தொலைக்காட்சி!!

Search This Blog

Thursday, December 25, 2014

வவுனியாவில் ஒரே பிரசவத்தில் மூன்று குழந்தைகளை பிரசவித்த தாய்!



வவுனியா அரச பொது மருத்துவமனையில் பெண் ஒருவருக்கு ஒரே சூலில் மூன்று குழந்தைகள் சுகப்பிரசவம் நடைபெற்றிருப்பதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முல்லைத்தீவு மாவட்டம் புதுக்குடியிருப்பு 7 ஆம் வட்டாரம் சிவநகரைச் சேர்ந்த ரமேஸ்குமார் சுமங்களா என்ற 34 வயதுடைய பெண்ணே இவ்வாறு மூன்று பெண் குழந்தைகளைப் பெற்றெடுத்துள்ளார்.
வவுனியா மருத்துவமனையின் பெண் நோயியல் வைத்தியர் சந்தன ஹேரத்தின் பொறுப்பில், கடந்த 23 ஆம் திகதி செவ்வாய்க்கிழமை இப் பிரசவம் நிகழ்ந்துள்ளது.
இப் பிரசவம் குறித்து குறித்த தாயார் கருத்து தெரிவிக்கையில்,
“குழந்தை பாக்கியம் இல்லையே என்று ஏங்கிக் கொண்டிருந்த எங்களுக்கு 3 பெண் குழந்தைகளைக் கடவுள் வழங்கியிருப்பது மகிழ்ச்சியாக இருக்கின்றது.
யாழ்ப்பாணத்தில் ஆசிரிய பயிற்சிக் கலாசாலையில் ஆசிரியராகப் பயிற்சி பெற்று வருகின்றேன். வறுமைப்பட்ட குடும்பத்தைச் சேர்ந்த எனக்குத் திருமணமாகி பத்து வருடங்களாகின்றன.  கணவர் ஒரு விவசாயி.
அண்மையில்தான் எனக்கு ஆசிரியர் தொழில் கிடைத்தது. மாதம் பத்தாயிரம் ரூபா சம்பளமாகக் கிடைக்கின்றது. ஆசிரிய பயிற்சிக் கலாசாலைக்குத் தெரிவாகி 7 மாதங்களாகின்றன.
எங்களுக்கு புத்திர பாக்கியம் இல்லாமல் இருந்தது பெரும் கவலையாக இருந்தது. இதனால் கொழும்பில் உள்ள ஒரு தனியார் வைத்தியசாலையில் பெரும் பணச்செலவு செய்து வைத்தியம் செய்தோம்.
நாங்கள் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் என்ற காரணத்தினால், யுத்தச் சூழலில் சிக்கியிருந்த எங்களுக்கு உளவியல் ஆற்றுப்படுத்தலிலேயே அந்த வைத்தியசாலையில் அதிக கவனம் செலுத்தப்பட்டது.
ஆயினும் எங்களுக்கு புத்திர பாக்கியம் கிட்டவில்லை. பின்னர் நாங்கள் வவுனியா பொது வைத்தியசாலையில் வைத்திய நிபுணர் டாக்டர் சந்தன ஹேரத் அவர்களிடம் சிகிச்சை பெற்று வந்தேன்.
நிறைந்த ஆலோசனைகளும் சிகிச்சையும் அங்கு கிடைத்தது. மூன்று மாதங்களில் நல்ல பலன் கிடைத்தது. இதனையடுத்து இப்போது 3 பெண் குழந்தைகள் பிறந்திருக்கின்றன.
வைத்திய சிகிச்சையின்போதும், பிரசவத்தின்போதும் வைத்திய நிபுணரும், ஏனைய வைத்தியர்கள் மற்றும் தாதியர் பணியாளர்களும் என்னை நன்றாகக் கவனித்தனர். எனக்கு மூன்று குழந்தைகள் கிடைத்திருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது.
என்னைப் போலவே இந்த வைத்தியரிடம் சிகிச்சை பெற்ற முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த எனக்குத் தெரிந்த இன்னும் இருவருக்கும் பிள்ளை பேற்றுப் பலன் கிடைத்திருக்கின்றது.
குழந்தைகள் கிடைத்துள்ள போதிலும் எனது ஆசிரிய பயிற்சியைத் தொடர்ந்து மேற்கொள்வேன். அதற்காக யாழ்ப்பாணத்தில் வாடகைக்கு வீடு எடுத்து பிள்ளைகளுடன் தங்கியிருந்து எனது பயிற்சியைத் தொடர்வதற்குத் தீர்மானித்துள்ளேன்.
ஒரு வருடத்திற்கும் அதிக காலம், யாழ்ப்பாணத்தில் வீடு எடுத்து மூன்று குழந்தைகளையும் பராமரித்து வளர்ப்பதற்குப் போதிய பொருளாதார வசதி எனக்கு இல்லை என்பதுடன், அது சிரமமான காரியமாக இருந்தாலும் அதனைத் திறம்பட செய்ய வேண்டும் என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.
எனது முயற்சிக்கு எனது கணவரினதும், குடும்ப உறவினரதும் சரீர உதவியும், சமூக சேவைகளில் ஈடுபட்டிருப்பவர்களின் பொருளாதார உதவியும் எனக்கு உறுதுணையாக இருக்கும் என்று திடமாக நம்புகிறேன்.
இந்தப் பிரசவம் குறித்து கருத்து வெளியிட்ட பெண் நோயியல் வைத்திய நிபுணர் சந்தன ஹேரத்:
பிள்ளைப்பாக்கியம் என்பது இறைவனின் கொடையாகும். பிள்ளைப் பாக்கியம் தாமதமாக உள்ளவர்கள் அல்லது கிடைக்காதிருப்பவர்கள், தங்கள் மீதும், தங்களுக்கு வழங்கப்படுகின்ற சிகிச்சை மீதும் நம்பிக்கை வைத்திருப்பது முக்கியமாகும். அது மட்டுல்லாமல், தெய்வத்தின் மீதும், அவர்கள் நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும் என தெரிவித்தார்.
வவுனியா வைத்தியசாலையில் முல்லைத்தீவு மாவட்டத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் மூன்று பெண் குழந்தைகளை சுகமாக ஈன்றெடுத்திருப்பது எமக்கு மிகுந்த மகிழ்ச்சியளிக்கின்றது என தெரிவித்த வவுனியா பொது மருத்துவ மனையின் பணிப்பாளர் டாக்டர் கே.அகிலேந்திரன், இந்த வைத்தியசாலையில் பல்வேறு பிரிவுகளை ஆரம்பித்து பொது மக்களின் பலதரப்பட்ட வைத்திய தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு நாங்கள் எங்களால் முடிந்த அளவில் முயற்சிகளை மேற்கொண்டு செயற்பட்டு வருகின்றோம்.
இங்குள்ள வைத்திய சேவைகளையும், அவற்றுக்கான வாய்ப்புக்களையும் பொதுமக்கள் பயன்படுத்தி நன்மையடைய வேண்டும் என்பதே எமது விருப்பமாகும் என கூறினார்.

No comments:

Post a Comment