தொலைக்காட்சி!!

Search This Blog

Monday, January 19, 2015

நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.. அவர்களை கண் போன்று பாதுகாப்போம்...


பழங்காலத்தில் ஜப்பான் நாட்டில் விசித்திரமான ஒரு பழக்கம் நடைமுறையில் இருந்தது.

பெற்றோர்கள் வயதாகி முதுமையின் காரணமாக ஆற்றல் குறைந்து, மற்றவர்களுக்கு எவ்விதப் பயனும் அளிக்க முடியாத நிலைக்கு வந்துவிட்டால் அவர்களைத் தூக்கிக் கொண்டு போய் உயரமான மலைகளின் மேல் வைத்துவிட்டு வந்துவிடுவார்கள்..

எதுவும் செய்ய முடியாத நிலையில் உள்ள அம்முதியோர்கள் பசி, தாகத்தினால் தனிமையில் வாடி வதங்கி மடிவார்கள்.

இப்படியான சூழ்நிலையில் ஓர் இளைஞன் முதுமையடைந்த தன் தாயை சுமந்து கொண்டு மரங்கள் சூழ்ந்த காட்டுப்பகுதியில் மலை உச்சியை நோக்கி நடந்து கொண்டிருந்தான்.

தாய், மகன் இருவருமே எதுவும் பேசவில்லை!
ஆனால் சிறிது நேரத்தில் தன்தோளில் இருந்த தாயார். ஏதோ ஒருவித மணம் கொண்ட மரங்களின் சின்னசின்ன கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருவதை மகன் அறிந்தான்.

உடனே, அம்மா, ஏதோ ஒரு மாதிரியான மரத்தின் கிளைகளை ஒடித்துக் கீழே போட்டுக் கொண்டே வருகிறீர்களே! ஏன்?'' என்று கேட்டான் நடந்து கொண்டே.

அதற்கு தாயார், ""மகனே, நீ என்னை மலை மீது விட்டுவிட்டு வீடு திரும்பும்போது வழி தெரியாமல் திண்டாடக் கூடாதல்லவா?

இங்கே போடப்பட்டுள்ள கிளைகளின் வாசனையைக் கவனித்து நடந்தால் வழி தவறாமல் நீ பாதுகாப்பாக வீடு போய் சேரலாம். அதற்காகவே கிளைகளை அடையாளமாகப் போடுகிறேன்'' என்றாள்.

"வயதாகிவிட்ட தன்னை தவிக்கவிட்டுச் சென்றாலும் மகன் பத்திரமாக வீடு போய்ச் சேர வேண்டும் என்று நினைக்கும் பாசமிகுந்த இந்த தாயார் பயனற்றவரா? என்று உள் மனம் கேட்க, அவன் தன் தாயை மீண்டும் தன்வீட்டுக்கே கொண்டு வந்து பாசத்துடன் பராமரிக்கலானான் .

அதன்பின்பு அந்தக் கொடூரமான பழக்கம் அந்த நாட்டை விட்டே ஒழிந்தது.

இந்த கதை உண்மையா என்று யோசிப்பதை விட... இந்த கதை சொல்ல வரும் கருத்து நம் வாழ்வுக்கு மிக முக்கியம்.. நம் பெற்றோர்கள் எப்போதும் நம் நலன் நினைப்பவர்கள்.. அவர்களை கண் போன்று பாதுகாப்போம்...

No comments:

Post a Comment