தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, March 14, 2017

ஔவையார் அறம்!!


பாடம் 1: விநாயகப் பெருமானை வணங்குதல்

தடைகளை நீக்கும் தெய்வமான விநாயக பெருமானை தூய பக்தியுடனும் அன்பு கலந்த நெஞ்சத்துடனும் நாள்தோறும் மலர்களைக் கொண்டு பூஜித்து வந்தால்,

1) சொல்வன்மை பெருகும்
2) நல்ல எண்ணங்கள் உருவாகும்
3) செல்வ வளம் பெருகும்

பாடம் 2: பயன் கருதா உதவி

ஔவையார் இந்த மூதுரையின் மூலமாக கர்மநியதியைப் பற்றி விளக்குகிறார். ஒருவருக்கு உதவி செய்வது நல்வினையாகும். நல்வினை செய்தால் நல்விளைவு தான் விளையும். உதவி தேவைபடுவோருக்கு உதவி செய்யவேண்டியது மனிதர்களின் கடமையாகும். கடமையைச் செய்வதற்குப் பலனை எதிர்பார்க்க கூடாது என பகவான் கிருஷ்ணர் கீதையில் கூறுகிறார்.

மகாபாரதத்தில் துரியோதணன் கர்ணனை தன் தீய செயல்களுக்கு பக்கபலமாக பயன்படுத்துவதற்காக தான் கர்ணனுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து வந்தான். இது பயன்கருதி செய்யப்பட்ட உதவியின் அடையாளமாகும். ஆதலால் அது துரியோதணனுக்கும் கர்ணனுக்கும் எந்தவொரு நன்மையும் விளைவிக்கவில்லை. ஆனால் எந்தவொரு பயனும் கருதாமல் செய்யப்படும் உதவி தான் மேன்மையானது.

உதாரணமாக, தென்னை மரத்திற்கு நீர் ஊற்றி வளர்த்தால் சில ஆண்டுகளுக்குப் பிறகு அது நமக்கு சுவைமிக்க இளநீரை தருகின்றது. உயர்வான குணமுடைய ஒருவருக்கு செய்யப்படும் உதவியும் அதுபோல தான். உயர்வான குணமுடையவர் எப்போதும் நாம் செய்த உதவியை மறக்க மாட்டார். நமக்கு உதவி தேவைபடும் போது உடனே வந்து உதவுவர்.

பாடம் 3: உதவியின் பயன்

முந்தைய பாடத்தில் உதவி எப்படி செய்யப்பட வேண்டும் என்பதைப் பார்த்தோம். இப்போது எத்தகையவருக்கு உதவி செய்யப்பட வேண்டும் என்பதைப் பார்ப்போம்.

உதவி செய்யும் போது நாம் உதவி பெறுபவரின் குணங்களை ஆராய்ந்து உதவ வேண்டும். நல்ல குணங்களை உடைய ஒருவருக்குச் செய்யப்படும் உதவி கல்லின் மீது பொறிக்கப்பட்ட எழுத்து போல நெடுங்காலத்திற்கு நிலைத்திருக்கும். தீய குணங்களை உடைய ஒருவருக்குச் செய்யப்படும் உதவி நீரில் எழுதிய எழுத்து போல விரைவில் அழிந்துவிடும்.

உதாரணமாக, கோயில் உண்டியல்களில் போடப்படும் பணம் எத்தகையவருக்குப் போய் சேர்கின்றது என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். அப்பணம் நன்மை விளைவிக்கும் செயல்களுக்காக பயன்படுத்தப்படுகின்றதா என்பதையும் ஆராயவேண்டும். இல்லையேல் கோயில் உண்டியல்களில் போடும் பணத்தை சேர்த்து வைத்து ஏழை எளியவர்களுக்கு உதவும் நற்பணி மன்றங்களுக்கு நன்கொடையாக வழங்கலாம்.

நினைவில் கொள்ளுங்கள், நீங்கள் செய்யும் செயல்கள் தான் பல பிறவிகளிலும் உங்களோடு பயணிக்கும். ஆகவே எப்போதும் நன்மைகளையே நாடி செய்யுங்கள்.
 

பாடம் 4: செல்வமும் சுற்றமும்

இளமைக் காலத்தில் வறுமை என்பது கொடியது என ஔவையார் பாடியுள்ளார். அதேபோல முதுமையில் செல்வம் இருப்பது எந்தவொரு பயனும் அற்றது என ஔவையார் கூறுகின்றார். இப்பாடலில் ஔவையார் இரண்டு வெவ்வேறு கருத்துகளைக் குறிப்பிடுகின்றார்.

1) இளமையில் தேவை செல்வம்
2) முதுமையில் தேவை சுற்றம்

இளமையில் பொருட்செல்வத்தை தேடி சம்பாதிக்க வேண்டும். அந்த செல்வத்தை கொண்டு தனது தேவைகளைப் பூர்த்தி செய்துவிட்டு, தேவைக்கு அதிகமானதை தேவைபடுவோருக்கு தானமாக அளிக்கவேண்டும். இதனால் சுற்றமும் சூழமும் பெருகும். முதுமையில் பணத்தைக் கொண்டு வாங்கமுடியாத நட்பும் நேசமும், நல்ல சுற்றத்தாரால் கிடைக்கும்.

இக்கருத்துகளை விளக்குவதற்காக, பூஜை இல்லாத நேரத்தில் பூத்துக் குலுங்கும் மலர்களையும், காதலனைப் பிரிந்திருக்கும் காதலியையும், ஔவையார் உவமையாகப் பயன்படுத்துகிறார்.
 

பாடம் 5: உண்மையான நட்பு

இந்த மூதுரையில் ஔவையார் உண்மையான நட்பை பற்றியும் மேன்மையான குணமுடையவர்கள் பற்றியும் விளக்குகின்றார்.

பால் பலமுறை சூடு படுத்தப்பட்டாலும் அதன் சுவை மாறாது. அதுபோல நம்முடன் உண்மையாக நட்பு கொள்ளாதவர்கள் எத்தனை காலம் நம்முடன் சேர்ந்திருந்தாலும் அவர்கள் உண்மையான நண்பர்கள் ஆகமாட்டார்கள். ‘இடுக்கண் களைவதாம் நட்பு’ என்றார் தெய்வப்புலவர். தன் நண்பனுக்கு துன்பம் வருங்கால் ஓடிவந்து உதவுபவனே உண்மையான நண்பன். மற்றபடி சிரித்து மகிழ்வதற்காக மட்டுமெ நட்பு கொள்பவர்கள் உண்மையான நண்பர்கள் ஆகமாட்டார்கள்.

சங்கு பலமுறை சூடு படுத்தப்பட்டாலும் அதன் வெண்மை நிறம் மாறாது. அதுபோல மேன்மையான குணங்களை உடையவர்கள் எத்தகைய துன்ப நிலையில் தள்ளப்பட்டாலும் குணம் மாறமாட்டார்கள். இதையே பகவத் கீதையில், பகவான் கிருஷ்ணர்

“எவனொருவன் நண்பர்-பகைவர், புகழ்ச்சி-இகழ்ச்சி, மானம்-அவமானம், வளமை-வறுமை, இன்பம்-துன்பம் ஆகியவற்றை சமமாக பாவித்து எந்தவொரு சந்தர்ப்பத்திலும் மேன்மையான குணங்களிலிருந்து விலகாமல் நிலைபெற்றிருக்கிறானோ, அத்தகைய ஒருவன் எனக்கு மிகவும் பிரியமானவன்.” (12:18)
 

பாடம் 6: முயற்சியைக் கைவிடக் கூடாது

இந்த மூதுரையில், ஔவையார் கர்மங்கள் (செயல்கள்) எப்படி செய்யப்பட வேண்டும் என்பதை விளக்குகின்றார். எந்தவொரு செயலும் உடனடியாக வெற்றியை தந்துவிடாது. முயற்சியுடனும், உறுதியுடனும், பொறுமையுடனும் செய்யப்படும் செயல் நிச்சயமாக வெற்றியை ஈட்டி தரும்.

உதாரணமாக, வளர்ந்து நிற்கும் மரங்கள் எல்லாம் கனிகள் தந்துவிடாது. பருவக் காலம் வந்தால் மட்டுமே அது கனிகள் தரும். அதுபோல எந்தவொரு நற்செயலும் காலமாகினாலும், கண்டிப்பாக நல்ல விளைவை தான் ஏற்படுத்தும். ஆகையால் எந்தவொரு நற்செயலையும் உறுதியுடனும் முயற்சியுடனும் செய்யவேண்டும்.

சனாதன தர்மத்தைப் பொறுத்தவரை எல்லா மனிதர்களுக்கும் பொதுவான சில கடமைகள் உள்ளன. உதாரணமாக, தானம் செய்தல். தன் தேவைக்கு அதிகமாக உள்ளதை தேவைபடுவோருக்கு தருதலே தானம் ஆகும். கடமைகளை செய்வதால் ஒரு மனிதன் நற்பேறு அடைகின்றான். மற்றவருக்கு உதவுவதால் என்ன பலன் என்று கருதக் கூடாது. ”கடமைகளைச் செய், பலனை எதிர்பார்க்காதே” என கிருஷ்ணர் கூறுகிறார். சக மனிதர்களுக்கு உதவுவது நம் கடமை என்பதால், அதற்கான பலனை எதிர்பார்ப்பது தவறாகும். பலனை எதிர்ப்பார்க்காமல் கடமைகளைச் செய்து வருவதால், செயல்களின் பலன்கள் வரவேண்டிய நேரத்தில் தாமாகவே நம்மைத் தேடி வரும்.

முழுமனதுடன் எந்தவொரு எதிர்ப்பார்ப்புமின்றி செய்யப்படும் செயல் தான் முழுமையான நல்விளைவுகளை அளிக்கும். பலன்கருதி செய்யப்படும் செயலோ எந்தவொரு நன்மையும் விளைவிக்காது.

பாடம் 7: வினைத் திட்பம்

ஒரு நல்ல செயலை ஆற்றுவதற்கு போதுமான துணிவும் உறுதியும் கொண்டிருத்தல் வினைத்திட்பம் ஆகும்.

பெரும் பாரத்தை தாங்கும் போது கல்லால் செய்யப்பட்ட தூண் உடைந்து போகுமே தவிர, வளைந்து கொடுக்காது. அதுபோல, பிறருக்கு நன்மைகள் செய்யும் நற்குணம் உடைய ஒருவர் தீய செயல்களைச் செய்பவருக்கு எப்போதும் பணிந்து போக மாட்டார்கள். தீய செயல்களைச் செய்பவர்களை எதிர்த்துப் போராடி உயிர் துறப்பார்களே அன்றி, ஒருகாலும் தீயவர்களுக்கு அடிபணிய மாட்டார்கள்.

நம் பாரத தேசத்தை அல்லும் பகலும் பாதுகாக்கும் இராணுவ வீரர்களே இந்த மூதுரைக்கு ஒரு நல்ல உதாரணமாவர். நம் வீரர்கள் நம்முடைய பாதுகாப்பிற்காகவும் நாட்டின் அமைதிக்காகவும் உறுதியுடன் உழைக்கின்றனர். அவர்களின் தியாகத்திற்கும் அர்பணிப்பிற்கும் நாம் எப்போதும் நன்றி காட்டவேண்டும்.

பாடம் 8: அறிவு, செல்வம், குணம்

குளத்தில் உள்ள நீரின் அளவைப் பொறுத்து தான் அதில் மலரும் தாமரையின் உயரமும் அமையும். அதுபோல ஒருவன் கற்கும் நூல்களின் அளவைப் பொறுத்தே அவனின் அறிவும் அமையும்.

அதுபோல ஒருவன் வாழ்க்கையில் எவ்வளவு மேன்மையான செயல்களை ஆற்றுகின்றானோ அதன் அளவே அவன் வாழ்க்கையில் இன்பமும் அமையும்.

ஒருவனின் குணம் அவனின் வளர்ப்பு எத்தகையது என்பதைப் பொறுத்தே அமைகின்றது.

ஆகவே நிறைய நல்ல நூல்களைக் கற்கவும், மேன்மையான செயல்களை ஆற்றவும், நம் பிள்ளைகளை நல்ல முறையில் வளர்க்கவும் ஔவையார் அறிவுரை செய்கின்றார்

பாடம் 9: நல்லவர் சொல் கேள்

நல்ல செயல்களைச் செய்பவர்கள் நல்லவர்கள் எனப்படுகின்றனர். ”செயற்கரிய செய்வார் பெரியர்” என்றார் தெய்வப்புலவர். அருமையான செயல்களை செய்பவர்களே பெரியவர்கள் ஆவர்....

பாடம் 10: தீயவரைத் தவிர்த்துவிடு

தீய செயல்களை செய்பவர்கள் தீயவர்கள் எனப்படுகின்றனர். உலக மக்களை குழப்பி தீய செயல்களில் ஈடுபட தூண்டுபவர்களே மிக கொடிய தீயவர்கள் ஆவர்.

அத்தகைய தீயவரைக் காண்பதுவும், எந்தவொரு நன்மையும் விளைவிக்காத அவர்களின் சொற்களை கேட்பதுவும், தீமையான அவர்களின் குணங்களைப் பற்றி பேசுவதும், அவர்களோடு இணைந்து இருப்பதுவும் பெரும் தீமையை தான் விளைவிக்கும்.

உதாரணமாக, நாத்தீகம் என்ற பெயரில் தமிழ் மக்களைக் குழப்பி பக்தியில் இருந்து விலக்கி, மது போன்ற தீயப் பழக்கங்களுக்கு அடிமையாக்கி விட காரணமானவர்களைக் கூறலாம். இத்தகையவர்களின் சொற்களைக் கேட்பதாலோ அல்லது அவர்களைப் பற்றி பேசுவதாலோ தீமைகள் மட்டும் தான் விளையும்.

மனிதர்களுக்கு நன்மை விளைவிக்கும் நல்லவர்களின் சொற்களைக் கேட்டு பின்பற்றுவதே சிறப்பாகும்.

பாடம் 11: உலக நலனுக்காக செயல்புரிதல்

நெல்லுக்கு நீர் இறைக்கும் போது, அந்த நீர் வாய்க்கால் வழியாக ஓடி அருகிலிருக்கும் புல்லுக்கும் சேரும். உலக மக்களின் பசியை ஆற்றுவது நெல், ஆனால் புல்லோ மனிதர்களுக்குப் பயன் எதுவும் தராதது. நெல் தன்னுடைய உயரிய குணத்தால் நீரைப் பெற்றது, புல்லோ அது நெல்லுக்கு அருகிலிருப்பதால் நீரைப் பெற்றது....

பாடம் 12: தக்க துணை வேண்டும்

உமி நீங்கி செடியாக முளைப்பது அரிசியே ஆனாலும், அந்த அரிசி உமியுடன் சேர்ந்த நெல்லாக விதைத்தால் தான் முளைக்கும். அதுபோல எத்தனை ஆற்றல் உள்ளவருக்கும் தக்க துணை இருந்தால் தான் எடுத்த காரியம் நடைபெறும்.

மகாபாரதத்தில், குருக்‌ஷேத்ர போருக்கு முன்னர் அர்ஜுனனும் துரியோதணனும் ஸ்ரீ கிருஷ்ணரின் உதவியை நாடி வந்தனர். அப்போது ஸ்ரீ கிருஷ்ணர் அவர்கள் இருவரிடமும், தம்முடைய படை வேண்டுமா அல்லது துணை வேண்டுமா என கேட்டார். துரியோதணன் கிருஷ்ணரின் படையைக் கேட்டான்; அர்ஜுனனோ கிருஷ்ணரின் துணையைக் கேட்டான். இறுதியில் கிருஷ்ணரின் துணை இருந்த அர்ஜுனனே போரில் வென்றான்.

ஆகவே நம்மிடம் நிறைய ஆற்றல்கள் இருந்தாலும், அதை தக்க முறையில் செயல்படுத்த ஒரு நல்ல வழிகாட்டி நமக்கு தேவை. ஆன்மீகத்திலும் அதுபோல தான். ஆன்மீக ஈடேற்றத்திற்கு தேர்ச்சிபெற்ற ஒரு குருவின் வழிகாட்டல் மிக தேவை.

பாடம் 13: ஒருவரின் உருவத்தைக் கண்டு எடை போடாதே

ஒருவரின் புறத்தோற்றத்தைக் கொண்டு அவரை இத்தகையவர் என எண்ணுவது மனிதர்களின் இயல்பு. ஆனால் அதுவும் உலக மாயைகளில் ஒன்றே. எனவே அத்தகைய ஒரு மாயையில் நாம் விழுந்துவிடக் கூடாது என ஔவையார் உணர்த்துகின்றார்.

கற்றாழையின் இதழ்கள் பெரிதாக இருந்தாலும், அவை மணம் வீசாது. ஆனால் தாழம்பூவின் இதழ்கள் சிறிதாக இருந்தாலும், மிகுந்த மணம் வீசும். கடல் பெரிதாக இருந்தாலும் அதன் நீர் பருக உதவாது; மாறாக சிறு ஊற்றுநீர் தாகத்தைத் தீர்க்கும்.

அதுபோல வாழ்க்கையில் நாம் சந்திக்கும் நபர் எளிமையாகவும் ஏழ்மையாகவும் இருப்பதால் அவரின் குணங்களை குறைவாக கணித்து விடக் கூடாது. நற்குணங்களை நிறைவாக கொண்ட ஒருவரே உண்மையில் செல்வ செழிப்பானவர்.

பாடம் 14: மரம் போன்ற மனிதன்

இந்த மூதுரையில் ஔவையார், எழுத்தறிவு இல்லா மனிதர்களை மரத்துக்கு ஒப்பாக குறிப்பிடுகின்றார். மரங்கள் உயிருடையவை; ஆனால் ஜடமானவை. அதனால் பார்க்க முடியாது, பேச முடியாது. அதுபோல எழுத்தறிவு இல்லா மனிதர்கள் ஜடம் போன்றவர்கள். நூல்களை வாசிக்க முடியாதவர்கள்; தங்கள் அறியாமையை நீக்கிக் கொள்ள இயலாதவர்கள்.

கல்வி தான் ஒருவனுக்கு மிகவுயர்ந்த செல்வம் என்றார் வள்ளுவர். நம்முடைய பாரம்பரியத்தில் கல்வி என்பது அத்தகு சிறப்புடையதாகும். கல்வி தான் ஒருவனை உயர்த்துகின்றது. அத்தகைய கல்விக்கு அடிப்படையாவது எழுத்தறிவு. எனவே எழுத்தறிவில்லாத ஒருவன் “குருடன்” எனவும் “ஜடம்” எனவும் கூறுவர். கண்ணுடையர் என்பவர் கற்றோர் அல்லவா?

ஆகவே எழுத்தறிவின் முக்கியத்துவம் இங்கு உணர்த்தப்படுகின்றது.

பாடம் 15: கல்வியும் திறமையும்

சிலரிடம் இயல்பாகவே சில திறமை இருக்கும். ஆனால் அத்திறமையை முறையாக வளர்க்க கல்வி அவசியமாகும். உதாரணமாக, சிலர் இனிமையான குரல்வளம் கொண்டிருப்பர். தேர்ச்சிபெற்ற ஒரு இசை ஆசிரியரை நாடி தன்னுடைய திறமையை முறையாக வளர்த்துக் கொள்ள வேண்டும்.

மேலும் சிலர் மற்றவரைக் கண்டு, அவர்களைப் போலவே திறமையை வளர்த்துக் கொள்ள முயற்சி செய்வர். இவ்வாறு வளரும் திறமையில் ஆர்வமும் ஊக்கமும் உள்ளது. எனினும் போதிய வழிகாட்டுதல் இருக்காது. எனவே எந்தவொரு திறமையாக இருந்தாலும் அதை முறையாகக் கற்று பயிற்சிக்க வேண்டும்.

மயில் தன் தோகையை விரித்து ஆடுவதைக் கண்டு வான்கோழியும் தன் சிறிய சிறகுகளை விரித்து ஆடுமாம். அதுபோலத் தான் முறையாக கல்வி கற்காதவன் கொண்டிருக்கும் திறமையும் என ஔவையார் கூறுகின்றார்.

பாடம் 16: யாருக்கு உதவி செய்யக் கூடாது?

உபகாரம் என்றால் ‘நன்மை’, ‘உதவி’ எனப் பொருள்படும். இந்த மூதுரையில், யாருக்கு உதவி செய்யக் கூடாது எனவும் வரையறை உள்ளது என்பதை ஔவையார் சுட்டிக் காட்டுகின்றார்.

தேவைபடுவோருக்கு உதவி செய்ய சொல்லி வேதங்கள் புகட்டுகின்றன. ஆனால் மதுகடையில் மதுவருந்த நம்மிடம் பணம் கேட்கும் ஒருவருக்கு உதவுவது சரியா? இது தவறு. தீய பழக்கங்களும் குணங்களும் உடைய ஒருவருக்கு உதவக் கூடாது.

புலிக்கு இரக்கப்பட்டு அதன் காயத்திற்கு மருந்துபோட்டால், அது நலமாகியவுடன் மருத்துவனையே கடிக்க முயலும். அதுபோலத் தான் தீயவர்களுக்குச் செய்யப்படும் உபகாரமும், இறுதியில் நமக்கே ஆபத்தாக விளையும்.

முந்தைய காலக்கட்டங்களில் கோயில்களின் நன்கொடைகள் மக்களின் நலனுக்காக பயன்படுத்தப்பட்டன. எனவே மக்கள் வறுமைபட்டாலும் கோயில்களுக்கு தானம் தர தவறியதில்லை. ஆனால் இன்று நிலை மாறியுள்ளது. சில கோயில்களில் நன்கொடைகள் தவறாக பயன்படுகின்றது. அத்தகைய கோயில்களுக்கு தானம் அளிக்க கூடாது. மக்கள் சேவைக்காக நன்கொடையை உபயோகிக்கும் கோயில்களுக்கு மட்டுமே தானம் தரவேண்டும்.

பாடம் 17: அடக்கமுடையாரை அறிவிலர் என்றெண்ண வேண்டாம்

ஒருவர் அடக்கமாகவும் பொறுமையாகவும் இருப்பதால் அவரை நாம் அறிவற்றவர் என்று தவறாக எண்ணிவிடக் கூடாது. திறமை நிறைந்தவர் எப்போதும் அடக்கமாகத் தான் இருப்பர்.

குளத்தில் சிறிய மீன்கள் ஓடுகையில் அவற்றை விட்டுவிட்டு, பெரிய மீனுக்காக கொக்கு பொறுமையாகக் காத்திருக்கும். அதுபோல திறமைசாலிகள் தக்க நேரத்தில் தங்களின் திறமையைக் காட்டும்வரை அமைதியாகவும் அடக்கமாகவும் இருப்பார்கள்.

பாடம் 18: யார் உண்மையான உறவினர்?

ஒரு குளத்தில் நீர் நிறைந்திருக்கும் வரை கொக்குகளும் நாரைகளும் அக்குளத்தின் அருகிலே இருந்து அதனால் பயனடையும். ஆனால் குளத்தில் நீர் வற்றிவிட்டால் அவை வேறு குளத்தை நாடி பறந்து போகும். அக்குளத்தில் இருந்த தாமரை மலர்களோ எந்தவொரு சந்தர்ப்பத்திலும் குளத்தை விட்டு பிரியாது அதனுடனே இருக்கும்.

அதுபோலவே நம் வாழ்க்கையிலும், இன்பங்களிலும் துன்பங்களிலும் எப்போதும் நம் அருகில் இருப்பவர்களே உண்மையான உறவினர்கள்.

இராமாயணத்தில் லட்சுமணன் தன் அண்ணன் இராமனுக்கு எந்தவொரு துன்பம் வந்த போதிலும், எப்போதும் அவரை விட்டு பிரிந்ததே இல்லை. தன் அண்ணன் மாட மாளிகையில் வாழ்ந்த போதிலும், அடர்ந்த காட்டினில் வாழ்ந்த போதிலும், பல இன்னல்களை கண்ட போதிலும் லட்சுமணன் எப்போதும் அவரை விட்டு பிரிந்ததே இல்லை. அத்தகைய உன்னதமான உறவுமுறை இந்த பாரத மண்ணிற்கே உரியது.

பாடம் 19: மேன்மையான குணமுடையவரின் மதிப்பு

தங்கத்தால் செய்யப்பட்ட குடம் உடைந்தாலும் தங்கத்தின் மதிப்புக்கு எந்தவொரு குறையும் வராது. ஆனால் மண்ணால் செய்யப்பட்ட குடம் உடைந்தால், அது வெற்று மண்ணாகி விடும். வெற்று மண்ணுக்கு மதிப்பில்லை.

அதேபோல மேன்மையான குணங்களை உடையவர் எந்தவொரு வறுமையான நிலையை அடைந்தாலும் அவரின் மதிப்பு குறையாது. ஆனால் கீழ்மையான குணங்களை உடையவரிடம் பணமும் பொருளும் இருக்கும்வரை தான் மதிப்பும் மரியாதையும் இருக்கும். அது இல்லாவிட்டால் எந்த மதிப்பும் இருக்காது.

இந்த மூதுரையில் ஔவையார் இரண்டு வகையாக கிடைக்கும் மதிப்பை பற்றி உணர்த்துகின்றார்.
1) குணத்தால் கிடைக்கும் மதிப்பு
2) பணத்தால் கிடைக்கும் மதிப்பு

குணத்தால் கிடைக்கும் மதிப்பு நிலையானது. அஃது எப்போதும் அழியாதது. ஆனால் பணத்தால் கிடைக்கும் மதிப்பு நிரந்தரமற்றது. அத்தகைய மதிப்பு பணம் போய்விட்டால் உடனே போய்விடும்.

ஆகவே ஏழையாக இருந்தாலும் பணக்காரனாக இருந்தாலும் யாவரும் நல்ல குணங்களைக் கொண்டிருக்க வேண்டும். ஏனென்றால் நற்குணங்கள் தான் ஒருவரின் நிலையான மதிப்பை நிர்ணயிக்கும்.

பாடம் 20: விதியின் பயன்

இந்த மூதுரையில், ஔவையார் விதியைப் பற்றி விளக்குகின்றார். விதி என்றால் ஒருவர் இப்பிறவியில் அனுபவிக்க வேண்டிய கர்மவிளைவு (பிராரப்த கர்மா).

வாழ்க்கையின் நான்கு குறிக்கோள்
1) அறம்
2) பொருள்
3) இன்பம்
4) மோட்சம்

பொருளும் இன்பமும் தேவையானது; ஆனால் நிலையற்றது. தர்மமும் மோட்சமும் நிலையானது; முக்கியமானது.

ஆழமான கடலுக்குச் சென்று ஒரு பாத்திரத்தை முக்கினால், பாத்திரத்தின் அளவே நீர் எடுக்க முடியும். ஆழ்க்கடலில் நீர் நிறைந்திருந்தாலும் நம்மால் பாத்திரத்தின் அளவே நீர் எடுக்க முடியும்.

அதுபோல, ஒருவருக்கு நிறைந்த பொருள்வளமும் தக்க வாழ்க்கைத்துணையும் அமைந்திருந்தாலும் அவர் என்ன அனுபவிக்க வேண்டுமோ அதை அனுபவித்தாக வேண்டும். சிலர் நிறைந்த பொருள்வளம் மற்றும் தக்க வாழ்க்கைத் துணை அமைந்தாலே போதும் வாழ்க்கை இன்பமாக இருந்திடும் எனக் கருதுவர். பொருளையும் இன்பத்தையும் அடைந்துவிட்டாலே போதும் என எண்ணுவது தவறாகும். வாழ்க்கையில் பொருள் மற்றும் இன்பம் ஆகியவையை விடுத்து அறம் மற்றும் மோட்சம் என்ற இரண்டு உள்ளது. அவை தான் மிக முக்கியமானவை.

நம்மை நோக்கி எய்தபட்ட அம்பு போல கர்மவினையானது நம்மீது எத்தருணத்திலும் பாய காத்துக் கொண்டிருக்கையில், எப்போது என்ன வேண்டுமானாலும் ஆகலாம் என்ற நிலை தான் இந்த வாழ்க்கை. பொருளும் இன்பமும் தேவை என்றாலும், தர்மமும் மோட்சமும் அதைவிட முக்கியமானவை.

விதியின் வழியே எல்லாம் நடக்கும் என்றாலும், கடவுளின் துணையால் விதியையும் வெல்லலாம். தூய பக்தியும் நிறைவான ஞானமும் கொண்டிருக்கும் ஒருவன் விதியை வென்றிடலாம். ஆகவே தர்மத்துக்கும் மோட்சத்துக்கும் அடித்தளமான ஆன்மீகத்திலும் ஈடுபாடு கொள்ளவேண்டும்.

பாடம் 21: உடன்பிறந்தாரும் உடன்பிறவாதாரும்

நம்முடன் பிறந்தவர்களும் நம் சொந்த பந்தமும் மட்டுமே நமக்கு உதவுவர் என்ற எண்ணத்தைக் கொண்டிருக்க கூடாது. சில சமயங்களில் நம் உறவினரே நமக்கு ஆபத்தை விளைவிப்பார்கள்.

உதாரணமாக, நமக்கு வேதனையைக் கொடுக்கும் நோய் நம் உடம்பில் உருவானதே. ஆனால் அதைக் குணமாக்கும் மூலிகையும் மருந்தும் எங்கோ வனத்திலோ அல்லது மலையிலோ உருவானதாக இருக்கும்.

அதுபோல நம்முடன் இரத்த தொடர்பில்லாதவர் கூட நமக்கு தக்க சமயத்தில் உதவ முன்வருவர். ஆகையால் நாம் எப்போதும் எல்லோரிடமும் நல்ல முறையில் அன்போடு பழக வேண்டும். சாதி, சொந்தபந்தம் என்ற பாகுபாடு எண்ணம் கொண்டு மற்றவர்களை அவமதித்தலும் நிராகரித்தலும் முறையல்ல.

சொந்தமாக இருந்தாலும் எதிலராக இருந்தாலும், முடிந்தவரை எல்லோரிடமும் சமமாகவும் அன்போடும் நடந்துகொள்ள வேண்டும்.

இதையே பகவத் கீதையில், ”மித்ர, அரி, சாதுஷு, பாபேஷு சம புத்திர் விஷிஷ்யதே” என பகவான் கூறுகிறார்.

“நண்பர்கள், எதிரிகள், சாதுக்கள், பாவிகள் என அனைவரையும் சமமான மனத்துடன் நடத்துக” (பகவத் கீதை 6:9)

பாடம் 22: நல்ல மனைவி

நல்ல மனைவி வீட்டில் இருந்தால், அந்த வீட்டில் எந்தவொரு குறையும் இருக்காது. மனைவி மற்றவருக்கு துன்பம் விளைவிக்கும்படியும் கடுமையான சொற்கள் பேசுபவளாகவும் இருப்பால் என்றால், அந்த வீடு புலி வசிக்கும் குகை போல மாறிவிடும் (அந்த வீட்டிற்கு யாரும் வரமாட்டார்கள்)

“இல்லதென் இல்லவள் மாண்பானால்; உள்ளதென்
இல்லவள் மாணாக் கடை.” (குறள் 53)

நற்பண்பு மிக்க மனைவியை உடையவனுக்கு வாழ்க்கையில் இல்லாதது என்ற எதுவுமில்லை. தீய பண்புகளை உடைய மனைவியைக் கொண்டிருந்தால் அவனுக்கு வாழ்க்கையில் இருப்பது எதுவுமில்லை.

ஒரு குடும்பத்தின் செல்வமாக மனைவி கருதபடுகின்றாள். இதனாலே மருமகளை “மாட்டுப்பெண்” என்பர். மாடு என்றால் செல்வத்தைக் குறிக்கும் சொல். அன்பு, அறிவு, பண்பு, ஒழுக்கம், திறமை ஆகிய குணங்களைத் தான் ஒரு மாட்டுப்பெண் சீதனமாகக் கொண்டு வருவாள்.

பொன்னும் பொருளும் அழிந்தாலும் மாட்டுபெண் ”கொண்டுவந்த” நல்ல குணங்கள் நிலைத்திருக்கும்.

பாடம் 23: செயலாற்றும் முன் சிந்திக்க வேண்டும்

இந்த மூதுரையில், ஔவையார் கர்மநியதியை விளக்குகின்றார்.

நினைத்தபடியே எதுவும் நடக்கவில்லையே என வருத்தம் கொள்வது மடமையாகும். இன்பமும் துன்பமும் நிறைந்தது தான் வாழ்க்கை என்பதை அறிந்து, அதன்படி சுக துக்கங்களை சரிசமமாக பாவித்துக் கொள்வதே அறிவுடைமை. வாழ்க்கையில் ஒவ்வொருவரும் அனுபவிக்கும் இன்ப-துன்பம் ஆகியவை அவர் முன்னர் செய்த செயல்களின் விளைவுகளே என்பதை உணரவேண்டும்.

கற்பக மரம் என்பது கேட்டதைக் கொடுக்கும் இயல்புடைய மரமென புராணங்களில் சொல்லப்படும் ஒரு தேவலோக மரமாகும். அம்மரத்திடம் பழத்தைக் கேட்டு, அது விஷம் நிறைந்த கனியைக் கொடுத்தால் அது மரத்தின் குற்றமா அல்லது நம் குற்றமா? பழத்தைக் கேட்கும் போதே தெளிவாக சிந்தித்து கேட்டிருந்தால், நமக்கு வேண்டிய பழத்தை அது கொடுத்திருக்கும் அல்லவா?

இங்கே பழம் என்பது, வினையின் பலனைக் குறிக்கின்றது. எந்தவொரு செயலையும் செய்வதற்கு முன்னர் நன்கு சிந்தித்து செய்யவேண்டும். பின்னர் எண்ணி வருந்தும்படியான செயல்களைத் தவிர்த்து விட வேண்டும். இனிப்பான கனி வேண்டுமென்றால், இனிப்பான கனியைக் கேட்க வேண்டுமல்லவா? அதேபோல நல்ல விளைவுகளே வேண்டுமென்றால் நல்ல செயல்களை மட்டுமே செய்ய வேண்டும்.

“எண்ணித் துணிக கருமம் துணிந்தபின்
எண்ணுவம் என்பது இழுக்கு.” (குறள் 467)

”செயலாற்றுவதற்கு முன் சிந்திக்க வேண்டும் என பகவத் கீதையும் திருக்குறளும் நமக்கு உணர்த்துகின்றது. அறநூல்களையும் ஆன்மீக நூல்களையும் கற்பதாலும், பக்தி வழிபாட்டில் ஈடுபடுவதாலும் நம்முடைய சிந்தனை தெளிவாக ஆகின்றது. தூய்மையான சிந்தனையே தூய்மையான செயல்களுக்கு ஆதாரம்”

பாடம் 24: நட்பில் பிரிவு

இந்த மூதுரையில், ஔவையார் நட்பில் ஏற்படும் பிரிவின் தன்மையை விளக்குகின்றார். ஔவையார் மூன்று வகையான நட்பை அடையாளம் காட்டுகிறார்.
1) தீ நட்பு (கடைநிலை)
2) நடுநிலை நட்பு (இடைநிலை)
3) சிறந்த நட்பு (தலைநிலை)

பாறை பிளந்தால் எப்படி மீண்டும் ஒட்டாதோ அதுபோலத் தான் கடைநிலையாளர்களின் நட்பு. ஒருமுறை அந்நட்பில் பிளவு ஏற்பட்டால் அவர்கள் மீண்டும் சேரமாட்டார்கள்.

பொன் பிளந்தாலும் யாரேனும் ஒருவர் வந்து ஒட்டவைத்தால் ஒட்டிக் கொள்ளும், அதுபோலத் தான் இடைநிலையாளர்களின் நட்பு. நண்பர்களில் யாரேனும் ஒருவர் முன்வந்து சமாதானம் பேசினால், உடனே இருவரும் ஒன்றாக சேர்ந்து விடலாம்.

சலசலத்து ஓடும் நீரில் ஓர் அம்பைக் கொண்டு பிளவு ஏற்படுத்தினால், அது சில நொடிகளிலே மறைந்து விடும். அதுபோலத் தான் மேன்மையானவர்களின் நட்பு. மேன்மையானவர்களின் நட்பில் பிளவு ஏற்பட்டாலும் அது வெகுவிரைவிலே மறைந்து இருவரும் மீண்டும் ஒன்றுசேர்வர்.

இராமாயணத்தில் சிறந்த நட்பின் இலக்கணமாக ஸ்ரீராமரும் சுக்ரீவரும் திகழ்கின்றனர். கிஷ்கிந்தா காண்டத்தில் ஐந்தாவது சர்கத்தில், ஸ்ரீராமரும் சுக்ரீவரும் அக்கினி சாட்சியாக, கைகுலுக்கி நண்பர்கள் ஆகின்றனர். அப்போது அக்கினி சாட்சியாக இருவரும் ”இனி நாம் இருவரும் உயிருக்கு உயிரான இணைபிரியா நண்பர்கள். இனிமேல் நமது சுகங்களும் துக்கங்களும் ஒன்றே.” என வாக்குறுதி எடுத்துக் கொண்டனர். (இராமாயணம் 4:5:17)

நண்பனுக்கு ஆபத்து வருங்கால் உடனே வந்து உதவுபவனே சிறந்த நண்பன் என வள்ளுவர் கூறுகின்றார்.
“உடுக்கை இழந்தவன் கைபோல ஆங்கே
இடுக்கண் களைவதாம் நட்பு” (குறள் 788)

பாடம் 25: கற்றோருடன் சேர்வதே சிறப்பு

நல்ல தாமரைகள் நிறைந்த குளத்திற்கு நல்ல அன்னம் வந்து சேரும். அதுபோல கல்வி கற்றவரின் அருமை பெருமையை உணர்ந்தவர் அவரோடு சேர்ந்து இணங்கி பயனடைவார்.

ஆனால் பிணத்தை தேடிப் போய் அதை உண்ணும் காக்கைகளைப் போல் அறிவில்லாத மூர்க்கர்களை நாடிச் சென்று நட்பு கொள்பவரும் அறிவிழந்து மூர்க்கர்களாகவே ஆவர்.

இந்த மூதுரையில் ஔவையார், கற்றோருடன் நட்பு கொள்ள வேண்டும் என உணர்த்துகின்றார். ஒரு துறையைப் பற்றி முழுமையான மற்றும் தெளிவான அறிவினை உடையவரே கற்றவர் எனப்படுகின்றார்.

சனாதன தர்மத்தைப் பற்றி தமிழ்நாட்டு அரசியல்வாதிகள் தங்களின் அரசியல் லாபத்திற்காக பல்வேறு தவறான கருத்துகளைப் பரப்புகின்றனர். இவ்வாறு கண்டபடி கருத்துகளைத் தெரிவிக்கும் அவர்கள் ஆன்மீகத்தில் ஞானம் பெற்றவர்களா? இல்லை. இந்துதர்மத்தைப் பற்றி கருத்திடும் அளவுக்கு அவர்கள் இந்துதர்மத்தில் தேர்ச்சி பெற்றவர்களா? இல்லை. அத்தகைய மூர்க்கர்களின் வாய்ச்சொல்லை நம்பி இந்துதர்மத்தை தவறான கோணத்தில் எடை போடுபவர்களும் உள்ளனர். ஒரு விஷயம் யாரால் சொல்லப்படுகின்றது என்பதை அறிந்து அது உண்மை தானா என ஆராயவேண்டும். யார்யார் வாய் கேட்பினும் அதை அவ்வாறே நம்பிவிடுபவர்களை தான் ஔவையார் பிணத்தை தேடிச் சென்று தின்னும் காக்கைகளுக்கு நிகராக ஒப்பிடுகிறார்.

அதேவேளை இந்துதர்மத்தைப் பற்றி அறிந்த அறிவுடையவர்களிடம் தெரிந்து கற்றுக் கொள்பவர்களும் உள்ளனர். அத்தகையவர்களே நம் பக்கத்தின் அன்பர்கள். அவர்களையே ஔவையார் தாமரை நிறைந்த குளத்தை சேர்ந்த நல்ல அன்னங்களுக்கு நிகராகக் குறிப்பிடுகின்றார்.

கவிஞர் கண்ணதாசனின் வாழ்க்கை வரலாறு நமக்கு ஒரு நல்லப் பாடமாக அமையட்டும்!

பாடம் 26: நெஞ்சில் வஞ்சகம்

இந்த மூதுரையில், ஔவையார் இரண்டு வகையான மனிதர்களை இரண்டு வகையான பாம்புகளோடு ஒப்பிடுகின்றார்.

1) நெஞ்சில் வஞ்சகமில்லாதவர்
2) நெஞ்சில் வஞ்சகம் நிறைந்தவர்

பல்லில் விஷம் இல்லாத தண்ணீர் பாம்பு அனைவரும் உலாவும் பகல் வேளையில் அங்கும் இங்கும் உலாவும். அது நஞ்சில்லாத பாம்பு என அறிந்த மக்கள் அதை கொல்லமாட்டார்கள். ஆனால் பல்லில் விஷம் உள்ள நல்லப் பாம்பு அனைவரும் உலாவும் பகல் வேளையில் வெளிவராது. ஆள் இல்லாத இருண்ட வேளையில் தான் வெளியில் வந்து உலாவும்.

அதுபோல, நெஞ்சில் குற்றம், களவு மற்றும் வஞ்சகம் போன்ற தீய குணங்கள் இல்லாதவர்கள் எப்போதும் வெளிப்படையாகப் பேசுவார்கள். அவர்கள் அனைவரிடமும் நட்போடு பழகுவார்கள். அவர்களின் செயல்கள் தெளிவாக இருக்கும்.

ஆனால் தங்களுடைய செயல்களை மறைத்து செய்பவர்கள், மற்றவர்களுடன் நட்பு கொள்ளாதவர்கள், யாரிடமும் மனம்விட்டு பேசாதவர்கள் நெஞ்சத்தில் குற்றம், களவு மற்றும் வஞ்சகம் நிறைந்தவர்களாக கருதப்படுகின்றனர். அத்தகையவரிடம் நல்லப் பாம்பைக் கண்டு விலகுவது போல நாம் விலகி இருக்கவேண்டும்.

பாடம் 27: மன்னனும் மாசறக் கற்றோனும்

முந்தைய காலக்கட்டங்களில் ஒரு நாட்டின் மன்னன் மிகவும் உயர்வான ஒரு நிலையில் வைத்து போற்றப்பட்டான். இன்றளவிலும் சில நாடுகளில் அந்நாட்டின் மன்னர்கள் பெரிதளவு மதிக்கப்படுகின்றனர்.

அத்தகு மேன்மை மிகுந்த மன்னனைக் காட்டிலும் மாசறக் கற்றோன் சிறப்புடையவன் என ஔவையார் கூறுகின்றார். மாசறக் கற்றோன் என்றால் கற்க வேண்டியவற்றை பிழையில்லாமல் கற்றவன் எனப் பொருள்படும். அத்தகைய ஒருவன், மன்னனை விட சிறப்புடையவன் என அறியபடுகின்றான். அதற்கு காரணம், ஒரு மன்னருக்கு அவர் நாட்டில் தான் சிறப்பு கிடைக்கின்றது. ஆனால் மாசறக் கற்ற ஒருவன் எங்கு சென்றாலும் அவனுக்கு சிறப்பு கிடைக்கின்றது.

“கற்றோருக்குச் சென்ற இடமெல்லாம் சிறப்பு” என்னும்படி ஔவையார் கல்வியின் அவசியத்தையும் மகத்துவத்தையும் மிகச் சுருக்கமாக உரைத்து விட்டார்.

நம்முடைய பாரதிய சமுதாய மரபுபடி, கல்வி கற்ற ஒருவன் மறுபடியும் பிறந்தவன் எனப்படுகின்றான். எல்லா மனிதர்களும் அறியாமையோடும் செயலறிவின்மையோடும் தான் பிறக்கின்றனர்; முறையான கல்வியின் துணையோடு தங்கள் அறிவையும் செயலாற்றாலையும் பெருக்கிக் கொள்ளும் போது புதுமனிதனாக “உருவாகுகின்றான்”.

பாடம் 28: கொல்லும் கூற்றம்

கல்வி கற்காத மனிதர்களுக்கு கல்வி கற்றவர் சொல்லும் அறிவுரை எமனைப் போல் கொல்லும். தவறு செய்யும் கெட்ட மனிதர்களுக்கு அறம் எமனைப் போல் கொல்லும். மென்மையான வாழைக்கு அது ஈன்ற கன்று எமனைப் போல் கொல்லும். அதுபோல குடும்பவாழ்க்கைக்கு ஒத்து வராத பெண், வீட்டிற்கு எமனைப் போல் இருந்து அந்த வீட்டின் மகிழ்ச்சியைக் கொல்வாள்.

பாடம் 29: தனம் குறைந்தாலும் மனம் குறையாது

சந்தன மரத்துண்டு சிறியதாக ஆனாலும் அதன் மணம் குறையாது. அதுபோல அடுத்தவருக்கு உதவும் நற்குணமுடைய மேன்மையானவர்கள், தங்களின் செல்வ வளம் குறைந்து வறுமை ஏற்பட்டாலும் பிறருக்கு உதவும் அவர்களின் மனம் என்றுமே குறையாது.

பாடம் 30: பணத்தால் கிடைப்பவை

ஒருவனிடம் பணம் நிறையும் போது உறவுகள், சிறந்த பொருள்கள், கம்பீரமான உருவம், பெரிய மனிதர்களின் தொடர்பு போன்றவை வந்து சேரும். ஆனால் பணம் அவனை விட்டுச் சென்று விட்டால் பணத்தால் அவனுக்கு வந்து சேர்ந்த அனைத்தும் போய்விடும்.

பணத்தால் கிடைக்கும் அனைத்துமே தற்காலிகமான இயல்புடையவை. அவை பணம் இருக்கும்வரை மட்டுமே நம்மோடு இருக்கும். ஆகவே, பணம் இருக்கும் போது தற்காலிகமான பொருள்களின் மீது மட்டுமே செலவழித்து விடாமல் ஒருசில நல்லச் செயல்களுக்கும் தானம் தரவேண்டும். ஏனென்றால், நாம் செய்யும் கர்மங்கள் (செயல்கள்) தான் நம்முடைய உண்மையான சொத்து.

பாடம் 31: அறிவுடையவரின் இயல்பு

மரத்தை வெட்ட வருபவனுக்கும் அவன் தங்க நிழல் தந்து காக்கும் மரத்தைப் போல, நல்ல குணம் கொண்ட அறிவுடையவர் தமக்கு துன்பம் செய்தவனையும் மன்னித்து அவனுக்கு வேண்டிய நேரத்தில் உதவுவார்.


No comments:

Post a Comment