தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, March 29, 2017

இனிக்க இனிக்க ஆரோக்கியம்... பாயசத்தின் பிரமாதப் பலன்கள்!

எந்த விருந்தாக இருந்தாலும், பாயசத்துடன் பரிமாறுவதுதான் நம் பாரம்பர்யம். அந்தத் துளியூண்டு பாயசம் விரல்களால் வழிக்கப்பட்டு, நம் நாவில் ஏறி உட்காரும் கணத்தில், `இது விருந்துச் சாப்பாடு’ என்கிற உணர்வு நம்மைத் தொற்றிக்கொள்ளத் தொடங்கிவிடும். `திருமண வீடுகளில், சாப்பாட்டுடன் பாயசம் பரிமாறப்படவில்லை என்றால், அந்தத் திருமணம் முழுமை அடையாதது’ என்கிற எண்ணம் இன்னும் நம் மக்களுக்கு உண்டு. இந்தியாவில், விருந்துகள், பண்டிகைகள், கொண்டாட்டம் அத்தனையிலும் பாயசத்துக்கு பிரதானமான இடம் இன்று வரை இருக்கிறது. இலையில் போட்டதை வழித்து ருசித்தாலும், அப்பளத்தை நொறுக்கிப் போட்டு கலந்தடித்தாலும், டம்ளரில் அல்லது கிண்ணத்தில் ஊற்றிச் சாப்பிட்டாலும் பாயசத்தின் சுவையை ஒற்றை வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், அமர்க்களம்!
பாயசம்
அரிசி, சேமியா, அவல், ஜவ்வரிசி... எனப் பாயசத்திலும் பல வகைகள் உள்ளன. `கீர்’, `பாயேஷ்’, `பாயாசா’, `ஃபிர்னி’, `பாயோஸ்’, `பாயஸ்’... இந்தியாவில் பலவிதமாக அழைக்கப்பட்டாலும், இதன் ஆதாரச் சுவை இனிப்பு! சமஸ்கிருதத்தில் `க்‌ஷீர்’ `பாயாசா’ என்றெல்லாம் குறிப்பிடப்பட்டிருக்கிறது. தென்னிந்தியாவில் பாயசத்துக்காகவே புகழ்பெற்ற கோயில்கள் இருக்கின்றன. அவற்றில் முக்கியமானது கேரளா, அம்பலப்புழாவில் உள்ள கிருஷ்ணர் கோயில். இந்தக் கோயிலில் பாயசம் நுழைந்ததற்கு ஆதாரமாக, சுவாரஸ்யமான கதை ஒன்றையும் சொல்கிறார்கள்.
அந்தப் பகுதியை ஓர் அரசன் ஆண்டுவந்தான். ஒரு நாள், வயதான துறவி வேடம் தரித்து அவனைப் பார்க்க வந்தார் கிருஷ்ண பகவான். வந்திருந்தவர் யார் என்பது அரசனுக்குத் தெரியவில்லை. இருந்தாலும், முதிய துறவி ஆயிற்றே! வரவேற்றான்; உபசரித்தான்; அமரச் சொன்னான். அவர் வந்த காரியத்தை விசாரித்தான்.
சேமியா பாயசம்
‘மன்னா..! நீ சதுரங்கம் (செஸ்) விளையாடுவதில் திறமையானவன் எனக் கேள்விப்பட்டேன். உன்னோடு விளையாடவே வந்தேன்’ என்றார் கிருஷ்ணர்.
அரசனுக்கோ ஆச்சர்யம்! `இந்தத் துறவிக்கு ஏன் இந்த ஆசை?’ என்கிற எண்ணம் எழுந்தாலும், அவருடன் சதுரங்கம் விளையாடச் சம்மதித்தான். `சரி... ஆட்டத்தில் நீங்கள் வெற்றி பெற்றால் நான் என்ன தர வேண்டும்?’ என்று கேட்டான்.
`அதிகம் வேண்டாம். சதுரங்கங்கத்தில் 64 கட்டங்கள் இருக்கின்றன அல்லவா? ஒவ்வொரு கட்டத்துக்கும் இவ்வளவு என்கிற அளவில் நீ எனக்கு நெல் தந்தால் போதும்... அவசரப்படாதே... முதல் கட்டத்துக்கு ஒரு நெல்... இரண்டாவதில் இரண்டு... மூன்றாவதில் நான்கு... நான்காவது கட்டத்தில் எட்டு... ஐந்தாவதில் பதினாறு... இப்படி நெல் மணிகளை இரட்டிப்பாக்கிக்கொண்டே போய் முழுவதையும் தர வேண்டும். சம்மதமா?’
பால் பாயசம்
அரசன் சற்றும் யோசிக்கவில்லை. சதுரங்கம் விளையாட சம்மதித்தான். `இது என்ன பிரமாதம்! மிஞ்சிப் போனால் 10 அல்லது 20 மூட்டை நெல் வருமா?’ என்பது அவன் கணக்கு... அல்ல... அவன் செய்த பிழை. அந்த விளையாட்டில் கிருஷ்ணரே வெற்றி பெற்றார். அவர் கேட்டபடி சதுரங்கத்தின் அத்தனை கட்டங்களிலும் நெல் மணிகளை வைக்கத் தொடங்கியபோதுதான் எழுந்தது பிரச்னை. 20-வது கட்டத்திலேயே 10 லட்சம் நெல் மணிகளை வைக்கவேண்டியிருந்தது. 40-வது கட்டத்தில் அரசு கிடங்கிலிருந்த மொத்த தானியங்களையும் வைத்தாகிவிட்டது. 64-வது கட்டத்தில், பல லட்சம் டன் நெல்லை அரசன், துறவிக்குக் கொடுக்க வேண்டும் என்கிற நிலை! ஒருபோதும் அவனால் அடைக்கவே முடியாத கடன் அது. மலைத்துபோன அரசன், துறவியின் காலில் விழுந்தான். மனம் இரங்கிய கிருஷ்ணர் தன் சுய ரூபத்தை வெளிப்படுத்தினார்.
`மன்னா! உன் கடனை உடனே அடைக்கத் தேவையில்லை. கொஞ்சம் கொஞ்சமாக அடைத்தால் போதும். அம்பலப்புழாவில் உள்ள என் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு, வறியவர்களுக்கு என எல்லோருக்கும் தினமும் இலவசமாக பாயசம் கொடு. அது போதும்’ என்றார். இந்துக்கள் மத்தியில் பாயசம் பிரபலமானதற்கு இந்த நிகழ்வும் ஒரு காரணம் என்று சொல்லப்படுகிறது. இன்றைக்கும் அம்பலப்புழா கிருஷ்ணன் கோயிலில், வருகிறவர்களுக்கெல்லாம் பாயசம் வழங்கப்படுகிறது. அதன் ஈடில்லாச் சுவைக்காகவே அலைமோதுகிறது பக்தர்கள் கூட்டம்.
பால்பாயசம்
சர்க்கரை சேர்த்து இது செய்யப்பட்டாலும், வெல்லம், நாட்டுச்சர்க்கரையில் செய்யப்படும் பாயசத்தின் சுவையே தனி! மதுரை, நெல்லைப் பகுதிகளில் பருத்திப் பால் பாயசம் வெகு பிரபலம். ஒரு சாதாரண வண்டியில் வைத்துக்கொண்டு விற்பனை செய்வார்கள். பருத்திக்கொட்டையின் பாலில் நாட்டுச்சர்க்கரையோ, வெல்லமோ, கருப்பட்டியோ கலந்து தயாரிக்கப்படும் இதன் சுவைக்காகவே பாயசக்காரரை எதிர்பார்த்து பலபேர் காத்திருந்த காலம் எல்லாம் உண்டு. இன்றும் தென் தமிழகத்தில் வெகு அரிதாக சில கடைகளில் பருத்திப்பால் பாயசம் கிடைக்கிறது. இனிப்பு ருசியின் பால் ஈர்க்கப்பட்டவர்களுக்கு பாயசம், அமிர்தம்.
`இது தரும் பலன்கள் என்னென்ன?’ டயட்டீஷியன் சௌமியாவிடம் கேட்டோம்.
``பொதுவாக பாயசத்தில் சேர்க்கப்படும் முக்கியமான பொருள்கள் பால் மற்றும் ஏலக்காய். இயல்பாகவே பால் நம் உடலுக்கு நன்மைகள் பல தருகிற ஒன்று. எலும்புக்கு உறுதி சேர்ப்பது, சருமப் பளபளப்புக்கு உதவுவது, உடலுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி தருவது, பற்சிதைவைத்
டயட்டீஷியன் சௌமியாதடுப்பது, பதற்றம் குறைப்பது, ஆஸ்டியோபோரோசிஸ் வராமல் காப்பது, சில புற்றுநோய்களை வராமல் தடுப்பது... எனப் பாலின் நன்மைகள் ஏராளம். உலகம் முழுக்க மக்களின் தவிர்க்க முடியாத ஓர் பானம் இது. ஆனால், பசும்பால்தான் குழந்தைகளுக்கும் முதியோருக்கும் நல்லது. 100 கிராம் பாலில் 42 கலோரிகள், கொழுப்பு 1 கிராம், கொலஸ்ட்ரால் 5 மி.கி., சோடியம் 44 மி.கி., பொட்டாசியம் 150 மி.கி., கார்போஹைட்ரேட் 5 கிராம், சர்க்கரை 5 கிராம், புரோட்டீன் 3.4 கிராம் உள்ளன. இது தவிர, கால்சியம், மக்னீசியம், வைட்டமின் பி 12 ஆகியவையும் நிறைந்துள்ளன.
அவல் பாயசம்
தென்னிந்தியாவில் அதிக அளவில் விளைவிக்கப்படுவது ஏலக்காய். தரமானவையாக நம் ஊரிலேயே கிடைக்கின்றன. விதையாகவும் தூளாகவும் இது கிடைக்கிறது. இதன் தோல், ஏல வாசனையைத் இறுதி வரை தக்கவைத்துக்கொள்ளும் தன்மைகொண்டது. ஒரு டீஸ்பூன் ஏலக்காயில் (6 கிராம்) 18 கலோரிகள் உள்ளன. கொழுப்பு, 0 மி.கி., கார்போஹைட்ரேட் 4 கிராம், புரோட்டீன் 1 கிராம் உள்ளன. அப்படியானால், பாயசத்தில் சேர்க்கப்படும் ஒரு டேபிள்ஸ்பூன் (15 கிராம்) ஏலக்காய் எத்தனைப் பலன்களைத் தரும் எனப் பார்த்துக்கொள்ளுங்கள். இவை தவிர கால்சியம், வைட்டமின் சி, வைட்டமின் பி 6, இரும்புச்சத்து, மக்னீசியம் அனைத்தும் நிறைவாக உள்ளன. ஏலக்காய் சில புற்றுநோய்களைத் தடுக்கக்கூடியது; விக்கலைப் போக்கும்; ஜலதோஷம், ஜுரத்துக்கு நல்லது; வாய் துர்நாற்றத்தை விரட்டும்; இதயநோய்களைத் தடுக்கும்; கொலஸ்ட்ராலைக் கட்டுப்படுத்தும்; சிறுநீர் பிரச்னைகளுக்கு நல்ல தீர்வு தரும்; இரைப்பை பிரச்னைகளைப் போக்கும்; பல் நோய்களுக்கு எதிராகச் செயல்படும்; மனச்சோர்வைப் போக்கும்; ரத்த ஓட்டத்தைச் சீராக்கும்; இது ஒரு சிறந்த நச்சு நீக்கியும்கூட. அதோடு பாயசத்தில் சேர்க்கப்படும் முந்திரி, உலர் திராட்சை அனைத்தும் நம் உடலுக்கு வலுவூட்டக்கூடியவை. பாயசத்தை வீட்டில் ஆரோக்கியமான முறையில் தயாரித்துச் சாப்பிடுவது நல்லது. சர்க்கரை நோயாளிகள் மட்டும் பாயசத்தைத் தவிர்க்கவும். அதோடு இது தினமும் செய்து சாப்பிடக்கூடிய ஒரு பதார்த்தம் அல்ல. விசேஷங்களின்போது மட்டும் சாப்பிடப்படுவது என்பதால், எப்போதாவது பாயசத்தைச் சாப்பிடுவதில் தவறே இல்லை.’’ என்கிறார் சௌமியா.
பிறகென்ன... பண்டிகை, விருந்து, விழாக்களில் பாயசத்தை ஒரு கை பார்த்துவிடலாம்தானே!

No comments:

Post a Comment