தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 17 மே, 2017

கல்லாமையும் இல்லாமையும்!


கோபமாக வந்தாள் வாசுகி! அவள்தான் வள்ளுவரின் மனைவி! நீங்கள் குறள் எழுதிய இலட்சணம் போதும். ஏட்டையும் எழுத்தாணியையும் எறிந்துவிட்டு வேறு வேலை பாருங்கள் என்றாள் ஆத்திரத்தோடு!
ஏன்? ஏன்? என்று திகைத்தார் திருவள்ளுவர்.
ஏன் என்றா கேட்கிறீர்கள்? என்னுடைய கணவர் தங்கமானவர்! அறிவாளி! முற்போக்கு சிந்தனை மிகுந்தவர்! யார் மனத்தையும் நோகடிக்காதவர்! என்றுதான் இவ்வளவு காலமும் எண்ணியிருந்தேன் நீங்கள் கல்லாமை என்ற அதிகாரம் பாடும் மட்டும்! கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும் இல்லாத பெண் காமுற்றது போலவா தெரிகிறது உங்களுக்கு? உங்களுக்கு வேறு உவமை கிடைக்கவில்லையா? அங்கவீனமான பெண்ணை அவமானப் படுத்தவா திருக்குறள் எழுதுகிறீர்கள்? இரைந்தாள் வாசுகி.
நீ இந்தக் குறளுக்கு என்ன பொருள் காண்கிறாய்? அதைச் சொல்! அமைதியாகக் கேட்டார் வள்ளுவர்.
பொருளா? என்ன பொருளென்றா கேட்கிறீர்கள்? காம சுகத்துக்கு அடிப்படையான மார்பகம் இரண்டும் இல்லாத பெண் ஒருத்தி அதை மறந்து கூடல் சுகத்தை விரும்பினால் உலகம் எவ்வாறு அவளை இகழ்ந்து சிரிக்குமோ அது போல கல்லாதவனும் தன் அறிவின்மையை மறந்து சபையிலே ஒன்றைச் சொல்ல விரும்பும் போது உலகம் அவனை இகழ்ந்து சிரிக்கும் அப்படித்தான் பொருள்பட எழுதி இருக்கிறீர்கள்.
படிக்காத குறை வேறு! அங்கவீனக் குறை வேறு! படிக்காத குறை ஒருவன் தானாகத் தேடிக்கொள்வது! அங்கவீனம் என்பது தானாகவே தேடிக்கொள்வது அல்ல. வந்து சேர்வது! இரண்டுக்கும் நீங்கள் முடிச்சுப் போடாதையுங்கோ. ஏற்கனவே தன்னுடைய அங்கவீனத்தால் அவமானப்பட்டு துடிக்கும் ஒரு பெண்ணை இவ்வளவு தூரம் இழிவு படுத்த திருக்குறளைத் தவிர வேறு ஒன்றாலும் முடியாது பாருங்கோ!
வள்ளுவர் சிரித்தார்! வாசுகி! நான் கேட்கும் கேள்விகளுக்கு முதலில் பதில் சொல். மார்பகம் இல்லாத பெண் கூடலை விரும்பி ஒருவனைக் கைப்பிடித்து
 இணைந்தால் என்ன நடக்கும்?
கருத்தரிப்பாள்! என்றாள் வாசுகி.
நல்லது! கருத்தரித்தால் குழந்தை பிறக்குமல்லவா?
ஆம்! அதில் என்ன சந்தேகம்?
பிறந்த குழந்தைக்கு பாலூட்ட என்ன செய்வாள் அந்தத் தாய்?
திகைத்தாள் வாசுகி.
என்ன சொல்வது என்று அவளுக்கத் தெரியவில்லை. குறளின் போக்கே மாறிவிட்டது. அவள் கண்ட பொருள் பிழையாகி விட்டது. தவறான முயற்சி ஒன்றின் விளைவு காட்டி அறிவுறுத்தும் உன்னதமான குறளைக் காமக் கண்ணால் பார்த்து விட்டதற்காக வெட்கப்பட்டாள் அவள்.
வள்ளுவர் சொன்னார்.
பாலூட்ட ஏதுவான மார்பகங்கள் இரண்டும் இல்லாத பெண் காமுற்று அதன் விளைவாக குழந்தை ஒன்றைப் பெற்று வைத்தக் கொண்டு அதன் முகம் பார்த்து தன் இயலாமையை நினைத்து எவ்வளவு துன்பப்படுவாளோ அதுபோல கல்வியறிவு இல்லாத ஒருவனும் ஆர்வ மேலீட்டால் மேடை ஏறி நின்றுகொண்டு சபையோர் முகம் பார்த்து கொடுப்பதற்கு ஏதுமில்லாமல் தன் கல்லாமையை நினைத்து துன்பப்படுவான் அம்மா! இந்த இருவர் மீதும் எனக்குப் பரிதாபம் இருந்ததனால் இப்படிக் குறள் எழுதினேன்! நீ நினைப்பது போல அபத்தமான கருத்தில் அதை நான் எழுதவில்லை!
பதறினாள் வாசுகி!
இருந்து பாருங்கோ! பிற்காலத்தில் வரப்போகும் பல்கலைக் கழகங்கள் பண்டிதர்கள் முதற்கொண்டு எல்லா உரையாசிரியர்களுமே என்னைப்போல அபத்தமான உரை தான் காணப்போகிறார்கள்! நீங்கள் நினைக்கும் உரை காண மாட்டார்கள் என்றாள் வாசுகி.
ஆம்! அவள் நினைத்தது போலவே தான் நடந்தது! குறளுக்கு தலைசிறந்த உரை வகுத்த பரிமேலழகர் கூட முலை இரண்டும் இல்லாத பெண் உடல் சுகத்தை விரும்பினால் உலகம் சிரிக்கும் என்ற பொருள் படத்தான் இக்குறளுக்கு உரை எழுதினார் அவரின் உரை தவறானதும் நாகரிகம் அற்றதும் வள்ளுவர் இயல்புக்கு மாறானதும் ஆகும்.
கல்லாதான் சொல் காமுறுதல் முலை இரண்டும்
இல்லாதாள் பெண் காமுற்று அற்று
( திருக்குறள் - கல்லாமை )
Written by இரா.சம்பந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக