன்றவை நீங்கும். மலச்சிக்கல், தொந்தி போன்றவற்றுக்கும் இது நல்லதொரு நிவாரணி. கால் மூட்டுகளில் வரக் கூடிய வாதத்தைப் போக்கக்கூடியது. கீரையின் சாறு, முகப்பருக்களை நீக்கக்கூடியது. வெள்ளைப்பசலை சாப்பிடுவதால் சிறுநீரை அதிமாக வெளியேற்றி உடல்சூட்டை குறைக்கும். கொடிப்பசலை தாகம், சூட்டை தணிக்கும்.
வெயில் காலம் என்றில்லை, மற்ற நாள்களிலும் வரக்கூடிய வாய்ப்புண், வயிற்றுப்புண், குடல்புண் போன்றவற்றால் அவதிப்படுவோருக்கு, மணத்தக்காளி கீரையை வெறுமனே மென்று சாப்பிட்டாலே பலன் கிடைக்கும். இந்தக் கீரையைச் சமைத்தும் சாப்பிடலாம். மணத்தக்காளியின் பழத்தையும் சாப்பிடலாம். கொஞ்சம் இனிப்புச்சுவையுடன் இருக்கும்.
புதினாக் கீரை
புதினா எல்லோரும் அறிந்த ஒன்றே. இறைச்சி சமையலின்போது மட்டுமே புதினாவைச் சேர்ப்பார்கள் சிலர். மற்றபடி தனியாகப் புதினாவை அதிகமாக பலரும் பயன்படுத்துவதில்லை. வயிற்றுவலி, வயிற்றுப்புண், வயிற்றுப்போக்கு என்று வயிறு சம்பந்தப்பட்ட நோய்களுக்கு புதினா நல்ல மருந்து. சிறுகுழந்தைகள் சிலநேரம் வாந்தி, வயிற்றுப்போக்கால் அவதிப்படுவார்கள். அதுபோன்ற நேரங்களில் ஐந்தாறு புதினா இலைகளை எடுத்து (எண்ணெய் வேண்டாம்) சட்டியில் போட்டு வதக்கி அது மூழ்கும் அளவுக்குத் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைக்க வேண்டும். தண்ணீர் நன்றாக வற்றியதும் 2 மணி நேரத்துக்கு ஒருதடவை குடிக்கக் கொடுத்து வந்தால் வாந்தியும், வயிற்றுப்போக்கும் நின்றுவிடும். புதினாவை கஷாயமாகவோ, சூப்பாகவோ செய்து குடித்து வந்தால் இதயம் சம்பந்தமான நோய்கள் சரியாகும். மற்றபடி தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் ஜீரணக்கோளாறுகள் சரியாவதோடு மலச்சிக்கல் பிரச்னை சரியாகும். ரத்தத்தைச் சுத்திகரிப்பதில் புதினா சூப்பர் மருந்து.
பொதுவாகப் புதினாவை துவையல் செய்து சாப்பிடுவார்கள். வெறுமனே துவையல் செய்தால் சாப்பிடுவதற்குச் சுவையாக இருக்காது. அதனால் கொத்தமல்லியைச் சேர்த்துக்கொண்டால் சாப்பிட சுவையாக இருக்கும். புதினா சாதமும் சுவையாக இருக்கும்.
இரும்புச்சத்து மற்றும் வைட்டமின் ஏ போன்ற சத்துகள் அதிகம் உள்ள கரிசலாங்கண்ணியை ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே நமது பாரம்பர்ய மருத்துவத்தில் பயன்படுத்தி வந்திருக்கின்றனர். கரிசலாங்கண்ணிக் கீரையை வாரம் இரண்டு நாள் சமையல் செய்து சாப்பிட்டு வந்தாலும் 100 மில்லி அளவு சாற்றை அருந்தி வந்தாலும் நோய் எதிர்ப்பு சக்தி கிடைக்கும். அதாவது, மஞ்சள்காமாலை, தலைப்பொடுகு, முடி உதிர்தல் உள்ளிட்ட பல்வேறு பாதிப்புகளில் இருந்து நம்மைக் காத்துக்கொள்ள முடியும்.
கரிசலாங்கண்ணிக் கீரை
கரிசலாங்கண்ணி இலைச்சாற்றை 30 மில்லி அளவு எடுத்து தினமும் காலை வேளையில் சாப்பிட்டு வந்தால் சிறுநீர் எரிச்சல் சரியாகும். குறிப்பாகக் கோடைக் காலங்களில் இந்தச் சிகிச்சை பலனளிக்கும். குழந்தைகளுக்கு வரக்கூடிய சளித்தொல்லைக்கு இரண்டு சொட்டு கரிசாலைச்சாற்றுடன் எட்டுத் துளிகள், தேன் கலந்து குடிக்கக் கொடுத்து வந்தால் பலன் கிடைக்கும். 500 மில்லி கரிசலாங்கண்ணி சாற்றுடன் சுத்தமான நல்லெண்ணெய் 500 மில்லி சேர்த்துத் தைலப்பதமாகக் காய்ச்சி வடித்து வைத்துக்கொண்டு ஒரு டீஸ்பூன் வீதம் தினமும் இரண்டு வேளை சாப்பிட்டு வரலாம். இதனால் சளியுடன் கூடிய இருமல், மூச்சுத்திணறல் மற்றும் சுவாசக்கோளாறுகள் நீங்கும்.
குறிப்பாக ஜலதோஷம், சளி, இருமல் என அவதிப்படுபவர்கள் சில வகைக் கீரைகளைப் பயன்படுத்தி நோய் மற்றும் குறைபாடுகளைச் சரி செய்துகொள்ளலாம். சளியோடு இருமல் சேர்ந்து அவதிக்குள்ளாகிறவர்கள், அரைக்கீரையுடன் வெள்ளைப்பூண்டு சேர்த்து கடைந்து சுடுசாதத்துடன் சாப்பிட்டு வந்தால் சளி முறிவதோடு இருமலும் குணமாகும்.
இதேபோல் மூக்கடைப்பு, மூக்கில் சதை வளர்தல், சைனஸ் கோளாறுகளால் அவதிப்படுபவர்கள், கொத்தமல்லிக்கீரையைத் துவையல் செய்து சூடான சாதத்துடன் தொடர்ந்து சாப்பிட்டு வந்தால் காலப்போக்கில் பலன் கிடைப்பதோடு உடல் புஷ்டியாகும்.
தூதுவேளையை நெய்யில் வதக்கி துவையலாகவோ, மசியலாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் கபக்கட்டு, சளி, இருமல் சரியாகும். பசு வெண்ணெயில் தூதுவேளையைச் சேர்த்துக் காய்ச்சி நெய்யாக உருக்கி சாப்பிட்டு வந்தால் இருமல், சளி மற்றும் இரைப்பிருமல் போன்றவை சரியாகும்.
முசுமுசுக்கையைத் துவையலாகவோ, தோசை மாவுடன் சேர்த்தோ சாப்பிட்டு வந்தால் சளி, இருமல், கபக்கட்டு போன்றவை சரியாகும். கானாம் வாழை, முள்ளிக்கீரை, குப்பைமேனி, குப்பைக்கீரை உள்ளிட்டவை அடங்கிய கலவைக்கீரையைச் சமைத்து சாப்பிட்டு வந்தால் நெஞ்சில் கட்டியிருக்கும் கபம் உடையும்.

No comments:

Post a Comment