தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, December 2, 2016

பனிப்போர் இலக்கியம்!

இரா.சம்பந்தன்


எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் என்று கொன்றை வேந்தனில் ஒளவை சொன்னதை எண் என்ப ஏனை எழுத்தென்ப இவ்விரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு என்று குறள் செய்து தானும் ஏற்றக் கொண்டவர் திருவள்ளுவர். 
ஆற்றங் கரையின் மரமும் அரசறிய 
வீற்றிருந்த வாழ்வும் விழும் அன்றே - ஏற்றம்
உழுதுண்டு வாழ்வதற்கு ஒப்பில்லை கண்டீர்
பழுதுண்டு வேறோர் பணிக்கு

என்று ஒளவை உழவுத் தொழிலைச் சிறப்பித்துப் பாட உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் என்று தானும் அவளைத் தொடர்ந்தவர் வள்ளுவர்.

அது போல தாகத்தால் உயிர் இழக்கும் ஒரு பசுவைக் கண்டு இரங்கி அதற்குத் தண்ணீர் தாருங்கள் என்று நல்ல சேவைக்காகவேனும் யாரிடமாவது ஒருவன் இரந்து கேட்பானாகில் அந்தக் கணமே அப்படிக் கேட்ட அவன் நாவுக்கு இழிவு வந்து சேர்ந்துவிடும் என்று கடுமையாக வள்ளுவர் குறள் செய்த போது ஏற்பது இகழச்சி என்று தானும் அதை ஒத்துக் கொண்டவள் ஒளவை.

ஆவுக்கு நீரென்று இரப்பினும் நாவிற்கு
இரவின் இளிவந்தது இல்

ஒன்று எமக்குக் கிடைக்கும் விதி இருந்தால் மட்டுமே கிடைக்கும். அப்படிக் கிடைக்கும் விதியில்லாத ஒன்றை எப்படித்தான் கெஞ்சி மன்றாடினாலும் அது வந்து சேரமாட்டாது. அது போல எங்களை விட்டு நீங்கக் கூடாது என்ற விதி உள்ள எதுவும் எப்படித் துரத்தினாலும் எம்மை விட்டுப் போகாது அப்படியிருக்க மனிதர்கள் என்னவோ எல்லாம் நினைத்து மனதைப் புண்ணாக்கிக் கொள்கின்றார்கள் என்று ஒளவை ஒரு பாட்டுச் சொன்னாள்.

வருந்தி அழைத்தாலும் வாராத வாரா
பொருந்துவன போமின் என்றால் போகா - இருந்தேங்கி
நெஞ்சம் புண்ணாக நெடுந்தூரம் தாம்நினைந்து
துஞ்சுவதே மாந்தர் தொழில்.

வள்ளுவர் தானும் அதைப் பிடித்துக் கொண்டு ஒரு குறள் செய்தார்.

பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்
சொரியினும் போகா தம

தொலைய வேண்டிய விதி உள்ளதெல்லாம் எப்படிப் பாதுகாத்தாலும் தொலைந்துதான் தீரும். எங்களோடு இருக்க வேண்டியதெல்லாம் எங்கு கொண்டு சென்று எறிந்தாலும் எங்களை விட்டுப் போகாது என்பது இதன் நேரடிப் பொருளாகும்.

இவ்வாறு வள்ளுவரும் ஒளவையும் ஒன்றுபட்டுக் கருத்துரைத்து மட்டுமல்ல. இருவருமே நாயைத் தங்கள் ஆக்கங்களில் எங்கும் சேர்க்காமல் தவிர்த்ததிலும் ஒன்றுபட்டு நின்றார்கள்.

இவ்வாறு இணைந்த நெறியில் சென்று இலக்கியம் படைத்த இருவரும் ஒரு இடத்தில் மாறுபட்டுக் கருத்துரைக்கின்றார்கள்.

வள்ளுவர் பண்பு உடைமை என்ற அதிகாரத்திலே தான் சிதையாமல் நின்று கொண்டு வலிமை மிக்க இரும்பைச் சிதைக்கும் அரத்தை கூரிய மதி படைத்தவர்களுக்கு உதாரணமாக எடுத்துக் கொண்டு அப்படிப்பட்ட அறிவாளிகளிடம் கூட மனிதப் பண்பு இல்லை என்றால் அவர்கள் மரம் என்றார்.

அரம்போலும் கூர்மையர் ஏனும் மரம்போல்வார்
மக்கட்பண்பு இல்லாதவர்

இங்கே மரம் என்பது இழிவு தாங்கி நிற்கின்றது. இதை வள்ளுவர் மட்டும் சொல்லவில்லை. பாஞ்சாலி சபதத்திலே பாரதியாரும் மரத்தை இழிவுப் பொருளில் கையாள்வார். நெடும்பச்சை மரம்போல வளர்ந்தே விட்டாய் என்று துரியோதனனைப் பார்த்து விதுரன் சொல்லுவான் பாஞ்சாலி சபதத்தில்.

ஆனால் ஒளவையோ இவர்களை எல்லாம் புறக்கணித்து விட்டு மரம் பற்றி உயர்வாகக் சொல்லுவாள் தனது இலக்கியத்தில். மரமானது ஒருவன் தன்னை வெட்டுகின்றான் என்று தெரிந்து கொண்டும் தான் நிலத்தில் சாயும் வரை வெட்டுபவனுக்கு நிழல் கொடுக்கின்றது இல்லையா? அது போல அறிவுடையவர்கள் தாம் சாகும் வரை தமக்குத் தீமை செய்பவரையும் தம் உயிர் நீங்கும் வரை அரவணைத்துக் காப்பாற்றுவார்கள் என்று ஒளவை பாடினாள்.

வள்ளுவரும் பாரதியாரும் பாவித்த மரம் என்னும் பதம் வெறும் உணர்ச்சியின் தோற்றப்பாடாக அமைய ஒளவை காட்டிய உதாரணம் ஆழமானதாக நடைமுறையில் இயல்புச் செய்தியாக நிற்கின்றது. அதுவும் பண்பு தெரியாதது என்று வள்ளுவனால் இனங்காட்டப்பட்ட மரம் ஒளவையால் அறிவும் பண்பும் நிறைந்த பொருளாகக் காட்டப்படுகின்றது.

சாந்தனையும் தீயனவே செய்திடினும் தாம்அவரை
ஆந்தனையும் காப்பர் அறிவுடையோர் - மாந்தர்
குறைக்கும் தனையும் குளிர்நிழலைத் தந்து
மறைக்குமாம் கண்டீர் மரம்.

இதைப் பனிப் போர் என்று எடுப்பதா? இல்லை வேறுபட்ட ஒளவைகளின் காலத்தின் கருத்து என்று
கொள்வதா? தெரியவில்லை. ஆனால் ஒன்று நிச்சயம். குறளாகட்டும் வேறு எந்த நீதி நூல் ஆகட்டும். கிழவியின் அறிவை வென்றதாகச் சரித்திரம் இல்லை!




No comments:

Post a Comment