தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, March 23, 2017

முழங்கால் சுளுக்கு, வீக்கம், வலி... கைகொடுக்கும் வீட்டு வைத்தியம்!

நமது மொத்த உடலையும் தாங்கிப்பிடித்துக்கொண்டிருப்பது நம் கால்கள். அதிலும் முக்கியமானது முழங்கால். சில நேரங்களில், காலையே வெட்டி எடுத்துவிடலாமா என்கிற அளவுக்குக்கூட அதில் வலி ஏற்படுவதுண்டு. முழங்காலில் ஏற்படும் எல்லா வலிகளுக்கும் வீட்டு வைத்தியத்தில் தீர்வுகாண முடியாது. என்றாலும், சுளுக்கு, வீக்கம், வலி போன்ற சிறிய பிரச்னைகளுக்குத் தீர்வுகாண முடியும். அந்த வழிமுறைகள் என்னென்ன? பார்க்கலாம்...
முழங்கால்
ஐஸ் ஒத்தடம்
நான்கு அல்லது ஐந்து ஐஸ் கட்டிகளை ஒரு துண்டில் கட்டி, வலியுள்ள இடத்தில் 10 - 15 நிமிடங்கள் வரை ஒத்தடம் கொடுக்கலாம். இருபது நிமிடங்களுக்கு மேல் இதை செய்யக் கூடாது. அப்படிச் செய்தால் தோலில் பாதிப்புகள் ஏற்படும். ஒரு நாளைக்கு இரண்டு தடவை வலியும் வீக்கமும் குறையும் வரை இந்த ஒத்தடத்தைக் கொடுக்கலாம். சூடான நீரில் துண்டை நனைத்து ஒத்தடம் கொடுப்பதும் பயன் தரும்.
ஆலிவ் ஆயில் மசாஜ்
மூன்று அல்லது நான்கு டேபிள்ஸ்பூன் ஆலிவ் ஆயிலை வலியுள்ள இடத்தில் தடவி, 10 -15 நிமிடங்களுக்கு மசாஜ் செய்யலாம். இதை ஒரு நாளைக்கு இரண்டு முதல் மூன்று முறை செய்துவந்தால், முழங்கால் வலி குறையும்.
காலை உயர்த்தி வைத்தல்
வலியுள்ள காலை சோஃபா அல்லது தலையணை மீது முடிந்த வரை உயர்த்தி வைத்திருக்கலாம். இது வீக்கம், வலியைக் குறைக்கும்.
இஞ்சி
இஞ்சி
தினமும் இஞ்சி டீ குடிப்பது முழங்காலுக்கு நல்லது. வீக்கம் மற்றும் மூட்டு வாதத்துக்கும் இது மருந்தாக அமையும்.
மஞ்சள் பால்
மஞ்சள் பால்
இரண்டு கப் பாலில் ஒரு டீஸ்பூன் நொறுக்கிய பாதாம், வால்நட் பவுடர், சிறிது மஞ்சள் தூள் போன்றவற்றைச் சேர்த்துக்கொள்ளவும். இது அளவில் பாதியாகும் வரை காய்ச்சவும். இதை தினமும் குடித்துவர, கால் மூட்டுகள் உறுதியாகும்; முழங்கால் வலி குறையும்.
பப்பாளி விதை டீ
பப்பாளி விதை
சிறிது பப்பாளி விதைகளைப் போதுமான அளவு நீரில் போட்டு, எட்டு முதல் பத்து நிமிடங்கள் கொதிக்கவைக்கவும். பின்னர், இதில் சிறிது டீத்தூளைக் கலந்து மேலும் இரண்டு நிமிடங்களுக்கு கொதிக்கவைக்கவும். இதை வடிகட்டி, இதனுடன் ஒரு டீஸ்பூன் தேன், சிறிது கருமிளகுப் பொடி சேர்த்துக் குடிக்கலாம். ஒரு நாளைக்கு இரண்டு முறை குடித்துவர, முழங்கால் வலி குறையும்.
அன்னாசிப்பழம்
அன்னாசிப்பழத்தை ஜூஸ் ஆக்காமல் அப்படியே சாப்பிட்டுவந்தால், முழங்கால் வலி குறையும்.
கேரட்
கேரட்
கேரட், முழங்கால் மூட்டுவலிக்கு மிகச்சிறந்த மருந்து. இது சீன மருத்துவ முறைகளில் காலங்காலமாக பயன்படுத்தப்படுவது. இரண்டு கேரட்களை சிறு துண்டுகளாக அரிந்து எலுமிச்சைச் சாற்றில் கலந்து குடிக்கலாம்.
வெந்தயம்
வெந்தயம்
இரண்டு டீஸ்பூன் வெந்தயத்தை இரவிலேயே நீரில் ஊறவைத்துவிட வேண்டும். காலையில் இந்த நீரைச் சாப்பிட்டுவர, முழங்கால் மூட்டுப் பிரச்னைகள் குணமாகும். வெந்தயத்தைத் தண்ணீரில் கலந்து பேஸ்ட்போலச் செய்து அதை வலியுள்ள இடத்தில் பூசலாம். நல்ல நிவாரணம் கிடைக்கும்.
வெங்காயம்
வெங்காயத்தில் சல்ஃபர் உள்ளது. இது வலியைக் குறைக்க உதவும். வீக்கம், கட்டிகளுக்கு எதிராகச் செயல்படும். வெங்காயம், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவும்.
பருப்புக்கீரை
பருப்புக்கீரை
பருப்புக்கீரையை வேகவைத்து, அரைத்து சாறாக்கிக்கொள்ள வேண்டும். இதை தினமும் காலையில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். முழங்கால் வலி குறைய இது உதவும்.
தண்ணீர்
தண்ணீர்
தண்ணீர் நமது உடலுக்கு அத்தியாவசியத் தேவை. இது முழங்கால் வலியைக் குறைக்க உதவும். நமது மூட்டுப் பகுதியில் வழுவழுப்பான உள் உறைப் பகுதி (Lining) இருக்கும். இதை கார்டிலேஜ் (Cartilage) என்கிறோம். தண்ணீர் கார்டிலேஜை மென்மையாக்கும். மூட்டுப் பகுதிகளில் ரத்த ஓட்டத்தைச் சீராக்கி , தேவையான சத்துகளை மூட்டுப் பகுதிகளுக்குக் கடத்தும். முழங்கால் மூட்டிலுள்ள நச்சுப்பொருட்களையும் தண்ணீர் வெளியேற்றும்.
மக்னீசியம்
மக்னீசியம், நமது தசை மற்றும் நரம்பை ஓய்வாக உணரச் செய்யும். வலியைக் குறைக்கும். கீரை வகைகள், பாதாம், வால்நட் போன்ற நட்ஸ் வகைகள், பீன்ஸ் போன்றவற்றில் மக்னீசியம் உள்ளது. இது முழங்கால் வலியை முழுமையாகக் குறைக்கும்.
எடை
உடல் எடை மிகவும் அதிகமாக இருந்தால், மூட்டுகளில் அழுத்தம் ஏற்பட்டு முழங்கால் வலி வரும். சரியான சரிவிகித உணவுகளைச் சாப்பிட்டு உடற்பயிற்சி செய்தால் எடை கட்டுக்குள் இருக்கும். கால் வலியும் குறையும்.
பொருத்தமான ஷூ
சரியான அளவில், பொருத்தமான ஷூ, செருப்பு போன்றவற்றை அணிவது கால் வலியிலிருந்து பாதுகாப்பு தரும். ஷூ வாங்கும்போது உள்ளே இருக்கும் பஞ்சு போன்ற பொருள் வசதியாக இருக்கிறதா என்பதைப் பார்த்து வாங்க வேண்டும். அதேபோல் ஒரு இன்ச்சைவிடப் பெரிய ஹீல் வைத்த ஷூ, செருப்பு வாங்கக் கூடாது.
நாம் உட்காரும் முறைகூட கால்வலிக்குக் காரணமாக இருக்கலாம். திடீரென ஒரு நாள் நம்மை அறியாமல் உட்காரும் முறையை மாற்றினால், கால்வலி குணமாகும் ஆச்சர்யம் நிகழலாம். வீக்கம், வலி போன்றவற்றுக்கான காரணங்கள் தெரிந்தால், இந்த வீட்டு வைத்திய வழிமுறைகள் நிச்சயம் பலன் கொடுக்கும். மற்றபடி, நீண்ட நாட்களாகத் தொடரும் வலி, கடுமையான வலிகளுக்கு மருத்துவரை அணுகி சிகிச்சை எடுத்துக்கொள்வதே சிறந்தது.

No comments:

Post a Comment