தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 25 ஜனவரி, 2017

சிலம்பு காட்டும் பதினொரு ஆடல்கள்!

திரிபுரத்தை எரித்தசிவன் தேவி யோடு
தேவருக்காய் ஆடியது கொட்டி ஆகும்
அரியதொரு தேர்முன்னே பிரமன் காண
ஆடியதோ பாரதியின் பாண்ட ரங்கம்!
பெரியபலக் கஞ்சனையே வதைத்த மாலும்
ஆடியதே அல்லியமும் அதற்குப் பின்னும்
சரியவுடல் அவுணனையே சாயத்து மாயேன்
சதங்கையுடன் ஆடியதுமல் லாடல் ஆகும்
சூரனையே வென்றதிரு முருக வேளும்
சூழ்ந்தகடல் ஆடியது துடியென் றாகும்!
வீரமுடன் அமமுருகன் குடையைச் சாய்த்து
வெங்களத்தில் ஆடியது குடையென் றாகும்
பாரமிகு பூமிநிலம் அளந்து மாயோன்
பரதமென ஆடியதே குடக்கூத் தாகும்
ஆரமுடைப் பெண்ணுருவம் ஏற்று காமன்
ஆடியதும் பேடியெனும் பெருங்கூத் தாகும்!
சிம்மமுறை துர்க்கையவள் மரக்கால் தாங்கி
செம்மையுடன் ஆடியது மரக்கால் ஆகும்!
செம்மலரில் உறைமகளும் அவுணர் தோற்க
சிறப்புடனே ஆடியது பாவை யாகும்
அம்மையவள் அயிராணி வயலில் நின்று
ஆடியதே கடையமெனச் சிலம்பு சொல்லும்
எம்முடைய தெய்வங்கள் எழுந்து செய்த
இவையன்றோ ஆடலெனும் பதினொன் றாகும்!
- இரா.சம்பந்தன்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக