தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 18 நவம்பர், 2016

கண்ணதாசன் பாடல்களில் தமிழ் இலக்கியங்களின் தாக்கம்!


Written by இரா. சம்பந்தன் 

காலத்தால் அழிக்க முடியாத பல சினிமாப் பாடல்களைத் தமிழ் மக்களுக்குத் தந்தவர் வித்துவான் முத்தையா என்ற பெயரோடு செட்டி நாட்டிலிருந்து சினிமாவுக்கு வந்த கண்ணதாசன் அவர்கள். சிலம்புக்கும் மணிமேகலைக்கும் அடுத்து மாறுபட்ட மதங்களைப் போற்றி இலக்கியம் செய்த புண்ணிய மனிதன் அவர்.
ஆடவந்த தெய்வம் படத்திலே செந்தமிழ்த் தேன் மொழியாள் என்ற பாடலுக்கு எழுதிய சில்லென்று பூத்த சிறு நெருஞ்சிக் காட்டினிலே என்னை நில்லென்று கூறி நிறுத்தி வழி போனாளே என்ற பல்லவி பலராலும் புகழப் பட்டபோது அது என்னுடையது அல்ல. கிராமியப் பாடல் ஒன்றிலிருந்து இருந்து எடுத்தேன் என்று வெளிப்படையாக பேசிய மனிதர் அவர்.

அவர் தான் கற்ற இலக்கியங்களில் இருந்து எத்தனையோ செய்யுடகளை எடுத்து தமிழ்ச் சினிமாப் பாடல்களுடன் கலந்து நல்ல பல பாடல்களைத் தந்தார்! அத்தனையுமே இன்றும் இலக்கிய மணம் வீசி நிற்கின்றன!

நன்னெறி என்ற நீதி நூலிலே சிவப்பிரகாச சுவாமிகள் ஒரு கருத்தைச் சொன்னார். பலவீனமானவர்கள் தாங்கள் பலமானவர்களோடு கூடி நிற்கும் வசதி கிடைத்தால் எந்தப் பலசாலியான பகைவருக்கும் பயப்பட மாட்டார்கள்! இதற்குச் சிவப்பிரகாசர் ஒரு உதாரணமும் காட்டினார். பொதுவாக பாம்புகள் கருடனுக்குப் பயப்படும். ஆனால் சிவபெருமானின் சடாமுடியிலே இருக்கின்ற பாம்பானது சிவபெருமான் கூட இருக்கும் தைரியத்தில் பறவைகளுக்கு அரசனான கருடனைப் பார்த்துப் ஒரு போதும் பயப்பட மாட்டாது என்றார் அவர்.

மெலியோர் வலிய வரவலரை அஞ்சார்
வலியோர் தம்மைத்தாம் மருவில் - பலிஏர்
கடவுள் அவிசடைமேல் கட்செவி அஞ்சாதே
படர்நிறைப் புள்அரசைப் பார்த்து!
(கட்செவி – பாம்பு புள் அரசு – கருடன்)

சூரிய காந்தி என்ற படத்துக்கு பாடல் இயற்றும் போது கண்ணதாசன் நன்னெறியில் காணப்படும் இந்தச் செய்யுளைக் கையில் எடுத்தார். பரமசிவன் கழுத்தில் இருந்து பாம்பு கேட்டது கருடா சௌக்கியமா? யாரும் இருக்கும் இடத்தில் இருந்து கொண்டால் எல்லாம் சௌக்கியமே கருடன் சொன்னது அதில் அர்த்தம் உள்ளது! என்று எழுதினார் கண்ணதாசன். இப்பாடல் இன்று கேட்டாலும் மன உணர்வுகளைத் தட்டி எழுப்பும் தன்மையுடன் விளங்குவது மட்டுமல்ல சிவப்பிரகாசரின் நன்னெறியைத் தெரியாதவர்கள் மனத்தில் கூட கண்ணதாசன் பாடலாக அந்தக் கருத்து இடம் பிடித்துக் கொண்டது!

அது போல நளவெண்பாவிலே புகழேந்திப் புலவர் அருமையானதொரு இலக்கியக் காட்சியைக் காட்டுவார். அழகான பெண்ணொருத்தி குளத்திலே மலர் பறித்துக் கொண்டிருந்தாள். பூவிலே இருந்த வண்டு ஒன்று அவள் முகத்தைப் பார்த்து அந்த முகமும் ஒரு தாமரை மலர் என்று நினைத்து முகத்தில் அமரப் போனது. உடனே தன் கையை எடுத்து அந்த வண்டைத் தடுத்தாள் அந்தப் பெண். தன்னைத் தடுத்த கையைப் பார்த்த வண்டு அந்தக் கையும் நீரிலே பூத்திருக்கும் காந்தள் மலர்தான் என்று நினைத்து அந்தக் கையிலே பாய்ந்து இருந்து விட்டது. உடனே அந்தப் பெண் பயத்தினால் நடுங்கி வியர்த்து விட்டாள் என்று அந்தக் காட்சி வரும்.

மங்கை ஒருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கையம் என்று எண்ணிப் படிவண்டை – செங்கையால்
காத்தாள் அக் கைமலரை காந்தள் என பாய்தலுமே
வேர்த்தாளை காண் என்றான் வேந்து!

இந்தக் காட்சியை வல்லவனுக்கு வல்லவன் படத்துக்கு பாட்டு எழுதும் போது அங்கே கொண்டு வருகின்றார் கண்ணதாசன்! நான் மலரோடு தனியாக ஏனிங்கு நின்றேன் என்று தொடங்கியவர் பொன் வண்டொன்று மலரென்று முகத்தோடு மோத நான் வளைகொண்ட கையாலே மெதுவாக மூட என் கருங்கூந்தல் கலைந்தோடி மேகங்கள் ஆக நான் பயந்தோடி வந்தேன் உன்னிடம் உண்மை கூற! என்று எழுதினார்.

உண்மையிலே செய்தி ஒன்றாக இருப்பினும் புகழேந்தியார் காட்சியில் கண்ணதான் சிறு மாற்றம் செய்து விட்டார். புகழேந்தியார் கருத்தை அப்படியே சிதைக்காமல் பாடலாக்கும் அறிவும் திறமையும் உடையவர் கண்ணதாசன். அப்படியிருந்தும் முழுமையாக இலக்கியச் செய்திகளை பாடல்களில் கொண்டுவர அவரால் முடியவில்லை!
காரணம் மிகவும் வெளிப்படையானது. இசை அமைப்பாளர் தரும் மெட்டுக்குப் பல பாடல்களை இயற்ற வேண்டிய கட்டாயம் அந்தப் பிறவிக் கவிஞனுக்கு இருந்தது. திரைத் துறையில் வர்த்தக ரீதியாக நிலைக்க அதை ஏற்றுக் கொள்ள வேண்டிய தேவையும் அந்தக் கவிஞனுக்கு இருந்தது.

எனவே கிடைத்த மெட்டுக்களோடு தன்னால் முடிந்த அளவுக்கு இலக்கிய நயங்களைத் தொட்டுக் காட்டிக் கொண்டு போனார் கண்ணதாசன். அவர் தொட்டுக் காட்டிய இலக்கியச் செய்திகள் தமிழ்ச் சினிமாப் பாடல்களில் பலநூற்றுக் கணக்கானவை என்பது பலருக்குத் தெரியாது.

பாரதியாரின் பாஞ்சாலி சபதத்தில் நீரை உண்ட மேகம் போல நிற்கும் ஆயிரங்கள் வாரணங்கள் கண்டாய் என்ற கவிதை வரிகளில் இருந்து தோன்றியதே கண்ணதாசனின் நீருண்ட மேகங்கள் நின்றாடும் கயிலையில் நீ வாழ இடமும் உண்டு என்ற திருவிiளையாடல் படப் பாடல் வரிகள் ஆகும்!
கண்கள் இரண்டும் அவன் கழல் கண்டு களிப்பன ஆகாதே! என்றார் திருவாசகத்தில் மாணிக்கவாசகர்! கண்கள் இரண்டும் என்று உம்மைக் கண்டு பேசுமோ என்றார் மன்னாதி மன்னனில் கண்ணதாசன்!

ஓடக் காண்பது பூம்புனல் வெள்ளம்! ஒடுங்கக் காண்பது யோகியர் உள்ளம்! என்றார் குற்றாலக் குறவஞ்சியில் திரிகூடக் கவிராயர்! ஆடக் காண்பது காவிரி வெள்ளம் அலையக் காண்பது கன்னியர் உள்ளம் என்றார் கண்ணதாசன்!

மாதா உடல் சலித்தாள் வல்வினையேன் கால் சலித்தேன் என்றார் பட்டினத்தார். பெற்றவள் உடல் சலித்தாள் பேதை நான் கால் சலித்தேன் என்றார் கவிஞர்! பத்தும் பசி வந்திடப் பறந்து போம் என்றாள் ஒளவை! பத்தும் பறந்திடும் பசி வந்தால் மறந்திடும் என்றார் கவிஞர். கொடிது கொடிது வறுமை கொடிது! அதனிலும் கொடிது இளமையில் வறுமை என்றாள் ஒளவை! இளமையில் கொடுமையிந்த வறுமையம்மா என்றார் கண்ணதாசன். இதையெல்லாம் சரஸ்வதி சபதம் படத்தில் வரும் தாய் தந்த பிச்சையிலே பிறதேனம்மா என்ற ஒரே பாடலில் காணலாம்.

அது போல கலிங்கத்துப் பரணி குறுந்தொகை நாலடியார் சித்தர் பாடல்கள் நாலாயிரத் திவ்வியப் பிரபந்தம் கம்பராமாயணம் திருக்குறள் முத்தொள்ளாயிரம் என்று எத்தனையோ தமிழ் இலக்கிங்களின் தாக்கத்தினைக் கண்ணதாசன் பாடல்களில் நாம் காண முடியும்!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக