தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, December 14, 2016

உள்ளன உள்ளபடியே கவிதையில் ஒரு புகைப்படம்!


கண்ணப்பர் கதையில் ஒரு நிகழ்ச்சி காட்டப்படுகின்றது ! முதன் முதல் வேட்டைக்குப் புறப்படுகின்றார் கண்ணப்பர். அதற்காக காட்டை வணங்கி மகிழ்விக்க ஒரு வழிபாடு நடத்தப்படுகின்றது. அதை நிகழ்துவதற்காக தேவராட்டி என்ற முது குறத்தி அழைக்கப்படுகின்றாள். அவள் கோலத்தைப் பாருங்கள்!

கானகத்திலே வரிவரியாக கணுக்கள் தாங்கி நிற்கும் தளிர்களின் கண்ணிகளை ஆய்ந்து சூடிக்கொண்டு இருக்கிறாள் அந்த மூதாட்டி! மான் கொம்பை அறுத்து அதனாலே செய்த வளையங்களைக் காதில் அணிந்தும் இருக்கிறாள். மானிடத்து இருந்து எடுத்த அரிதார மையைக் கொண்டு நெற்றியிலே திலகம் இட்டிருக்கிறாள் அவள். நீலமும் பச்சையும் கலந்து கோர்த்த மணிமாலையை மயிலின் கழுத்துப் போல நீண்ட தன் கழுத்திலே அணிந்திருக்கிறாள் அந்தத் தாய்! முதுமையினால் அவள் மார்பகங்கள் சாய்ந்து தொங்குகின்றன இலை தழைகளால் அதை மறைத்திருக்கிறாள் அவள். இடுப்பிலே மரவுரி அணிந்தும் அள்ளி முடிந்த சடையிலே பூக்களைச் சூடிக்கொண்டும் அந்தக் குறத்தி வேட்டுவ அரசனை வணங்கி நிற்கின்றாள்.

அவளை வேட்டுவர் தலைவன் நாகன் கேட்கின்றான். அன்னையே நீ ஒரு குறையும் இல்லாமல் இருக்கின்றாய் தானே!

அரசே! உன் கட்டளைப்படி எனக்கு நல்ல இறைச்சி கிடைக்கின்றது. ஈசல் பூச்சிகள் இடப்பட்ட கள் குடிப்பதற்குக் கிடைக்கின்றது. மற்றவை எல்லாம் குறைவறக் கிடைக்கின்றது. நான் நன்றாக வாழ்கிறேன் என்று பதில் சொல்கிறாள் அந்தத் தாய்!

கானில்வரித் தளிர்துதைந்த கண்ணி சூடிக்
கலைமருப்பின் அரிந்தகுழை காதில் பெய்து
மானின்வயிற்று அரிதாரத் திலக மிட்டு
மயிற்கழுத்து மனவுமணி வடமும் பூண்டு
தானிழிந்து இரங்கிமுலை சரிந்து தாழத்
தழைப்பீலி மரவுரிமேல் சார எய்திப்
பூநெருங்கு தோரைமலி சேடை நல்கிப்
போர்வேடர் கோமானைப் போற்றி நின்றாள்.

நின்றமுது குறக்கோலப் படிமத் தாளை
நோக்கிஅன்னை நீநிரப்பு நீங்கி இங்கே
நன்றினிது இருந்தனையோ?என்று கூறும்
நாகனெதிர் நலம்பெருக வாழ்த்தி நல்ல
மென்தசையும் ஈயலொடு நறவும் வெற்பில்
விளைவளனும் பிறவளனும் வேண்டிற்று எல்லாம்
அன்றுநீ வைத்தபடி பெற்று வாழ்வேன்
அழைத்தபணி என்னென்றாள் அணங்கு சார்ந்தாள்.

முதிய குறத்தி அதுவும் சமூகக் கடமைகள் செய்பவளின் கோலம் அன்று எப்படி இருந்தது என்பதற்கு கவிதையில் புகைப்படம் எடுத்துத் தருகின்றார் சேக்கிழார்! அதைக் கூட தன் கற்பனையால் மிகைப்படுத்தி விடாது உள்ளதை உள்ளபடியே பாடிவைத்த அவரது வரலாற்று நோக்கு போற்றத் தக்கதாகும்!

பெண்கள் நன்றாகக் கள் அருந்திய செய்தி மட்டுமல்ல அதிலே ஈசல் பூச்சி கலந்து குடித்த வரலாறும் சேக்கிழாரால் தரப்படுகின்றது. சமய இலக்கியம் என்று உண்மைகள் மறைக்கப் படவில்லை! சமுதாயத்தில் பெரியவர்களை அக்கால அரசுகள் எப்படிப் பேணிக் கொண்டன என்பதற்கு வேட்டுவ அரசனின் நலம் விசாரிப்பும் குறத்தி சொன்ன பதிலும் சான்றாக அமைந்து விடுகின்றன

இரா.சம்பந்தன்

No comments:

Post a Comment