தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 21 ஜூன், 2015

தந்தையர் தினம்



இன்று உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்படுகிறது.
குழந்தையை கருவில் சுமந்து பெற்றெடுப்பவள் தாய், ஆனால் தன் குழந்தையை ஆயுள் வரை மனதில் சுமப்பவர் தந்தை.
தந்தையர்களுக்கு நன்றி செலுத்தும்விதமாவும், மரியாதை செலுத்தும்விதமாகவும் ஒவ்வொரு ஆண்டும் யூன் மாதத்தின் மூன்றாவது ஞாயிறு தந்தையர் தினமாக கொண்டாடப்படுகிறது.
எப்படி வந்தது தந்தையர் தினம்
கடந்த 1862ம் ஆண்டுகளில் அமெரிக்க ராணுவ வீரராக இருந்தவர் வில்லியம் ஜாக்சன் ஸ்மார்ட். இவர் வாஷிங்டன் அருகே உள்ள ஸ்போகேனே என்ற நகரில் மனைவி எல்லன் விக்டோரியா சீக் ஸ்மார்ட்டுடன் வசித்து வந்தார்.
இந்த தம்பதியின் முதல் குழந்தையாக மகள் சொனாரா ஸ்மார்ட் டோட் 1882ல் பிறந்தார். சொனாராவுக்கு 16 வயதாகும் போது, எல்லன் 6வது முறையாக கர்ப்பமடைந்து ஆண் குழந்தையை பிரசவித்து இறந்து போனார்.
பிறந்த குழந்தையுடன், 4 மகன்களையும், மகள் சொனாரா என 6 பிள்ளைகளையும் தனி ஆளாக போராடி காப்பாற்றுவதை தனது வாழ்க்கையின் லட்சியமாக ஏற்றார் வில்லியம் ஜாக்சன்.
அதனால் மறுமணம்கூட செய்து கொள்ளாமல் குழந்தைகளை பராமரிப்பதிலேயே கவனம் செலுத்தினார்.
கைக்குழந்தையை வைத்துக் கொண்டு தந்தை படும் சிரமங்களை நேரில் பார்த்து வளர்ந்த மகள் சொனாராவுக்கு தந்தையின் மீது அளவு கடந்த பாசமும் மரியாதையும் ஏற்பட்டது.
இந்நிலையில், 1909ம் ஆண்டு அமெரிக்காவில் அன்னையர் தினம் ஏற்றுக் கொள்ளப்பட்டதை அறிந்த சொனாரா, தனது தந்தை போன்றவர்களின் தியாகத்தை போற்றும் வகையில் தந்தையர் தினம் கொண்டாட வேண்டும் என 1910ம் ஆண்டில் கோரிக்கை விடுத்தார். தனது தந்தையின் பிறந்த நாளான யூன் 5ம் திகதி கொண்டாட தேவாலயத்தில் அனுமதி கோரினார்.
ஆனால், ஏற்பாடுகளை செய்ய கால அவகாசம் தேவைப்பட்டதால், முதல் தந்தையர் தினம் 1910 ஆம் ஆண்டு ஜூன் 19 ஆம் திகதி ஸ்போகேனே நகரில் கொண்டாடப்பட்டது.
அதைத்தொடர்ந்து ஆண்டு தோறும், யூன் மாதத்தின் 3வது ஞாயிற்றுக்கிழமையை தந்தையர் தினமாக கொண்டாடி அதை பிரபலப்படுத்தி வந்தார் சொனாரா.
நாடு முழுவதும் தந்தையர் தினம் கொண்டாடப்பட வேண்டுமென கருதிய சொனாரா இது குறித்து அரசுக்கு கோரிக்கை விடுத்தார். அவரின் கோரிக்கை நிறைவேற 50 ஆண்டுகளுக்கு மேல் ஆனது.
1966ம் ஆண்டு அமெரிக்க அதிபர் ஜான்சன் யூன் மாதம் 3வது ஞாயிற்றுக் கிழமையை தந்தையர் தினம் என அறிவிக்கலாம் என சட்ட முன் வடிவில் கையொப்பமிட்டார்.
அதற்கு 6 ஆண்டுகளுக்குப்பிறகு ஆட்சிப் பொறுப்பை ஏற்ற அதிபர் ரிச்சர்ட் நிக்சன் 1972ல் அதிகாரப்பூர்வமாக தேசிய அளவில் தந்தையர் தினம் அனுசரிக்க ஆணை பிறப்பித்தார்.
இன்றைக்கு அமெரிக்காவில் மட்டுமல்ல பெரும்பாலான நாடுகள் தந்தையர் தினம் என்று உச்சரிக்கத் துவங்கியுள்ளதை சொனாராவின் முயற்சிக்குக் கிடைத்த வெற்றி என்றே சொல்லலாம்.
இந்நாளில் செய்ய வேண்டியவை
அன்புக்கு எப்படி அன்னையோ, அதுபோல குழந்தையின் அறிவுக்கு தந்தையே முன்னோடியாக திகழ்கிறார். பெரும்பாலான வீடுகளில் குடும்ப நிர்வாகம் தந்தையின் கைகளிலேயே இருக்கிறது.
குடும்பத்தில் தந்தையின் உழைப்பே அதிகமாக இருக்கும். வாழ்நாளில் கடைசிவரை, குழந்தைகளுக்காக உழைக்கும் தந்தையருக்கு நன்றி செலுத்துவோமாக.
தந்தைக்கு, நேரிலோ, தொலைபேசியிலோ, பரிசுப் பொருள் அல்லது பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவித்து, இத்தினத்தை கொண்டாடலாம்.
வாழ்வின் பாதைக்கு நம்மை அழைத்துச்சென்ற அப்பாவின் தியாகத்திற்கு நன்றி கூறுவோமாக.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக