தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 27 நவம்பர், 2016

யேசு கடவுள் இல்லை மனிதரே? பைபிளின் முழுமையான ஆதாரங்கள் இதோ!

உலகின் இரு பிரதான மதங்கள் இயேசுவைப் பற்றி புகழ்ந்து கூறுகின்றது.அது இஸ்லாமும்,கிறிஸ்தவமுமாகும்.இஸ்லாம் இயேசு ஒரு இறைத் தூதர்.அவர் ஒரு மனிதர் என்கிறது.கிறிஸ்தவமோ அவர் கடவுள் என்கிறது.உண்மையில் இயேசு கடவுளா? மனிதரா? குர்ஆனின் கூற்று சரியா? கிறிஸ்தவர்களின் நம்பிக்கை சரியா? சத்தியத்தை பைபிளிலிருந்து காண்போம்.
1.இயேசு கடவுளல்ல அவர் ஒரு மனிதரே.
”தேவன் ஆவியாயிருக்கிறார்”(யோவான் 4:24)
”நீங்கள் அவர் சத்தத்தை கேட்டதுமில்லை,அவரது ரூபத்தை கண்டதுமில்லை.”(யோவான் 5:37)
”அவரே நித்தியானந்தமுள்ள ஏக சக்கராதிபதியும்,ராஜாதி ராஜாவும்,கர்த்தாதி கர்த்தாவும்,ஒருவராய் சவாமையுள்ளவரும்,சேரக்கூடாத ஒளியில் வாசம் பண்ணுகிறவரும்,மனுஷரில் ஒருவரும் கண்டிராதவரும்,காணக்கூடாதவராயுமிருக்கிறார்.”(திமோத்தேயு 6:15,16)
இவ்வுலகில் யாரும் இறைவனைக் கண்டதில்லை.காணக்கூடிய ஒருவர் எவ்வாறு கடவுளாக இருக்க முடியும்?
2.இயேசு இறைவனால் அனுப்பப்பட்ட தூதரே.
” இஸ்ரவேலரே, நான் சொல்லும் வார்த்தைகளைக் கேளுங்கள்; நீங்கள் அறிந்திருக்கிறபடி நசரேயனாகிய இயேசுவைத் தேவன் உங்களுக்குள்ளே பலத்த செய்கைகளையும், அற்புதங்களையும், அடையாளங்களையும் நடப்பித்து, அவைகளினாலே அவரை உங்களுக்கு வெளிப்படுத்தினார்.” (யோவான் 5:37)
”என் வசனத்தைக் கேட்டு, என்னை அனுப்பினவரை விசுவாசிக்கிறவனுக்கு நித்தியஜீவன் உண்டு; அவன் ஆக்கினைத்தீர்ப்புக்குட்படாமல், மரணத்தைவிட்டு நீங்கி, ஜீவனுக்குட்பட்டிருக்கிறான் என்று மெய்யாகவே மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன். ”(யோவான் 5:24)
” என்னை அனுப்பின பிதா தாமே என்னைக் குறித்துச் சாட்சி கொடுத்திருக்கிறார்; நீங்கள் ஒருக்காலும் அவர் சத்தத்தைக் கேட்டதுமில்லை, அவர் ரூபத்தைக் கண்டதுமில்லை.’ ‘(யோவான் 5:37)
இந்த வசனங்கள் இயேசுவே கடவுளாக வரவில்லை.அவரை தேவன்தான் அனுப்பினார் என்பதை தெளிவாக அறிவிக்கிறது.அது மட்டுமல்லாமல் என்னை அனுப்பியவர் பிதா என்றும்,பிதாவை யாரும் கண்டதில்லை என்றும் கூறுவதிலிருந்து இயேசு கடவுளல்ல.கடவுளால் அனுப்பப்பட்ட தூதர்தான் என்பதையும் கடவுளை காணமுடியாது என்பதையும் இயேசு கூறும்போது அவர் எவ்வாறு கடவுளாக இருப்பார்?
3.இயேசு சுயமாய் எதுவும் செய்யவில்லை.
” நான் என் சுயமாய் ஒன்றுஞ்செய்கிறதில்லை; நான் கேட்கிறபடியே நியாயந்தீர்க்கிறேன்; எனக்குச் சித்தமானதை நான் தேடாமல், என்னை அனுப்பின பிதாவுக்குச் சித்தமானதையே நான் தேடுகிறபடியால் என் தீர்ப்பு நீதியாயிருக்கிறது. ” (யோவான் 5:30)
இந்த வசனம் இயேசு சுயமாக எதையும் செய்யவில்லை.தேவனின் உதவியினாலேயே அற்புதங்களை செய்தார் என்பதை உணர்த்துகிறது.இயேசுவே கடவுளாக இருந்தால் அவர் தானே அனைத்தையும் செய்ததாக அல்லவா கூறியிருப்பார்?.என்னை அனுப்பின பிதாவின் சித்தத்தின்படியே தான் அற்புதங்களை செய்ததாக கூறுவதிலிருந்து பிதா வேறு, இயேசு வேறு என்பது புலப்படவில்லையா?
4.இயேசுவிடம் பிரார்த்தித்தால் பரலோக ராஜ்ஜியத்தில் வெற்றிபெற முடியாது.
”பரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை.அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளை துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களை செய்தோம் அல்லவா என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை.அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்வேன்.” (மத்தேயு -7:21-23)”
இயேசுவை நோக்கி பிரார்த்தித்தவர்களின் நிலையை இயேசு எவ்வளவு தெளிவாக விளக்குகிறார்.தன்னை நோக்கி பிரார்தித்தவர்களை அக்கிரமக்காரர்கள் என்று நியாயத்தீர்ப்பு நாளில் கூறிவிடுவேன் என்பதை இயேசுவே கூறியுள்ளார்.இன்று இயேசு கிறிஸ்துவின் நாமத்தினாலே ஜெபிப்பவர்களே சற்று சிந்தியுங்கள்.இயேசு கடவுளாக இருந்திருந்தால் இவ்வாறு கூறுவாரா? அவருக்கு மேல் ஒரு கடவுள் இருக்கிறார்.அவர்தான் தேவன்,கர்த்தர்,அல்லாஹ் என்று பல மொழிகளில் அழைக்கப்படும் ஏக இறைவன் என்பதை நீங்கள் உணரவில்லையா?
இதே கருத்தை தருகின்ற குர்ஆன் வசனத்தையும் ஞாபகமூட்டுகிறோம்.
”மர்யமுடைய மகன் ஈஸாவே, ‘அல்லாஹ்வையன்றி என்னையும் என் தாயாரையும் இரு கடவுள்களாக ஆக்கிக்கொள்ளுங்கள்’ என்று மனிதர்களிடம் நீர் கூறினீரா?’என்று அல்லாஹ் கேட்கும் போது அவர், ‘நீ மிகவும் தூய்மையானவன்; எனக்கு உரிமையில்லாத ஒன்றை நான் சொல்வதற்கில்லை. அவ்வாறு நான் கூறியிருந்தால், நீ அதை நிச்சயமாக அறிந்திருப்பாய். என் மனதிலுள்ளதை நீ அறிகிறாய், உன் உள்ளத்திலிருப்பதை நான் அறிய மாட்டேன்;.நிச்சயமாக நீயே மறைவானவற்றையெல்லாம் நன்கு அறிபவன்’ என்று அவர் கூறுவார்.(5:116)
”நீ எனக்குக் கட்டளையிட்டபடி (மனிதர்களை நோக்கி), ‘என்னுடைய இறைவனும், உங்களுடைய இறைவனுமாகிய அல்லாஹ்வையே வணங்குங்கள்’ என்பதைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு நான் கூறவில்லை. மேலும், நான் அவர்களுடன் (உலகில்) இருந்த காலமெல்லாம் அவர்களைக் கண்காணிப்பவனாக இருந்தேன்;. அப்பால் நீ என்னைக் கைப்பற்றிய பின்னர் நீயே அவர்கள் மீது கண்காணிப்பவனாக இருந்தாய். நீயே எல்லாப் பொருட்கள் மீதும் சாட்சியாக இருக்கிறாய்”. (5:117)
5.இயேசுவுக்கே நியாயத்தீர்ப்பு நாள் எப்போது என்று தெரியாது.
”அந்த நாளையும், அந்த நாழிகைகளையும் என் பிதா ஒருவர் தவிர மற்றொருவனும் அறியான்: பரலோகத்திலுள்ள தூதர்களும் அறியார்கள்.”(மத்தேயு – 24:36)
பிதாவைத் தவிர வேறு யாருமே அந்த நாளை (நியாயத்தீர்ப்பு நாளை) அறியமாட்டார்கள் என்று இயேசுவே கூறியுள்ளார்.இயேசு கடவுளாக இருந்தால் அதை அவர் அறிந்திருப்பாரல்லவா?
6.இயேசுவும் கடவுளையே வணங்கினார்.
”சற்று அப்புறம்போய், முகங்குப்புற விழுந்து: பிதாவே! இந்தப்பாத்திரம் என்னைவிட்டு நீங்கக்கூடுமானால் நீங்கும்படி செய்யும், ஆகிலும் என் சித்தத்தின்படியல்ல, உம்முடைய சித்தத்தின்படியே ஆகக்கடவது என்று ஜெபம்பண்ணினார்.”(மத்தேயு – 26:39)
இயேசுவும் தேவனிடமே பிரார்த்தித்துள்ளார்.அவரால் சுயமாக எதையும் செய்ய முடியாது.தேவனிடம் பிரார்த்தித்தே காரியங்களை செய்தார் என்பதை மேற்கூறப்பட்ட பைபிள் வசனத்திலிருந்து தெளிவாக விளங்கலாம்.இயேசுவே கடவுளாக இருந்தால் அவர் வேறு யாரிடமும் பிரார்த்திக்கவேண்டிய அவசியம் இல்லையே?
ஆகவே எமது அன்பிற்குரிய கிறிஸ்தவ சகோதரர்களே!
இயேசுவின் போதனைகளை ஆழமாய் சிந்தியுங்கள்.அவர் தனக்கு கடவுள் தன்மை உள்ளது.தானே அனைத்தையும் செய்வதாக கூறியுள்ளாரா? அல்லது கடவுளின் அருளினால் அனைத்தையும் செய்வதாக கூறியுள்ளாரா? பைபிளிலிருந்தே ஆதாரத்தை காட்டியுள்ளோம்.சிந்தித்து சீர்பெறுவீர!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக