தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 15 நவம்பர், 2016

முதலாவது மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்தால்..சொத்து யாருக்கு? கொஞ்சம் சட்டம் பற்றி தெரிஞ்சுக்கலாம் வாங்க..

இலங்கையிலுள்ள எல்லா விடயங்களுக்கும் சட்டங்கள் காணப்படுகின்றன. சட்டத்தை பாராளுமன்றம் கட்டுப்படுத்துகிறது. நாட்டின் பிரஜைகள் ஒவ்வொருவரும் கண்டிப்பாக அறிந்து வைத்திருக்க வேண்டும்.
நீதிமன்றத்தில் ஆஜராகும் நபர்கள் தனக்கு சட்டம் தெரியாது எனக்கூறுவதை நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளாது. எனவே அனைவரும் கட்டாயம் நாட்டின் சட்டம் தொடர்பில் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
குடும்பச்சட்டம்
கணவன், மனைவி ஒன்றிணைந்து தங்களது குழந்தைகளை பராமரித்து, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து வாழ்வதே குடும்பமாக சட்டத்தினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.
இக்குடும்ப விவகாரங்களை கட்டுப்படுத்தும் சட்டம், குடும்பச் சட்டம் என அழைக்கப்படுகிறது.
குடும்ப விவகாரங்களான திருமணம், பராமரிப்பு, மகவேற்பு, விவாகரத்து என்பவற்றை குடும்பச் சட்டம் ஆளுகிறது.
குடும்பச் சொத்து சட்டம்
•பாகப்பிரிவினை
தந்தை வழியால் கிடைக்கப்பெறும் சொத்துக்களில் வாரிசுகளின் உரிமையே பாகப்பிரிவினை எனப்படுகிறது. அதாவது குடும்பச் சொத்தானது குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களின் அனுமதியுடனும், குடும்ப உறுப்பினர்களுக்கு பிரித்து கொடுக்கப்படுவதாகும். இவ்வாறான பூர்வீகச் சொத்துக்கள் பிரித்து கொடுக்கப்படுவதில் குடும்ப உறுப்பினருக்கு ஆட்சேபனை இருந்தால் இது தொடர்பில் பாகப்பிரிவினையை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும்.
•தான பத்திரம்
நெருங்கிய உறவுகளுக்குள் சொத்து உரிமையினை மாற்றம் செய்து தரப்படுவதே தானப்பத்திரம் ஆகும். இது சொத்து விற்பனைக்குள் அடங்காது. அதாவது சகோதரனால் சகோதரிக்கோ அல்லது சகோதரியால் சகோதரனுக்கோ தானமாக வழங்கப்படுவதே தானப்பத்திரமாகும். ஒருவரிடமிருந்து தானமாக பெறப்பட்ட சொத்து கணவனுக்கோ / மனைவிக்கோ தானமாக வழங்கப்படலாம். அதன் போது செய்வதன் மூலம் முத்திரைத்தாள் கட்டணம் இல்லாமல் உரிமை மாற்றம் செய்து கொள்ள முடியும்.
•உயில்
இது தனது விருப்பத்திற்கு ஏற்றாவாறு ஒரு நபரால் தனது உறவினருக்கோ, அறக்கட்டளை நிறுவனங்களுக்கோ, மூன்றாம் நபருக்கோ, ரத்த சம்பந்தம் அற்றவர்களுக்கோ அல்லது ஒரு நிறுவனத்திறகோ தனது விருப்பத்தின் பேரில் எழுதி வைக்கப்படும் ஆவணம். இந்த ஆவணம் எழுதி வைக்கப்படும் போது எழுதி வைக்கும் நபர் இறந்ததன் பின்பு தான் யாரின் பெயரில் குறித்த சொத்தை எழுதி வைக்கிறாரோ அவருக்கு எந்தவித சிக்கலும் இன்றி போய்ச் சேரும். எழுதி வைக்கப்படும் உயிலானது எழுதுபவர் தனது சுயநினைவோடு எழுதி வைக்கும் ஆவணமே இது. இருப்பினும் பூர்வீக சொத்துக்களை இவ்வாறு உயில் எழுத முடியாது. ஆனால் உயில் எழுதாமல் ஒருவர் இறந்துவிட்டால் குறித்த சொத்து அவரது வாரிசுகளுக்கே போய்ச் சேரும். சுயநினைவின்றி எழுதும் உயில் சட்ட ரீதியில் செல்லாது.
•பெண்களுக்கான சொத்துரிமை
பெற்றோர்கள் வழிவரும் பெண்களுக்கு சொத்து தொடர்பான உரிமை உள்ளது. ஆனால் பெண்கள் சொத்து தேவையில்லை எனக் கூறும் பட்சத்தில் அந்த சொத்து மற்ற வாரிசுகளுக்கு பிரித்து கொடுக்கப்படும்.
சொத்துக்கள் பிரிக்கப்படும் போது குறிப்பிட்ட ஒரு வாரிசை புறக்கணித்துவிட்டு சொத்து தொடர்பில் எடுக்கப்படும் எந்த தீர்மானங்களும் சட்ட ரீதியாக செல்லாது. நீதிமன்றங்களில் இது தொடர்பான விடயங்கள் மறைக்கப்பட்டு தீர்வு பெற்றுக்கொள்ளப்படுமாயின் பின்னாளில் இந்தவிடயம் தெரியவரும் எந்த சந்தர்ப்பத்திலும் இந்த தீர்மானம் ரத்து செய்யப்படும்.
இது போன்று இந்துக்களுக்கு முதலாவது மனைவி உயிருடன் இருக்கும் போது மறுமணம் செய்துகொள்வது அங்கீகரிக்கப்படவில்லை. எனவே இந்துக்கள் முதலாவது மனைவி உயிருடன் இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்துகொண்டால் இரண்டாவது மனைவிக்கு சொத்துரிமை இல்லை. சொத்துரிமை முற்றிலுமே முதலாவது மனைவிக்கும் அவர் வழி சார்ந்த பிள்ளைகளுக்கு மட்டுமே.
குற்றவியல் சட்டம்
சமூகத்தில் நடைபெறுகின்ற குற்றச்செயல்களை தடுப்பதற்காகவும், குற்றவாளிகளை திருத்தி இவ்வாறான தீய குணங்களில் இருந்து விடுவித்து புதிய அமைதியான சூழலை உருவாக்கி கொடுக்கும் பொருட்டும், கொலை, திருட்டு, ஏமாற்றம், துஷ்பிரயோகம் மற்றும் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவதை தடுக்கும் நோக்கிலும் உருவாக்கப்பட்ட சட்டம்.
காணிச்சட்டம்
சொத்துக்கள் தொடர்பான கொள்வனவு, விற்பனை, பதிவு, வாடகைக்கு வழங்குதல், குத்தகைக்கு வழங்கள் தொடர்பான விடயங்கள் இந்த சட்டத்தில் அடங்கும். இச்சட்டமானது அசைவற்ற சொத்துக்களின் உரிமையை ஆளுகின்றது. ஒருத்தருடைய சொத்திலிருந்து இன்னொருவர் முறையற்ற விதத்தில் இலாபம் பெறுவதையும், சொத்து மோசடியையும் தடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டதே இந்த சட்டம்.
நிர்வாகச் சட்டம்
அரசினுடைய நிர்வாகச் செயற்பாடுகளுடன் ஒன்றித்து செயற்படுவதற்காகவும், அரசினுடைய சேவைகள் முறையாக கிடைக்கும் விதத்திலும் அல்லது முறையாக கிடைக்கிறதா என்பதை அறியும் நோக்கிலும் நடைமுறைப்படுத்தப்பட்ட சட்டம்.
இருப்பினும் சட்டங்கள் காலத்தின் தேவையைப் பொறுத்து மாற்றமடைகின்றன. சட்டம் தேவையின் பொருட்டும், நீதி கிடைக்கும் முறையினை பொருட்டும் மாற்றமடைகின்றன.
பாராளுமன்றத்தின் தேவையை கருத்தில் கொண்டும் பொருளாதார வளர்ச்சியை கருத்தில்கொண்டும் உருவாக்கப்படுகிறது சட்டம்.
தொழிலாளர் சட்டம்
தொழிலாளர்களின் உரிமைகளை பாதுகாப்பதை நோக்காகக் கொண்டே குறித்த சட்டம் உருவாக்கப்பட்டுள்ளது.
இச்சட்டத்தில் சம்பளச் சபைகள் கட்டளைச் சட்டம், கடைகள் மற்றும் அலுவலகச் சட்டம் ஆகியவற்றின் ஏற்பாடுகளுக்கு அமைய ஆகக் குறைந்த வேலை நேரம், மேலதிக கொடுப்பனவுகள் ஆகியவற்றை தீர்மானித்தலும், அவற்றுக்குரிய சட்ட ஏற்பாடுகளை நடைமுறைப்படுத்தல் தொடர்பில் ஆராய்வதற்காக உரவாக்கப்பட்ட சட்டம்.
சுற்றாடல் சட்டம்
சூழல் மாசடைவதை தடுப்பதற்காகவும், இதனால் மனிதர்களுக்கு ஏற்படும் விளைவுகள் தொடர்பில் உருவாக்கப்பட்ட சட்டம். இதன் மூலம் சூழலில் உள்ள வளி, ஒளி, நீர், நிலம் என்பவற்றிட்கு ஏற்படும் மாசு தொடர்பில் கவனத்தில் கொள்ளப்படும்.
மனித உரிமைகள் சட்டம்
தனி மனிதனின் உரிமையை பாதுகாப்பதற்காகவும், அவனது பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கின்ற விடயங்கள் தொடர்பிலும் அவதானம் செலுத்துவதற்காக உருவாக்கப்பட்ட சட்டம். மனிதர்களின் உரிமைகள் தொடர்பில் அவதானம் செலுத்தி அவற்றிட்கான தீர்வினை பெற்றுக்கொடுக்கும் வகையில் செயற்படக்கூடிய சட்டம்.
இவ்வாறான சட்டங்கள் நாம் அன்றாட வாழ்வில் முக்கியமாக தெரிந்துவைத்திருக்க வேண்டிய சட்டங்கள். இந்த சட்டங்கள் பற்றி நாம் அனைவரும் தெரிந்து வைத்திருப்பது அவசியம். இந்த சட்டங்களினால் பெறப்படும் உபயோகங்கள் மற்றும் அவை தொடர்பான தண்டனைகள் பற்றி அறிந்து வைத்திருப்பது அவசியம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக