தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, January 24, 2015

ரத்தக் காட்டேரி எனப்படும் டிராகுலாவின் உண்மை வரலாறு!

ரத்தக் காட்டேரி என்றும் பிற்கால ஐரோப்பாவில் வேம்பயர்(vampire) என்றும் பல்வேறு பெயர்களில் அழைக்கப்பட்ட டிராகுலாவின் வரலாற்றை பார்ப்போம்.
ஹங்கேரி நாட்டில் 1431ம் ஆண்டு வலேசியா(wallachia) எனும் சிறுநாட்டின் மன்னர் வம்சத்தில் பிறந்தவன் விளாட் டிராகுல்.
தற்கால ரொமேனியா, பல்கேரியா போன்ற நாடுகளின் பகுதிகள் தான் அக்காலத்தில் வலாக்கியா என்றழைக்கப்பட்டன.
தன் தந்தையின் மறைவுக்கு பின் ஆட்சிக்கு வந்த விளாட் சிலுவைப் போரில் இணைந்து கொண்டதோடு அப்போது வளர்ந்து வந்த ஓட்டோமானியப் பேரரசு சுல்தானுக்குக் கப்பம் கட்டுவதையும் நிறுத்தியுள்ளான்.
இதனால் கோபமடைந்த சுல்தான், அதிகாரிகள் இருவரை அனுப்பியுள்ளார். அரசவைக்கு விளாட் வந்த போது மொத்த அரசவையே எழுந்து நின்று வணங்கிய போது அந்த அதிகாரிகள் இருவரும் எழுந்து நிற்கவுமில்லை, தொப்பியைக் கழற்றி மரியாதை செலுத்தவும் இல்லை.
இதனால் கோபமடைந்த விளாட், தொப்பியை அவர்கள் தலையுடன் சேர்த்து ஆணி அடிக்க உத்தரவிட்டான்.
இதையறிந்த சுல்தான், சிலுவைப் போருக்கு மத்தியிலும் விளாடைக் கொல்ல ஒரு படையை அனுப்பியுள்ளார்.
அவர்கள் ஒரு குறுகலான மலைப் பாதையைக் கடக்கையில் எதிர்பாராதவிதமாக தாக்குதல் நடத்தி அவர்களை முறியடித்த விளாட், பிடிபட்ட அத்தனை துருக்கிய வீரர்களையும் கழுவேற்றினான்.
பின்னர் சுல்தான் மஹமதுவே ஒரு படையைத் திரட்டிக்கொண்டு விளாடை எதிர்த்துப் போரிட வந்தார்.
ஆனால் வந்தபோது பள்ளத்தாக்கு ஒன்றில் விளாட்டால் கழுவேற்றப்பட்ட 24,000 துருக்கிய வீரர்களைப் பார்த்து கடும் அதிர்ச்சி அடைந்து, போரிடாமலேயே திரும்பிச் சென்றார்.
சிலுவைப் போர் முடிந்ததும் விளாட்டை எதிர்த்து சுல்தான், 90,000 பேர் அடங்கிய பெரும் படையைத் தயார் செய்து விளாடின் சகோதரன் ராடின் தலைமையில் அனுப்பி வைத்தார்.
அண்ணன், தம்பிக்கு இடையே நடைபெற்ற சகோதர யுத்தத்தில் துருக்கியப் படையணி மேலும் வலுவடைந்த சூழலில் ராட், வலேசியா கோட்டையைப் பிடித்து ஆட்சியை பிடித்தான்.
ஹங்கேரி மன்னனிடம் உதவி கேட்கச் சென்ற டிராகுலாவை அவன் சிறையில் அடைத்தான். சுமார் 12 ஆண்டு சிறையில் இருந்த டிராகுலா, விடுதலை அடைந்ததும் 4000 வீரர்கள் உள்ள படையைத் திரட்டிச் சென்று வலேசியா மேல் போர் தொடுத்து ஆட்சியை மீண்டும் பிடித்து முடி சூடினான்.
ஆனால் மீண்டும் படையெடுத்து வந்த துருக்கிய படைகளுடன் போரிடுகையில் போர்க்களத்தில் வீர மரணம் அடைந்தான் டிராகுலா.
அவன் இறந்தபின் சில ஆண்டுகள் கழித்து, அன்றைய ஜேர்மனியில் டிராகுலாவின் கழுவேற்றங்களை வைத்து புனைகதைகளை எழுதத் தொடங்கினார்கள்.
இதனால் உலகெங்கும் டிராகுலா ரத்தக் காட்டேரியாக அறியப்பட்டாலும் டிரான்ஸில்வேனியாவில் அவன் மாபெரும் சுதந்திரப் போராட்ட வீரனாகவும் தேச பக்தனாகவுமே பார்க்கப்படுகிறான்.

No comments:

Post a Comment