தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, June 26, 2017

காலத்தின் கண்ணாடி!

Written by இரா. சம்பந்தன்
அது சங்கம் மருவிய காலத்துத் தமிழ் உலகம்! அப்போது அந்தப் பெண்ணுக்குப் பன்னிரண்டு வயது! அம்மா சித்திராபதி என்று தெரியும்! அப்பா யாரென்று அம்மாவுக்கே தெரியாத போது அவளுக்கு எப்படித் தெரியும்? அதற்காக அந்தக் குடும்பம் வெட்கப் படவில்லை! குல தர்மம் என்று ஏற்றுக் கொண்டார்கள்!
ஏழு ஆண்டுகள் அம்மா படிக்க வைத்தாள்! மகளும் படித்தாள்! இன்றைய பெண்ணீயம் பேசுபவர்கள் தோன்றுவதற்கு முன்னால்! அழகில் சிறந்த அந்தப் பெண் நாட்டியக் கலை பயின்றாள். அரச சபையிலே மட்டும் ஆடும் வேந்து இயல் நடனமும் பொது மேடைகளில் ஆடும் பொதுவியல் நடனமும் கற்றுக் கொண்டாள்!
நடனத்துக்கு தேவையான சங்கீதப் பாடல்களைக் கற்றுக் கொண்டாள்! அக்காலத் தூக்குத் துணிவு என்ற தாள வகைகளையும் உணர்ந்து கொண்டாள்! யாழிலே அழகிய பாடல்களை இசைக்கும் திறமை பெற்றாள். புல்லாங்குழலும் வாசிக்கத் தெரிந்து கொண்டாள்!
உடலைக் கட்டுக் கோப்பாக வைத்திருப்பதற்காக தினமும் பந்தடித்து விளையாடி மெலிந்தாள்! சமையல் நூல்களைப் படித்து அழகாக இருப்பதற்கு ஏற்ற உணவுகளைச் சமைப்பதற்கும் கற்றுக் கொண்டாள். முக அழகிற்குப் பயன்படும் நிறக் கலவைகளை எப்படித் தயாரிப்பது அதை எப்படிப் பயன்படுத்துவது என்பதெல்லாம் அவளுக்கத் தெரியும்!
ஒரு படுக்கை அறையை எப்படி அழகு படுத்துவது கால நிலைக்கு ஏற்றவாறு எப்படி நீராடுவது நீரிலே எவற்றையெல்லாம் கலந்து பயன்படுத்தி உடலை மெருகூட்டுவது என்பதும் அவளுக்குத் தெரியும்! இன்றைய யோகாவை அன்று அறுபத்து நான்கு கரண பேதங்களாகக் கற்றுத் தினமும் பயிற்சி செய்து வந்தாள்.
பிறர் பேசும் பேச்சின் உள் நோக்கத்தைப் புரிந்து கொண்டு தன்னைக் காத்துக் கொள்வதில் அவள் கெட்டிக்காரி! வசீகரமான குரலில் அழகாகப் பேசுவாள்! அழகாக ஓவியம் வரைவாள்! பூக்களைக் கொண்டு மாலை கட்டவும் தெரியும்! மணிகளைக் கோர்த்து ஆபரணங்கள் செய்யத் தெரியும்!
கணிதமும் ஏனைய கலைகளையும் பாடசாலையில் கற்றாள்! அதன் பின்பு நாடக மகளிருக்கு என்று எழுதப்பட்ட நடிப்புக் கல்வி பற்றிய நூல்களை உயர் வகுப்பிலே படித்து முடித்துக் கொண்டு அரச சபையிலே நாட்டிய அரங்கேற்றம் செய்யப் போனாள் அந்தப் பேதை அம்மாவின் ஆசைக்காக!
ஆடினாள்! மன்னன் புகழ்ந்தான்! சபை புகழ்ந்தது. ஆயிரத்து எட்டுக் களஞ்சு பொன் சன்மானம் கிடைத்தது! தலைக்கோலி என்ற நாட்டிய மேதைப் பட்டம் கிடைத்தது! பச்சை மாலை கிடைத்தது!
காற்றுள்ள போதே தூற்றிக் கொள்ள நினைத்தாள் அம்மா! அரசாங்கத்தால் தேசிய விருது வழங்கப்பட்ட என் பெண்ணை ஆயிரத்தெட்டுக் கழஞ்சு பொன் தந்தால் கட்டித்தருவேன் என்று செய்தி பரப்பினாள் ஊரில்! நடிகையைப் பொருள் கொடுத்து வாங்க யார் வருவார்கள்? அன்றும் தொழில் அதிபர் தான்!
பணத் திமிரால் கட்டிய மனைவியை விட்டு பொன் கொடுத்து வாங்கினான் அவளை!
தந்த காசிற்கு தரமான சுகம் கொடுத்தாள் அவள்! கடற்கரை எல்லாம் கொண்டு திரிந்தாள்! நீராட்டி மகிழ்ந்தாள்! யாழ் மீட்டிப் பாடினாள்! ஆடிக் காட்டினாள்! பதினொரு ஆடல்களை! கூடினாள்! ஊடினாள்! திரும்பவும் கூடினாள்!
தேன் கசந்தது தேடிக் கொண்டவனுக்கு! பிரிந்து போனான்! என்ன செய்வது அவள்! மண்டியிட்டுக் கெஞ்சினாள்! மாற்றம் வரவில்லை! விலை கொடுத்து சுவை பார்த்த விளைவு கையில் மணிமேகலை ஒரு பெண் குழந்தையோடு துறவு வாழ்க்கைக்குப் போனாள் அந்தப் பெண்! அவள் வேறு யாருமல்ல. சிலப்பதிகாரத்து மாதவிதான்! ஒரு கலைக் கோவிலாக உருவெடுத்து இறுதியிலே தன் திறமை எதுக்குமே பயன்படாமல் ஓரங்கட்டப்பட்ட அவள் வரலாறு இதயத்தைப் பிழிவதாகும்!
வேத்தியல் பொதுவியல் என்று இரு திறத்து
கூத்தும் பாட்டும் தூக்கும் துணிவும்
பண்யாழ்க் கரணமும் பாவைப் பாடலும்
தண்உமைக் கருவியும் தாழ் தீங்குழலும்
கந்துகக் கருத்தும் மடை நூல் செய்தியும்
சுந்தரச் சுண்ணமும் தூயநீர் ஆடலும்
பாயல் பள்ளியும் பருவத்து ஒழுக்கமும்
காயக் கரணமும் கண்ணியது உணர்தலும்
கட்டுரை வகையும் கரந்துறை கணக்கும்
வட்டிகைச் செய்தியும் மலர் ஆய்ந்து தொடுத்தலும்
கோலம் கோடலும் கோவையின் கோப்பும்
காலக் கணிதமும் கலைகளின் துணிவும்
நாடக மகளிர்க்கு நன்கணம் வகுத்த
ஓவியச் செந்நூல் உரை நூல் கிடக்கையும்
கற்றுத் துறை போக்கிய பொற்றொடி நங்கை!
அது மணிமேகலை தரும் சான்றிதழ் மாதவிக்கு! அவளை இன்றைய நடிகைகளோடு ஒப்பிட்டுப் பார்ப்போமானால் இன்று சில நடிகைளின் வாழ்வில் ஏற்பட்ட அத்தனை சோதனைகளையும் அன்றே மாதவி அனுபவித்து இருக்கிறாள்!
அழகு இருந்தது! கல்வி அறிவு இருந்தது! ஆனால் அம்மாவின் பணத்தாசைக்காக ஏற்கனவே மணம் முடித்தவன் என்றும் பார்க்காமல் வசதியான கோவலனோடு தொடர்பு வைத்து இன்னொருத்தியின் வாழ்க்கையைச் சீரழித்து விட்ட அவப் பெயரோடு சொத்து இழந்து கலை உலகை விட்டு ஒதுங்க வேண்டிய நிலை ஏற்பட்டது மாதவிக்கு! அவளைப் போல அவமானப் பட்டு வேதனையுடன் திரை உலகை விட்டு ஒதுங்கிய பல பெண்களை இன்றும் கலை உலகில் காண்கின்றோம்!
சாமியார் தொடர்பால் மந்திரிகள் தொடர்பால் பணக்காரர் தொடர்பால் அம்மாவின் தொல்லையால் அவலப்படுவது இன்றைய நடிகைகள் மட்டுமல்ல. அன்றைய மாதவியும் தான்!
தவறான குடும்பத்தில் இருந்து கலை உலகிற்கு வந்து ஒருவனுடனே மட்டும் வாழ்ந்து முடிவில் துறவு என்ற நல்ல வழிக்குப் போனாள் மாதவி! நல்ல குடும்பத்தில் இருந்து கலை உலகிற்கு வந்து பலரோடு கலந்து தவறான வழியில் ஒதுங்கிக் கொண்டவர்கள் இன்றைய சில நடிகைகள்!
இன்று நாம் காண்பது உண்மையென்றால் அன்றைய இலக்கியச் செய்தியும் உண்மைதான்! ஏனெனில் சொல்லப்பட்ட செய்திகள் ஒன்றாகத்தான் இருக்கின்றன. இலக்கியங்கள் காலத்தின் கண்ணாடிகள் என்பது இது தானோ?
(தமிழர் தகவல் இதழ் டிசம்பர் 2012)

No comments:

Post a Comment