தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 21 ஜூலை, 2015

மேலாடை மீண்ட வரலாறு


சாணார், ஈழவர், காவேரிநாவிதர், பறையர், புலையர், சாம்பவர், வள்ளுவர், சேரமர் போன்ற சாதிகளில் உள்ள பெண்கள், மேலாடை அணிவதிலிருந்து இந்து ஆதிக்க சாதிகளான நம்பூதிரிகள், நாயர்கள், வேளாளர்கள், தமிழ்ப் பார்ப்பனர்களால் தடை செய்யப்பட்டனர். அரசில் பெரும் பொறுப்பு வகிக்கும் அதிகாரிகள் மற்றும் தலைவர்கள் முன்பு திறந்த மார்போடுதான் இருக்க வேண்டும். எக்காரணத்தை முன்னிட்டும் மேலாடை கொண்டு மூடுவது சாதிக் குற்றமாகக் கருதப்பட்டது. 
...
ஒடுக்கப்பட்ட இந்துக்கள் மேலாடை அணியவோ, நகைகள் அணியவோ உரிமை அளிக்கப்பட மாட்டாது. ஆனால் கிறிஸ்தவ மதத்துக்கு மாறியவர்களுக்கு இந்த கட்டுப்பாடுகள் கிடையாது என்பதாகத் தீர்ப்புக் கூறியது. ஆங்கிலேய அரசின் வற்புறுத்தலால் சொல்லப்பட்ட அந்தத் தீர்ப்பு வேறு விதமான விளைவு ஏற்படுத்தியது. அதன் பின் கன்னியாகுமரியில் ஏற்பட்ட மாற்றங்கள் யாரும் எதிர்பாராதது. அனைவரும் கூடிப் பேசினர். மதங்களையும் கடவுள்களையும் விட உரிமைதான் முக்கியம் என்று முடிவெடுத்தனர். 80%க்கும் அதிகமான நாடார் இன மக்கள் இந்து மதத்திலிருந்து கிறிஸ்தவ மதத்திற்கு மாறினர். பல்வேறு போராட்டங்களின் மூலம் கிடைக்கப் பெறாத தோள்சீலை அணியும் உரிமை கிறிஸ்தவ மதத்திற்கு மாறியதன் மூலமே அங்குள்ள நாடார்களுக்குக் கிடைத்தது. இன்றும் குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவ மதம் வேரூன்றி இருப்பதற்கு இதுவே காரணம்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக