தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 23 மார்ச், 2017

ராமபிரானை பிடித்த மூன்று தோஷங்கள்

ராவணனை வதம் செய்த ராமபிரானுக்கு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டன. அந்த தோஷங்கள் என்ன என்பதையும், தோஷத்தை போக்க ராமன் வழிபாடு செய்த கோவிலையும் பார்க்கலாம்.
ராமபிரானை பிடித்த மூன்று தோஷங்கள்
ராவணனிடம் குணம்தான் கெட்டுப் போய் கீழானதாக இருந்தது. ஆனால் அவனது பலமும், பக்தியும் அனைவரை விடவும் உயர்வானதாகவே அமைந்திருந்தது. அந்த அதீத பக்தி அவனிடம் இருந்த காரணத்தினால்தான், ராவணனை வதம் செய்த ராமபிரானுக்கு மூன்று விதமான தோஷங்கள் ஏற்பட்டன. அவையே பிரம்மஹத்தி தோஷம், வீரஹத்தி தோஷம், சாயாஹத்தி தோஷம் என்பன.
மூன்று தோஷங்கள் :
ராவணன் அசுரனாக வாழ்ந்தாலும், பிராமண குலத்தில் தோன்றியவன். ஆகையால்தான் அவனைக் கொன்ற ராமருக்கு, ‘பிரம்மஹத்தி தோஷம்’ பிடித்துக்கொண்டது. மேலும் ராவணன் மிகச் சிறந்த மாவீரராக அறியப்பட்டவன். கார்த்தவீர்யார்ஜூனன், வாலி ஆகிய இருவரையும் தவிர, தன்னுடன் போரிட்ட அனைவரையும் வெற்றி கொண்டவன்.
ஒரு சிறந்த வீரனைக் கொன்றதால் ராமருக்கு, ‘வீரஹத்தி தோஷம்’ உண்டானது. மூன்றாவதாக, ராவணன் சிறந்த சிவபக்தன். வீணை வாசிப்பதில் வல்லமை படைத்தவன். அதுவும் சாம கானம் பாடுவதற்கு அவனுக்கு நிகராக எவருமில்லை. இதனை ‘சாயை’ என்பார்கள். சாயை என்பது ஒளியை குறிக்கும். ஒளி போன்ற பெருமை வாய்ந்த குணங்களை குறிப்பிடும் ‘சாயை’ பெற்ற ராவணனைக் கொன்றதால், ‘சாயாஹத்தி தோஷம்’ ராமரை பற்றிக்கொண்டது.
சாயாஹத்தி தோஷம் நீங்க பட்டீஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபட்டார் ராமபிரான். அதே போல் வீரஹத்தி தோஷம் விலக, வேதாரண்யம் (திரு மறைக்காடு) என்ற திருத்தலத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து பூஜித்தார். பிரம்மஹத்தி தோஷம் நீங்குவதற்காக ராமேஸ்வரத்தில் சிவலிங்கம் பிரதிஷ்டை செய்து வழிபாடு செய்தார்.
விசேஷ திருவிழா :
ராமேஸ்வரம் ராமலிங்க சுவாமி கோவிலின் மூன்றாம் பிரகாரம் 4 ஆயிரம் அடி நீளம் கொண்டதாகும். இதன் வடமேற்கு மூலைப் பகுதியில் ஸ்ரீராமரும், சீதாதேவியும் ராமலிங்கத்தை பிரதிஷ்டை செய்வது சுதை வடிவில் உருவாக்கப்பட்டுள்ளது. ராமலிங்க பிரதிஷ்டை விழா இக்கோவிலில் பத்து நாட்கள் நடை பெறும்.
ஆனி மாதத்தில் நடைபெறும் இந்த விழாவில் முதல் நாள் மாலை ராமர், லட்சுமணருடன் தங்க கேடயத்தில் திட்டக்குடி நான்குமுனை சந்திப்பிற்கு எழுந்தருள்வார். அங்குள்ள துர்க்கை அம்மன் கோவில் அருகில் ராவண சம்ஹாரம் நடைபெறும். அப்போது ராமரின் வெள்ளி வேலால் ராவணன் தலை கொய்யப்பட்டு, ராவணனுக்கு முக்தி அளிக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. தொடர்ந்து ராமபிரானுக்கு பால் அபிஷேகம் நடைபெறும். பின்னர் நான்கு ரத வீதிகளில் ராமர், உலா வந்து பக்தர் களுக்கு அருள்பாலிப்பார்.
2–ம் நாள் விழாவில் தனுஷ்கோடி ரோட்டில் உள்ள கோதண்டராமர் கோவிலில் ‘சேது பந்தனம்’ மற்றும் ‘விபீஷணர் பட்டாபிஷேகம்’ நடைபெறும். மூன்றாம் நாள் ராமலிங்க பிரதிஷ்டை விழா பர்வதமர்த்தினி ஆலயத்தில் நடத்தப்படும். அதையடுத்தும் 7 நாட்கள் இத்திருவிழா தொடரும். நிறைவு நாளன்று ராமநாத சுவாமியும், ராமபிரானும் பரிவார தேவதைகளோடு அழகிய ரதத்தில் உலகம் உய்வடைய ஊர்வலம் வருவார்கள்.
படிக லிங்கம் :
விழா நாட்களில் ராவணன் சீதையை கவர்ந்து செல்வது, சடாயு தடுத்து போர்புரிவது, அனுமன் இலங்கை செல்வது, சேது அணை கட்டுவது, ராமபிரான் போரில் ராவணனை வீழ்த்துவது, விபீஷணருக்கு பட்டாபிஷேகம் செய்வது, ராமன் தன் பிரம்மஹத்தி தோஷம் விலக ராமேஸ்வரத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபடுவது முதலிய வைபவங்கள் நடைபெறுகின்றன.
ஜோதிர்லிங்க தலங்களில் ஒன்றான ராமேஸ்வரம் சம்பந்தர், அப்பரால் பாடல் பெற்றதாகும். இத்தல மூலவர் சன்னிதியில் உள்ள படிக லிங்கத்திற்கு தினமும் ஆறு கால பூஜை நடக்கிறது. ‘படிக லிங்க தரிசனம் - கோடி பாப விமோசனம்’. இந்த படிக லிங்கம் ஆதிசங்கரரால் பிரதிஷ்டை செய்யப்பட்டதாகும்.
எத்தகைய கொடிய தோஷமாக இருந்தாலும், ராமேஸ்வரம் கடலில் நீராடி எழுந்து, ஈசனை வழிபட்டால் உடனே விலகும் என்பது நம்பிக்கை. இங்குள்ள அக்னி தலத்தில் நீராடி அந்த கடல் மண்ணில் சிவலிங்கம் பிடித்து பூஜித்து வழிபட்டால் முற்பிறவி, இப்பிறவி தோஷங்கள் விலகும் என்பதுவும் நம்பிக்கையாக இருக்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக