தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 24 டிசம்பர், 2014

நாளை கிறிஸ்துமஸ் பண்டிகை: ஏசுநாதர் பிறந்த நாளை கிறிஸ்தவர்கள் கொண்டாடுகிறார்கள்!!


சென்னை,

உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள், நாளை (வியாழக்கிழமை) கிறிஸ்துமஸ் பண்டிகையை மகிழ்ச்சி பெரு நாளாக கொண்டாடுகிறார்கள். இதையொட்டி, கிறிஸ்தவ கோவில்களில் விசேஷ பிரார்த்தனை நடக்கிறது.

மகிழ்ச்சி பெருநாள்

ஏசுநாதர், 2 ஆயிரத்து 14 ஆண்டுகளுக்கு முன்பு பெத்லேகம் நகரில் உள்ள ஒரு மாட்டு தொழுவில் பிறந்தார் என்று கிறிஸ்தவர்களின் புனித நூலான பைபிளில் கூறப்பட்டு உள்ளது. அவர் பிறந்த நாளை உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் டிசம்பர் 25-ந் தேதி மகிழ்ச்சி பெருநாள் என்ற வகையில் கொண்டாடுகிறார்கள். இதையொட்டி டிசம்பர் மாதத்தில் கிறிஸ்தவர்களின் வீடுகள், கோவில்களில் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட நட்சத்திரங்கள் வெளியே தொங்க விடப்பட்டிருக்கும்.

வீடுகள், கிறிஸ்தவ தேவாலயங்கள், பல்வேறு நிறுவனங்களில் கிறிஸ்துமஸ்மரம் வைத்து, அதனை அலங்கரித்து, அதில் குழந்தைகளுக்கான பரிசு பொருட்களை தொங்க விடுவார்கள். இது தவிர ஏசுநாதர் பிறப்பை விளக்கும் வகையில் குடில்களும் அமைக்கப்பட்டிருக்கும்.

குழந்தைகளுக்குபரிசு பொருட்கள்

மேலும் அந்தந்த கோவில்கள் மற்றும் கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில் கிறிஸ்துமஸ் பாடல்கள் இரவில் வீடு, வீடாக வந்து பாடப்படும். அவர்களுடன் வரும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்த ஒருவர் ஆடிப்பாடி குழந்தைகளுக்கு பரிசு பொருட்களை வழங்குவார்.

சென்னையில், இந்த மாதம் முழுவதும் பல இடங்களில் கிறிஸ்துமஸ் பாடல் குழுவினர் வீடு வீடாக வந்தனர். நண்பர்கள் சுவிசேஷ ஜெபக்குழு சார்பில், ஏ.தேவதங்கம், ஜெ.பி.ஜெயதாஸ், மற்றும் ரிச்சர்டு ஆகியோர் தலைமையில், ஏராளமான ஆண்களும், பெண்களும் சென்னையில் பல பகுதிகளில் வீடு, வீடாக வந்து பாடல்கள் பாடி மகிழ்ந்தனர்.

சிறப்பு பிரார்த்தனை

அவர்களுடன் கிறிஸ்துமஸ் தாத்தா வேடம் அணிந்து வந்த ஒருவர் அவர்கள் சென்ற வீடுகளில் எல்லாம் ‘காலண்டர்கள்’, ‘கேக்’ மற்றும் ‘சாக்லேட்டு’களை பெரியோர்களுக்கும், சிறு குழந்தைகளுக்கு பரிசு பொருட்களையும் வழங்கி வந்தார்.

கிறிஸ்துமசையொட்டி, இன்று நள்ளிரவு முதல் பல்வேறு தேவாலயங்களில் சிறப்பு பிரர்த்தனைகள் நடைபெறும். சென்னை அண்ணா மேம்பாலம் அருகே உள்ள கதீட்ரல் தேவாலயத்தில் பாதிரியார் இம்மானுவேல் தேவகடாட்சம் இன்று இரவு 11.30 மணி, நாளை காலை 7.30 மணியில் சிறப்பு பிரார்த்தனைகளை நடத்தி அருளுரை ஆற்றுகிறார்.

‘சைலண்ட் நைட்’, ‘ஹோலி நைட்’

அடையாறில் உள்ள ஏசு அன்பர் கிறிஸ்தவ தேவாலயத்தில், பாதிரியார் ஜெகதீஷ் லெக்ளர் நாளை அதிகாலை 4.30 மணி, காலை 7, 8.30 மணிக்கு கிறிஸ்துமஸ் ஆராதனைகளை நடத்துகிறார். இதே போன்று, சாந்தோம் தேவாலயம், பெசன்ட் நகரில் உள்ள அன்னை வேளாங்கண்ணி தேவாலயம், லஸ் பிரகாச மாதா தேவாலயம் உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடக்கிறது. இதில் கிறிஸ்தவர்கள் திரளாக பங்கேற்கிறார்கள். 
http://www.dailythanthi.com/News/State/2014/12/24034722/Christmas-Spending-up--Big-Day-Expected-Tomorrow.vpf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக