தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 17 ஜனவரி, 2016

ஜல்லிக்கட்டை 'பீட்டா' எதிர்ப்பது ஏன்?


ஜல்லிக்கட்டு தடைக்குப் போராடும் 'பீட்டா’வின் ரத்தக் கறை படிந்த உண்மை முகம்! - அதிர்ச்சி பின்னணி
தமிழர்களின் பாரம்பர்ய பண்டிகையான பொங்கலையொட்டி நடத்தப்படும் ஜல்லிக்கட்டுக்கு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, விலங்குகள் நல அமைப்பான 'பீட்டா' (PETA - People for the Ethical treatment of animals ) இடைக்காலத் தடை வாங்கியிருக்கிறது.
'' ஜல்லிக்கட்டு" என்பது ஒரு மூடநம்பிக்கை என்றும், பிற்போக்குத்தனமானது என்றும், விலங்குகளைத் துன்புறுத்தி, மனிதர்களைக் காயப்படுத்தும் காட்டுமிராண்டித் தனம் என்றும் நீதிமன்றத்தில் வாதாடி வெற்றி பெற்றுள்ள பீட்டா நிறுவனத்தின் மறுமுகத்தைம் 'ஹாஃபிங்டன் போஸ்ட்' என்ற பத்திரிகை அம்பலப்படுத்தியுள்ளது. அதன் சுருக்கமான விவரம் இது...
யார் இந்த PETA?

சர்வதேச அளவில், விலங்குகளின் உரிமைக்காகப் போராடும் ஓர் நிறுவனமாகத் தன்னை காட்டிக் கொள்ளும் இந்த நிறுவனம், 1980ம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள விர்ஜினியாவில் தொடங்கப்பட்டது. விலங்குகளை உண்ணவோ, அவற்றிலிருந்து எடுக்கப்படும் பொருட்களைப் பயன்படுத்தவோ கூடாது, விலங்குகளை வைத்து எந்த மருத்துவ ஆய்வும் செய்யக் கூடாது என்பதெல்லாம் இவர்களின் முக்கியக் கொள்கை. அதே சமயம் செல்லப்பிராணி வளர்ப்போர், அவற்றின் மீது செலுத்தும் அன்பு மட்டுமே இந்த நிறுவனத்தின் மிகப் பெரிய மூலதனம். அந்த மூலதனத்தை, முதலீடாக மாற்றியதால் கடந்த 35 ஆண்டுகளில் 30 லட்சம் பேர் பீட்டாவில் உறுப்பினர்களாக சேர்ந்துள்ளனர். லாப நோக்கு இல்லாத நிறுவனமாகத் தன்னைக் காட்டிக்கொள்ளும் இந்த ’பீட்டா’ ஆண்டொன்றுக்கு சுமார் 43 மில்லியன் அமெரிக்க டாலர்களை வருவாயாக ஈட்டி வருகிறது.
இதற்கு முக்கியக் காரணம், அனாதையாக அலையும் அப்பாவி விலங்குகளைக் காப்பாற்றி அவற்றிற்குப் புகலிடம் அளிக்கும் சரணாலயமாக 'பீட்டா' செயல்படுகிறது என்று மக்களிடம் நிலவும் நம்பிக்கைதான்.

 ஆனால் உண்மையில் 'கருணைக் கொலை' என்ற பெயரில் ’பீட்டா’ விலங்குகள் இனத்தையே அழித்து வருவதாக அந்தக் கட்டுரை குற்றம் சாட்டியுள்ளது.
அமெரிக்காவில்தான் உலகிலேயே அதிகமாக செல்லப்பிராணிகள் வளர்க்கப்படுகிறது. இங்கு அனாதையாக மீட்கப்படும் செல்லப்பிராணிகளை, உரிமையாளர்கள் 15 நாட்களுக்குள் வந்து மீட்டு செல்லவில்லையென்றால், அதனைக் கருணை கொலை செய்ய சட்டம் அனுமதிக்கிறது. இப்படி கருணை கொலை என்ற பெயரில் ஆயிரக்கணக்கான நாய்கள், பூனைகளை பீட்டா நிறுவனம் கொன்று குவித்திருப்பதாக சொல்லப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக அரசல் புரசலாகப் பேசப்பட்டு வந்த இந்தச் செய்தி தற்போது, ஆவணப்படங்களுடன் ஆதாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. ’பீட்டா’ வின் முகத்திரையைக் கிழிக்குமாறு சில ஆதாரங்களை வெளியிட்டிருக்கிறார் 'நேதன் இனொக்ராட்' என்ற சமூக ஆர்வலர். ஹாஃபிங்டன் போஸ்டில் வெளி வந்துள்ள, அந்த கட்டுரையில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள் அதிர வைக்கும் ரகம்.

* பீட்டா நிறுவனத்தின் வண்டிகளிலேயே விலங்குகளைக் கொல்வதற்கான விஷ ஊசிகளைக் கொண்ட பைகள் எப்போதும் தயார்நிலையில் இருக்கின்றன.
* பீட்டா நிறுவனம், கொல்லப்பட்டச் சில வகை விலங்குகளின் உடல்களைப் பதப்படுத்தி வைக்க, 9000 டாலர்கள் செலவில், ஒரு பெரிய குளிர்பதன இயந்திரத்தையே இயக்கி வருகிறது.
* 2011-ம் ஆண்டு மட்டும் சுமார் 96% விழுக்காடு வீட்டு விலங்குகளைக் கொன்றிருக்கிறது ‘பீட்டா’. அதேபோல 2012-ல் 602 நாய்கள், 1045 பூனைகள் கொன்று குவித்திருக்கிறது.
*மொத்தத்தில் கடந்த 11 ஆண்டுகளில் மட்டும், சுமார் 30 ஆயிரம் விலங்குகளைக் கொன்றிருக்கிறது ’பீட்டா’.
*இந்த விலங்குகளைப் பற்றிய கணக்கோ, புள்ளிவிவரமோ எந்த கணக்கேடுகளிலும் தென்படவில்லை. கருணைக் கொலை என்ற பெயரில் அமைதியாகக் கொல்லப்படும் இந்த விலங்குகள், சத்தமின்றி அப்புறப்படுத்தப்படுகின்றன. சில நேரங்களில், குப்பைகளைக் கட்டுவது போல, பிளாஸ்டிக் பைகளில் மூட்டை கட்டப்பட்டுத் தூக்கியெறியப்பட்டிருக்கின்றன.
* இந்த ஆய்வின் ஒரு பகுதியாக, ’பீட்டா’வில் அதிரடி சோதனை ஒன்று நடத்திய போது, தெரிய வந்த உண்மை அதிர்ச்சியளிக்கிறது. ’பீட்டா’ வால் விளம்பரப்படுத்தப்படுவது போல, விலங்குகளுக்கான காப்பகங்கள் எதுவும் அங்கு இல்லையென்றும், வெறும் கூண்டுகளில்தான் விலங்குகள் அடைக்கப்பட்டிருக்கின்றன என்பதும் தெரிய வந்துள்ளது.
*வீதிகளில் திரிந்து கொண்டிருக்கும் பூனைகள், பீட்டாவின் கூண்டுகளில் போதிய இடமில்லாவிட்டால், அவற்றைப் பிடிக்கும் இடங்களிலேயே சத்தமில்லாமல கொலை செய்யப்படுவதும் உண்டாம்.
* விலங்குகளின் உரிமைகளை காப்பாற்றுவதாக சொல்லிக் கொண்டிருக்கும் இந்த நிறுவனம், அதன் வாழ்வாதாரத்தை மதிப்பதேயில்லை.
* விலங்குகளை தத்துக் கொடுப்பதற்காக எந்த வகையிலும் விளம்பரப்படுத்துவதில்லை. ஆனால் விலங்குகளுக்கு இன விருத்திக் கட்டுப்பாடு செய்யுங்கள் என்று அவற்றின் பாலின உரிமையை கூட பீட்டா பறிக்கிறது.
* இவர்களின் அதிகபட்ச விளம்பரங்கள், மாடல் அழகிகளை படமெடுத்து, அதன் மூலம் விலங்குகளைக் காப்பாற்றச் சொல்வதேயாகும்.
* இது குறித்து குரலெழுப்பிய சில ஆர்வலர்களிடம், சட்டரீதியாகப் பார்த்துக் கொள்ளலாம் என்று அலட்சியமாகப் பதிலளித்திருக்கிறது பீட்டா .


ஜல்லிக்கட்டை 'பீட்டா' எதிர்ப்பது ஏன்?
தமிழகத்தின் மாட்டுப் பால் சந்தை, ஆண்டுக்கு மூன்றரை லட்சம் கோடி ரூபாய் புழங்கும் ஒரு பெரும் வர்த்தகம். ஜல்லிக்கட்டு காளைகள்தான் தமிழகத்தை பொறுத்தவரை, இன விருத்திக்கு முக்கியமானவை.
ஜல்லிக்கட்டு என்ற ஒன்றை அழித்து விட்டால், நாட்டு காளைகள் இனம் மங்கி அழியத் தொடங்கி விடும். இதனால் கலப்பின காளைகளை தமிழகத்திற்குள் கொண்டு வர முடியும். இதற்காகத்தான் ஜல்லிக்கட்டை இவ்வளவு தீவிரமாக பீட்டா எதிர்க்கிறதாம். மாட்டுத்தீவன தயாரிப்பு நிறுவனங்கள், கால்நடை மருந்து நிறுவனங்கள் இதன் பின்னணியில் இருப்பதாகச் சொல்லப்படுகிறது.
இது குறித்து முழுமையான உண்மைகளை மத்திய, மாநில அரசாங்கங்கள் கண்டுணர்ந்து உலகறியச் செய்ய வேண்டும்!
தன் கையில் ரத்தத்தை வைத்துக் கொண்டு அடுத்தவர் கையை கழுவ முயற்சிக்கிறது பீட்டா!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக