தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 14, 2017

சால்மலா ஆற்றுக்குள் ஆயிரம் லிங்கம்

கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் இருந்து சுமார் 17 கிலோமீட்டர் உள்ள சால்மலா ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன.
சால்மலா ஆற்றுக்குள் ஆயிரம் லிங்கம்
கர்நாடக மாநிலத்தின் வடக்குப் பகுதியில் சீர்சி என்ற ஊர் உள்ளது. இங்கிருந்து சுமார் 17 கிலோமீட்டர் பயணம் செய்தால், சால்மலா ஆற்றை அடையலாம். இந்த ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளில் ஆயிரம் (சஹஸ்ர) லிங்கங்கள் இருக்கின்றன. என்ன ஆச்சரியமாக இருக்கிறதா? உண்மைதான். ஆற்று நீரோட்டம் உள்ள பகுதிகளில்தான் இந்த அத்தனை லிங்கங்களும் உள்ளன.
இந்த லிங்கங்கள் அனைத்தும் ஆவுடையாருடன் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. ஒருசில லிங்கங்களுக்கு முன்பு நந்தி சிலையும் செதுக்கப்பட்டுள்ளன. மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியான இங்கு தென்மேற்கு பருவ மழையின் போது வெள்ளம் கரை புரண்டு ஓடும். அப்போது இந்தப் பகுதியைப் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருக்கும்.
ஆலயங்களில் உள்ள லிங்கங்களுக்கு நடத்தப்படுவது போல் இந்த லிங்கங்களுக்கு அபிஷேகம் எதுவும் தேவையில்லை. ஏனெனில் இந்த லிங்கங்களுக்கு எந்நாளும், எப்பொழுதும் நீரால் அபிஷேகம்தான். இதுதான் இங்குள்ள சஹஸ்ர லிங்கங்களின் சிறப்பாகும். ஆண்டுதோறும் மகா சிவராத்திரி விழாவின் போது, இந்தப் பகுதியில் குவியும் பக்தர்களின் எண்ணிக்கை கணக்கில் அடங்காதது.
இந்த இடத்திற்கு வருவது ஒரு வித மன அமைதியையும் கொடுக்கிறது. சுற்றிலும் பச்சைப்பசேல் என்ற மரங்களும், சலசலத்து ஓடும் நதியும், அதன் நடுவே அமைந்திருக்கும் லிங்கங்களும் ஆத்ம திருப்தியைக் கொடுக்கின்றன. இறைவன் எங்கும் நிறைந்தவன் என்பதை, இந்தப் பகுதியில் இருக்கும் போது நாம் உணர முடிகிறது.
இந்த ஆயிரம் லிங்கங்களும் எப்பொழுது உருவாக்கப்பட்டது? யாரால் உருவாக்கப்பட்டது? என்பதுதான் புரியாத புதிராக இருக்கிறது. யாராக இருந்தாலும், இப்படியொரு சிந்தனையை வெளிப்படுத்தியவர், மிகப்பெரிய மகானாகவே இருக்க வேண்டும் என்கின்றனர், இந்தப் பகுதியைச் சேர்ந்த மக்கள்.
இதே போல கம்போடியா நாட்டில் ஓடும் ஒரு ஆற்றிலும் ஆயிரம் லிங்கங்கள் செதுக்கப்பட்டுள்ளன. கம்போடியாவில் உள்ள உலகப் புகழ்பெற்ற கோவில் அங்கோர்வட். இங்கிருந்து சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் உள்ள கபல்சியான் என்ற ஊரில் ஓடும் ஆற்றில்தான் இந்த ஆயிரம் லிங்கங்களும் அழகுற வடிக்கப்பட்டுள்ளன.
இங்கு சிவலிங்கம் தவிர, ராமர், கிருஷ்ணர், லட்சுமி போன்ற சுவாமி சிலைகளும் இருப்பது ஆச்சரியம் அளிப் பதாக உள்ளது. ஆனால் இந்தப் பகுதிக்குச் செல்ல சபரிமலையைப் போன்று, காடுமேடுகளைக் கடந்துதான் செல்ல வேண்டும். கபால் சியான் என்றால் ‘பாலம்’ என்று பொருள். இங்கு இயற்கையாக அமைந்த கல் பாலம் ஒன்று இருக்கிறது. இதன் வழியாகத்தான், சஹஸ்ர லிங்கம் இருக்கும் இடத்தை அடைய வேண்டும். ஆறு மட்டுமின்றி இங்கு 50 அடி உயரம் கொண்ட ஒரு நீர்வீழ்ச்சியும் இருக்கிறது.
இந்தியாவின் ஒரு கரையில் உள்ள கர்நாடக மாநிலத்திலும், பல மைல்களுக்கு அப்பாலுள்ள கம்போடியா நாட்டிலும் ஒரே போன்று ஆயிரம் லிங்கங்கள் வடிக்கப்பட்டிருப்பதும், அதுவும் அவை அனைத்தும் ஆற்றுக்குள் இருக்கும் பாறைகளிலேயே செதுக்கப்பட்டிருப்பதும், இரண்டிற்கும் ஏதேனும் தொடர்பு இருக்குமா? என்ற கேள்வியையும் எழுப்பாமல் இல்லை.

No comments:

Post a Comment