தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 14 மார்ச், 2017

ஒரே நேரத்தில் 24,000 பெண்கள் தீக்குளித்து தற்கொலை! எங்கே தெரியுமா?

தன்னுடைய பழமையான அடையாளங்களையும், பொக்கிஷங்களையும் போற்றி பாதுகாப்பதில் இந்தியாவில் இருக்கும் மற்ற மாநிலங்களை காட்டிலும் ராஜஸ்தான் ஒருபடி மேலே இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும். இம்மாநிலத்தின் பெரும்பகுதி பாலைவன பிரதேசமாக இருந்தாலும் ராஜாக்கள் காலத்தில் மிகவும் செல்வசெழிப்பு மிக்க இடமாக ராஜஸ்தான் இருந்திருக்கிறது.
அந்த செல்வம் வரலாற்று காலம் நெடுகவும் ராஜஸ்தான் ஏராளமான படையெடுப்புகளுக்கு ஆளாகவும் காரணமாக அமைந்திருக்கிறது. வீரம் பொருந்திய ரஜபுத்திர வீரர்களாலும், மார்வார் வீரர்களாலும் ஆட்சி செய்யப்பட்ட ராஜஸ்தானில் வாழ்ந்த மக்கள் எக்காரணம் கொண்டும் போரில் எதிரிகளின் கைகளில் சிக்கி மானமிழக்க கூடாது என்பதை கொள்கையாக கொண்டிருந்திருக்கின்றனர்.
இவ்வளவு வீரம் கொண்ட அந்த ஊர் மக்கள் தற்கொலை செய்து கொள்ள என்ன காரணம். அப்படி 24000 பேரும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்துகொள்ள என்ன கொடுமை நடந்திருக்கும்? அந்த கொடூர சம்பவம் நிகழ்ந்த இடத்தை பற்றி தெரிந்துகொள்வோம் வாருங்கள்.
தகிக்கும் 'தார்' பாலைவனத்தின் நடுவே கம்பீரமாக அமைந்திருக்கிறது ஜைசால்மர் கோட்டை. உலகின் மிகப்பெரிய கோட்டை வளாகமான இது 2013ஆம் ஆண்டு யுனெஸ்கோ அமைப்பினால் உலக புராதன சின்னங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டு மத்திய அரசினால் பரமாரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 900 வருடங்கள் பழமையான இக்கோட்டையின் மதில்களுக்கு பின்னால் எண்ணற்ற வரலாற்று சம்பவங்கள் புதைந்திருக்கின்றன.
ரஜபுத்திர அரசர் ராவல் ஜைசால் என்பவரால் 1156ஆம் ஆண்டு இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது. ஜைசால் மன்னரின் பெயராலேயே இது ஜைசால்மர் கோட்டை என்று விளக்கப்படுகிறது. பெரும் படையெடுப்புகளையும் எதிர்கொள்ளும் வகையில் மூன்றடுக்கு சுவர்களால் இக்கோட்டை கட்டப்பட்டிருக்கிறது.
ஜெய்சால்மர் நகரின் இதய பகுதியில் அமைந்திருக்கும் இக்கோட்டையானது வரலாற்று காலம் நெடுகிலும் எண்ணற்ற போர்களையும், முற்றுகைகளையும் சந்தித்திருக்கிறது. அதிலும் 1294ஆம் ஆண்டு துருக்கியை சேர்ந்த கில்ஜி வம்சத்தின் இரண்டாவது அரசனான அலாவுதீன் கில்ஜியால் மேற்கொள்ளப்பட்ட முற்றுகை தாக்குதலின் முடிவு நம் நெஞ்சை பதற வைக்கும்.
கில்ஜியின் சொந்த நாடான துருக்கியில் இருந்து ராஜஸ்தான் வழியாக 3000க்கும் மேற்ப்பட்ட குதிரைகளில் டெல்லிக்கு கொண்டு செல்லப்பட்ட பொருட்களை ஜைசால்மர் ராஜ்யத்தை சேர்ந்த பட்டி இனத்தவர்கள் கொள்ளையடித்துவிடுகின்றனர் . இதனை கேள்வியுற்று வெகுண்டெழுந்த அலாவுதீன் கில்ஜி ஜைசால்மர் நகரின் மீது படையெடுத்து செல்கிறார்.
அலாவுதீன் கில்ஜியின் படைகள் இந்த ஜைசால்மர் கோட்டையை கிட்டத்தட்ட 8 ஆண்டுகள் முற்றுகையிட்டு போர் புரிகின்றன. இந்த எட்டு வருடங்களும் போருக்கு காரணமாக அமைந்த பட்டி வம்சத்தினரே கில்ஜியின் படைகளுக்கு எதிராக வீரம் செரிக்க போர் புரிந்திருக்கின்றனர். பின்னர் ஒருகட்டத்தில் கோட்டையினுள் சேமிக்கப்பட்டிருந்த உணவு தீர்ந்துபோகிறது.
அதே காலகட்டத்தில் ஜைசால்மரின் அரசர் ஜெத்சியும் மரணமடைகிறார். இதனை வாய்ப்பாக பயன்படுத்திக்கொண்ட கிஜ்லி தனது படை வீரர்களின் எண்ணிக்கையை அதிகரித்ததோடு மட்டுமில்லாமல் வெளியிலிருந்து கோட்டைக்கு உணவு கொண்டு செல்லப்படும் எல்லா பாதைகளையும் தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவருகிறார்.
உணவு பற்றாக்குறை, அரசரின் இழப்பு ஆகிய காரணங்களினால் ஒரு கட்டத்தில் தோல்வி உறுதி என்பதை உணர்ந்த கோட்டையினுள் இருந்த பட்டி வம்ச பெண்கள் 'ஜௌஹர்' என்ற சடங்கை மேற்கொள்ள துணிகின்றனர். போரில் தோல்வி உறுதியான பின்பு எதிரி படை வீரர்களின் கைகளில் சிக்கி தங்களின் மானத்தை இழக்காமல் இருக்க ரஜபுத்திர அரசியும், பெண்களும் தங்களை தாங்களே நெருப்பிட்டு உயிர் மாய்த்துக்கொள்ளும் சடங்கே ஜௌஹர் ஆகும் .
கில்ஜி படைவீரர்கள் கோட்டையை கைப்பற்றிவிடுவார்கள் என்ற நிலை வந்ததும் இக்கோட்டையினுள் இருந்த 24,000 ரஜபுத்திர பெண்களும் தங்களை தாங்களே தீயிட்டு மாய்த்துக் கொள்கின்றனர். தீக்குளிக்க விரும்பாதவர்கள் தங்கள் கணவனின் கைகளால் சிரங்களை கொய்து கொண்டனர்.
இது நடந்தவுடன் கோட்டையை பாதுகாத்து வந்த 3800 பட்டி வீரர்களும் கோட்டையின் கதவுகளை திறந்து எதிரியுடன் நேருக்கு நேராக சமர் செய்து தங்கள் உயிரை மாய்த்துக் கொண்டனர். பின்னர் சில வருடங்கள் கழித்து மீண்டும் இக்கோட்டையை பட்டி வம்சத்தினர் கைப்பற்றியிருக்கின்றனர்.
அன்றிலிருந்து இன்றுவரை இக்கோட்டையினுள் பட்டி வம்சத்தினர் பரம்பரை பரம்பரையாக ஏராளமான அளவில் வசித்து வருகின்றனர். இன்று ராஜஸ்தானின் மிகமுக்கியமான சுற்றுலா ஈர்ப்புகளில் ஒன்றாக இந்த ஜைசால்மர் கோட்டை திகழ்கிறது. மஞ்சள் நிறமுள்ள மணல் கற்களை கொண்டு கட்டப்பட்டிருக்கும் இந்த கோட்டை சூரிய அஸ்தமனத்தின் போது தங்க நிறத்தில் ஒளிர்வதால் 'தங்க கோட்டை' என்றும் அழைக்கப்படுகிறது.
இந்த கோட்டையினுள்ளே ஜைசால்மர் அரச பரம்பரையினர் வாழும் 'ராயல் பேலஸ், லக்ஷ்மிநாதர் ஆலயம், அக்காலத்தில் வணிகர்கள் தங்குவதற்காக கட்டப்பட்ட ஹவேளிக்கள் போன்றவை இருக்கின்றன.
இன்று ஒவ்வொருநாளும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகள் இக்கோட்டையை சுற்றிப்பார்க்க வருகை தருகின்றனர். இந்த கோட்டையினுள்ளே இருக்கும் உணவகங்களில் அதி சுவையான பாரம்பரிய ராஜஸ்தானிய உணவுகள் கிடைக்கின்றன.
- See more at: http://www.manithan.com/news/20170314125688#sthash.WJ4BCICl.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக