தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, March 13, 2017

விடுமுறைக்கு இப்படியும் ஒரு காரணமா? - வைரலாகும் பள்ளி மாணவனின் கடிதம்!


அநேகமாக நாம் ஆங்கிலத்தில் எழுதிய முதல் கடிதம் லீவ் லெட்டராகத்தான் இருக்கும். பள்ளியில் படிக்கும்போது என்ன காரணத்தால் நமக்கு விடுமுறை தேவைப்பட்டாலும் எழுதும் காரணம் ஒன்றுதான். i am suffering from fever. அது மாறவே மாறாது.
ஒரே நாளில் காய்ச்சல் வந்து அதேநாளில் அது குணமாகியும்விடும் ஆச்சர்யத்தைச் சந்திக்காத மாணவர்களே இருக்க முடியாது. தேர்வு நேரத்தில் வரும் காய்ச்சலை 'எக்ஸாம் ஃபீவர்' என்று சொல்வதைப் போல விடுமுறைக்காக வரும் காய்ச்சலை 'லீவ் ஃபீவர்' என்றும் சிலர் சொல்வர். உடல்நிலை சரியில்லை என்று சொன்னால்தான் ஆசிரியர் விடுமுறை அளிப்பார் என்று நினைத்து இந்தக் காரணத்தை பல மாணவர்கள் எழுதுவார்கள். இன்னும் சில மாணவர்களுக்கு வயிற்று வலி என்பதையோ, உறவினர் திருமணத்திற்குச் செல்லவிருக்கிறோம் என்பதையோ ஆங்கிலத்தில் எழுதத் தெரியாமல் i am suffering from fever என்றே எழுதுவர். ஆனால் ஏழாம் வகுப்பு படிக்கும் ஈஸ்வரன் மட்டும் இதில் விலக்கு.
தேனி மாவட்டம், வருஷ நாடு அருகில் இருக்கும் பூசணியூத்து எனும் கிராமத்தில் உள்ள அரசு உயர்நிலைப்பள்ளியில் படிக்கிறார் ஈஸ்வரன். ஈஸ்வரனின் வீடு, பள்ளியிலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தள்ளியிருக்கும் சிங்கராஜபுரம். அங்கிருந்து பள்ளிக்கு வருவதற்கு பேருந்து வசதி கிடையாது. ஆட்டோ மூலமே செல்லமுடியும். ஆனால் ஈஸ்வரன் ஆட்டோவை எல்லாம் எதிர்ப்பார்ப்பது இல்லை. நடந்தே பள்ளிக்கு வந்துவிடுகிறான். ஈஸ்வரனின் அண்ணன்களும் அதே பள்ளியில்தான் படிக்கிறார்கள். மிக எளிமையான குடும்பத்தைச் சேர்ந்த ஈஸ்வரன் நன்றாகப் படிக்கும் மாணவராக மட்டுமல்லாமல் சக மாணவர்களோடு தோழமையோடும் உதவும் தன்மையோடும் பழகுவார்.
அந்தப் பள்ளியின் ஆசிரியர் வி.வெங்கட் இரண்டு நாட்களுக்கு முன், வகுப்பில் வருகைப் பதிவு எடுத்துக்கொண்டிருந்தார். அப்போது அவரிடம் ஒரு மாணவர் விடுப்பு விண்ணப்பம் ஒன்றைக் கொடுக்கிறார். அந்த வகுப்பில் படிக்கும் மாணவர் ஈஸ்வரன் தனக்கு ஒருநாள் விடுப்பு கேட்டு எழுதிய கடிதத்தை தன் நண்பனிடம் கொடுத்து அனுப்பியிருந்தார்.
மாணவர்கள் எழுதும் வழக்கமான விடுப்பு விண்ணப்பம்தானே என்று நினைத்து அதைப் படித்த ஆசிரியருக்குப் பெரும் ஆச்சர்யத்தை அளித்தது அந்தக் கடிதம். தன் அம்மாவுக்கு உடல்நிலைச் சரியில்லாத காரணத்தால் தன் வீட்டில் இருக்கும் கால்நடைகளைக் கவனித்துக்கொள்ள வேண்டும் என்பதற்காக விடுமுறை கேட்டு விடுப்பு விண்ணப்பம் அனுப்பியிருக்கிறார் ஈஸ்வரன். தனது விடுமுறைக்கான உண்மையான காரணத்தையே ஈஸ்வரன் எழுதியிருந்ததைக் கண்டு திகைத்தார் ஆசிரியர் வெங்கட்.
"இந்தக் கடிதத்தைப் படித்ததும் ஒரு சில நிமிடங்கள் ஆச்சர்யத்தில் உறைந்துவிட்டேன். இப்படி ஒரு காரணம் எழுதிய லீவ் லட்டரை நான் முதன்முதலாக இப்போதுதான் பார்க்கிறேன். அடுத்த நாள் பள்ளிக்கு வந்த ஈஸ்வரனிடம் வழக்காக இந்தக் காரணத்தை எழுதமாட்டார்களே... நீ எப்படி எழுதினாய், என்றேன். அதற்கு மிக இயல்பாக, 'சார், நீங்கதானே உண்மை எதுவாக இருந்தாலும் அதைப் பேசுங்க என்பீர்கள்' என்றான். எனக்கு பதில் பேசுவதற்கு வார்த்தை கிடைக்கவில்லை. கண்களில் என்னையறியாமல் நீர் வழிந்தது. அதை மாணவர்கள் முன் காட்டிக்கொள்ளாமல், ஈஸ்வரனின் கடிதத்தைப் பற்றி சிலாகித்துக் கூறினேன். எப்போதோ நாம் சொல்லும் வார்த்தை மாணவர்களின் மனதில் எவ்வளவு ஆழமாகப் பதிகிறது என்பதை அனுபவப்பூர்வமாக உணர்ந்துகொண்டேன். இன்னும் பல மடங்கு பொறுப்பு உணர்வுடன் செயல்பட வேண்டும் என்பதைப் புரிந்துகொள்ளவும் முடிந்தது" என்கிறார் ஆசிரியர் வெங்கட்.
ஆசிரியர் சொல்வது உண்மைதான். ஈஸ்வரனின் செயல்பாட்டுக்கு ஆசிரியர் - மாணவர் உறவு ஆரோக்கியமாக இருப்பதே முதன்மையான காரணம். கால்நடைகளைப் பார்த்துகொள்வதற்காக விடுப்பு எடுக்கிறேன் என்று சொல்வதற்கு பின்னால், அந்தக் காரணத்தின் சூழலை தன் ஆசிரியர் புரிந்துகொள்வார் எனும் நம்பிக்கையே இருக்கிறது. இந்த நம்பிக்கை ஓரிரு நாள்களில் வந்துவிடக் கூடியது அல்ல. ஜனநாயகத் தன்மையோடு வகுப்பறையை ஆசிரியர் கொண்டு செல்லும்போதே இது நிகழும். அதற்கான வாய்ப்புகளை அந்தப் பள்ளியின் தலைமை ஆசிரியர் ஏற்படுத்திக்கொடுத்திருப்பதும் பாராட்டுக்கு உரியது. இதுபோன்ற சூழல்களே மாணவர்களின் படைப்புத் திறனை வளர்த்தெடுத்து புதிய விஷயங்களைக் கண்டுபிடிக்க உதவும்.
உண்மையின் ஒளியில் பயணம் செய்வதை விடவும் மகிழ்வானது எதுவுமில்லை. உற்சாகத்துடன் அந்தப் பயணத்தில் இருக்கும் ஈஸ்வரனுக்கு அன்பு வாழ்த்துகளைச் சொல்வோம்.

No comments:

Post a Comment