தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 23 டிசம்பர், 2016

"லாஸ் பேட்ரோனாஸ்" (Las Patronas) பெண்கள் அமைப்பின் தோற்றமும் பணியும்!

செம்மண் நிறைந்த மெக்சிகோ நாடு. அழகிய பெண்கள் நிறைந்த இந்த நாட்டின் மிக அழகான கிராமமாக லா பேட்ரோனாவை (La Patrona) சொல்லலாம். காரணம் அங்கிருக்கும் பெண்களின் மேனி அல்ல, அவர்கள் செய்யும் ஓர் உன்னத பணி...
பிப்ரவரி 14, 1995ஆம் ஆண்டு. காலை 10 மணி. பெர்னார்டாவும், ரோசாவும் தங்களுக்கான காலை உணவு ஒரு பாக்கெட் பிரெட் மற்றும் ஒரு லிட்டர் பாலோடு, அந்த ரயில் தண்டவாளத்தைக் கடக்க நின்று கொண்டிருக்கிறார்கள். பெர்னார்டா தண்டவாளத்தில் காது வைத்து, அந்த சத்தத்தைக் கேட்டு மகிழ்கிறாள். அவளின் விளையாட்டைக் கண்டித்து ரயில் நெருங்குவதை உணர்த்தி பின்னுக்கு இழுக்கிறாள் ரோசா. ஒதுங்கி நிற்கிறார்கள். வேகமாகக் கடக்கிறது அந்த சரக்கு ரயில். அதன் கூரைகளில், இண்டு இடுக்குகளில் எல்லாம் மனித கூட்டம் ஒட்டிக் கொண்டிருந்தது. இவர்களின் கையிலிருந்த உணவைப் பார்த்து "பசி".." மேடம் பசி..." என்று அலறியது பெருங்கூட்டம். ஒரு நொடி தான்... எதையும் யோசிக்காமல் தங்கள் கைகளிலிருந்த உணவை அவர்களை நோக்கித் தூக்கி எறிந்தார்கள். ரயில் கண்ணை விட்டு மறையும் வரை அதைப் பெற்றவரின் கைகள் இவர்களுக்கு நன்றி சொன்னபடியே இருந்தது. வீட்டிற்கு சென்று தங்கள் அம்மாவிடம் நடந்ததை பயந்த படியே சொன்னார்கள். ஆனால், அவர் அம்மாவோ அவர்களைப் பாராட்டினார். இனி தினமும் ரயிலில் அப்படி செல்பவர்களுக்கு உணவளிக்கலாம் என்றும் சொல்கிறார்.
பிப்ரவரி 15, முதல் நாள் வீட்டில் 25 சாப்பாட்டுப் பொட்டலங்களைக் கட்டி, தண்டவாளத்தின் ஓரம் நின்றபடி உணவைக் கொடுத்தார்கள். அன்று தொடங்கி 21 ஆண்டுகளாகியும், இன்று வரை இதை ஒரு சேவையாக செய்து வருகின்றனர் "லாஸ் பேட்ரோனாஸ்" (Las Patronas) என்ற பெண்கள் அமைப்பினர்.
மத்திய அமெரிக்காவில் இருக்கும் கெளதமாலா, கோஸ்டரிகா, எல் சால்வேடர், ஹண்டுரஸ் போன்ற நாடுகளிலிருந்து நாள்தோறும் நூற்றுக்கணக்கான மக்கள், பிழைப்புத் தேடி அகதிகளாய் அமெரிக்காவிற்குள் செல்ல முயற்சிப்பார்கள். கள்ளத் தோணியில், நடந்து, லாரியில் என பல வழிகளில், எல்லைக் கோடுகளைத் தாண்டும் இவர்கள் மெக்சிகோவை சரக்கு ரயிலின் கூரைகளில் அமர்ந்து கடக்கிறார்கள். உண்ண உணவில்லாமல், உடுத்த மாற்று உடையில்லாமல், பல நாட்கள் பல்லிகளாய் ஒட்டிக் கொண்டு ரயிலில் பயணிக்கும் இவர்களுக்கு உணவுப் பொட்டலங்களை வழங்குகிறது இந்தப் பெண்கள் குழு.
முதல் ஏழு வருடங்கள் தங்களின் கைக் காசைப் போட்டு இந்த சேவையை செய்து வந்தது பெர்னார்டா குடும்பம். பின்னர், கிராமத்தின் பிற பெண்களும் இந்த சேவையில் இணைய "லாஸ் பேட்ரோனாஸ்" குழு தொடங்கப்பட்டது. அதிகாலையிலேயே சமைக்கத் தொடங்கிவிடுகிறார்கள். அரிசி சாப்பாடு, பீன்ஸ், பிரெட், பழங்கள், மெக்சிகன் டார்டிலா ஆகியவற்றை இரண்டு கவர்களில் அடைத்து ஒன்றாக கட்டுகிறார்கள். தண்ணீர் பாட்டில்களை கயிற்றைக் கொண்டு கட்டி விடுகிறார்கள். ஒரு நாளைக்கு இரண்டு ரயில்கள். காலை 11 மணி வாக்கில் ஒன்று, மாலை ஆறு மணி வாக்கில் ஒன்று. ரயில் வரும் சத்தம் கேட்டதும், உணவுப் பொட்டலங்களைக் கூடையில் அடுக்கி, தண்டவாளத்தின் ஓரத்தில் வரிசையாக நிற்கிறார்கள். ரயில் கடக்கும் நேரத்தில் உணவுப் பொட்டலங்களை வழங்குகிறார்கள். யாரையும் எதிர்பார்க்காமல் அந்தக் கிராமத்து பெண்களே மொத்த வேலைகளையும் செய்கிறார்கள்.
இவர்களின் இந்த சேவை ஆவணப்படமாகவும் எடுக்கப்பட்டிருக்கிறது. அதில் ஜூலியா என்ற பெண் தான் எப்படி இந்தக் குழுவில் இணைந்தேன் என்பதை விளக்கியுள்ளார். ஜூலியாவின் வீடு ரயில் தண்டவாளத்தை ஒட்டி இருந்தது. தன் வீட்டை ஒட்டி இது போன்ற விஷயங்கள் நடப்பது அவருக்கு ஆரம்பத்தில் பிடிக்கவில்லை...
"ஒரு நாள் சிக்னல் கிடைக்காமல் ரயில் நின்றது. ஒரு 12 வயது பையன் அவன்... கதவைத் தட்டினான். குளிரில் நடுங்கியபடி இருந்தான். அவன் உடல்... எலும்பிற்கு போர்வைப் போர்த்தியது போன்றிருந்தது. 'பசிக்கிறது... சாப்பிட ஏதாவது தாருங்கள்' என்று கெஞ்சினான். நாய்க்கு வைத்திருந்த சாப்பாட்டை வெறுப்புடன் தந்தேன். கண்ணீரோடு அதை அவ்வளவு அவசரமாகவும், ருசித்தும் சாப்பிட்டான். கிளம்பும் போது... என் கால்களில் விழுந்து ஆசிர்வாதம் வாங்கிக் கொண்டு. நீங்கள் என் அம்மாவிற்கும் மேல்... என்று சொன்னபடியே அந்த இருட்டில் மறைந்து போனான். இந்த சேவையின் உன்னதத்தை அப்போது தான் உணர்ந்தேன்." என்று உணர்ச்சி மேலோங்க சொல்கிறார்.
ரயில் போகும் வேகத்தில் உணவு கொடுக்கும் போது கைகளில் பலமாக அடிபடும். சமயங்களில் பொருளாதார பிரச்சினைகள் ஏற்படும். சட்டவிரோதமாக செல்லும் அகதிகளுக்கு உதவுவதற்கு பல தரப்பில் இருந்தும் எதிர்ப்புகள் வந்தன. அனைத்தையும் ஒற்றுமையாக இருந்து எதிர்த்து, கடந்து வந்திருக்கின்றனர் இந்தப் பெண்கள். எந்த விடுமுறை நாட்களிலும் இவர்களின் சேவை தடைபடுவதில்லை. பசிக்கு விடுமுறையில்லையே?
இந்த வழியாகப் போகும் சரக்கு ரயில்களை செல்லமாக "பீஸ்ட்" என்றழைக்கிறார்கள். ஆம், அது உண்மையிலேயே அரக்கன் தான். இரவு, பகல் கடந்து, குளிர், மழையில் நனைந்து, தூக்கம் தொலைத்து பயணிக்கும் எத்தனையோ அகதிகள் தவறி விழுந்து இறந்திருக்கின்றனர். சாதாரணமாக ஒரு நாளைக்கு 300 சாப்பாட்டு பொட்டலங்களை வழங்குகின்றனர் இந்தப் பெண்கள் குழுவினர். 2005 - 2009 காலகட்டங்களில் புலம்பெயர்வோரின் எண்ணிக்கை அதிகமாக இருந்தது. அந்த சமயங்களில் 800 சாப்பாட்டு பொட்டலங்கள் வரைக் கொடுத்திருக்கிறார்கள்.
சட்டங்கள் கடுமையாக்கப்பட்டதால், பலரும் இப்போது நடந்து வரவும் தொடங்கியிருக்கிறார்கள். அப்படி வருபவர்களுக்கு சில நாட்கள் ஓய்வெடுப்பதற்கு ஒரு விடுதியையும் இவர்களே சேர்ந்து கட்டியுள்ளனர். மேலும், அவர்களுக்கான மருத்துவ வசதிகளை செய்து கொடுக்கிறார்கள். ஹண்டுரஸில் இருந்து பயணம் செய்த 14 வயது சிறுவன் அல்ஃப்ரெடோ (Alfredo) ரயில் கூரையில் உட்கார்ந்து பயணிக்கும் போது, வழுக்கி கீழே விழுந்துவிட்டான். அவனின் ஒரு கையும், காலும் பிய்ந்து போனது. அவனுக்குத் தேவையான மருத்துவ உதவிகளை செய்து கொடுத்தார்கள் லாஸ் பெட்ரோனாஸ்.
"எனக்கு அப்பா இல்லை. அம்மா ரொம்ப கஷ்டப்படுறாங்க. அவங்கள நல்லா வச்சு பார்த்துக்கணுங்குறதுக்காகத் தான் அமெரிக்காவுக்கு கிளம்பினேன். இப்ப என்ன செய்றதுன்னு தெரில... நடந்தாவது போயிடலாம்னு பார்த்தா... காலும் இல்ல... என் அம்மா பாவம். நான் அவங்களவிட்டு வந்திருக்கக் கூடாது..." என்று சொல்லி அழுகிறான். ஆதரவற்ற அவனுக்கு ஆறுதலாய் அவனை சுற்றி நிற்கிறார்கள் அந்தப் பெண்கள். இதைப் பார்த்தபடி அருகில் நிற்கும் அல்ஃப்ரெடோவின் அண்ணன்..." என் தம்பியோட உயிர காப்பாத்திக் கொடுத்திட்டாங்க. இவங்க நிச்சயம் சொர்க்கத்துலருந்து வந்த தேவதைங்க தான்..." என்று கண்ணீரோடு சொல்கிறான். அழுக்குப் படிந்த தன் சட்டையைக் கொண்டு கண்ணீரைத் துடைத்துக் கொள்கிறான். ஆம்... ஒருவேளை தேவதைகள் இப்படித் தான் இருக்கக் கூடும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக