தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 28 ஜூலை, 2014

துன்பங்கள் போக்கும் துர்க்கை!!!


திருநெல்வேலி, நெல்லையப்பரும் காந்திமதியம்மனும் பக்தர்களுக்கு அருளை அள்ளி வழங்கும் அந்த ஊரில் இன்னொரு அம்மையும் முக்கியமான இடத்தை வகிக்கிறாள். அந்த அம்மைக்கும் நெல்லையப்பர் ஆலயத்துக்கும் நெருங்கிய தொடர்பும் உள்ளது.
நெல்லை நகரம், நெல்லையப்பர் கோயிலுக்கு வடமேற்கில் உள்ளது புட்டார்த்தி அம்மன் கோயில். இந்த இடத்தை பிட்டாபுரம் என்று அழைக்கிறார்கள். அம்மனுக்கு அதனால் பிட்டாபுரத்து நாயகி, பிட்டாபுரத்தம்மன் என்று பெயர் ஏற்பட்டது.
இந்த அம்மைக்கு பிட்டாபுரத்தி, வடவாயிற்செல்வி, நெல்லைமாகாளி, செண்பகச்செல்வி என்றெல்லாம் பெயர்கள் வழங்கப்பட்டாலும், பேச்சு வழக்கில் புட்டார்த்தி அம்மன் என்றே அழைக்கிறார்கள். அம்மைக்கு பிட்டு நைவேத்தியம் மிகவும் புகழ்பெற்றது.
துர்கை, ஆர்த்தி என்ற சொற்களுக்கு துன்பம், கஷ்டம் போன்ற பொருள்கள் உண்டு. நம் துன்பம், கஷ்டங்களை நீக்குவதால் அம்மைக்கு துர்கை என்றும், ஆர்த்தி என்றும் பெயர் ஏற்பட்டது.
சிவபெருமானுக்கு பிரணதார்த்திஹரன் என்று ஒரு பெயர் உண்டு. இந்தப் பிராணனுக்கு ஏற்படும் துன்பங்களை நீக்குபவன் என்னும் பொருளில் அந்தப் பெயர் வழங்கப்படும்.
நாம் புட்டு அல்லது பிட்டு எனும் இனிப்பினை அம்மைக்கு நைவேத்தியமாக அளிக்க, நம் கஷ்டங்களை, சொல்லொணாத் துன்பங்களை, நம்மை அண்டும் துயரங்களை அம்மை அடியோடு நீக்கிவைப்பாள் என்னும் பொருளில் புட்டார்த்தி என்னும் பெயர் வழங்கப்படுகிறதாம்.
திருவிழாக்கள்
இந்தக் கோயில் நெல்லையப்பர் கோயிலுடன் தொடர்பு கொண்டது. இக்கோயில் திருவிழாக்கள் முடிந்த பிறகே நெல்லையப்பர் கோயில் திருவிழா துவங்குகிறது.
வைகாசி பத்து நாள் திருவிழா நிறைவில் பிட்டாபுரத்து அம்மனுக்கு தேர்த் திருவிழா முடிந்த பிறகு, ஆனி மாதத்தில் நெல்லையப்பருக்கு திருவிழா கொண்டாடப்படுகிறது.
நெல்லையப்பரின் தேர் பிட்டாரத்தி அம்மன் ஆலய வீதிக்கு அருகே வந்தவுடன், சற்று நேரம் தயங்கித் தயங்கி நிற்குமாம். பின்னரே தேர் புறப்பட்டுச் செல்லும் என்பது இங்குள்ளவர்கள் பிட்டாரத்தி அம்மனுக்குச் சொல்லும் கதையுடன் தொடர்புகொண்ட நிகழ்வாக நடக்கிறது.
பிரார்த்தனை.
இங்கே சுகப் பிரசவம் ஆக, தாய்மார்கள் தொட்டில் கட்டி நேர்ந்து கொள்கிறார்கள். மேலும், குழந்தைகளின் பயம் உள்ளிட்ட சிலவகை நோய் தீர தொட்டில் கட்டி நேர்ந்து கொள்வதும் உண்டு. மகப்பேறு வேண்டியும், திருமணத் தடை நீங்கவும், மருத்துவத்தால் குணம்காணா நோய்கள் தீரவும் இங்கே புட்டார்த்தியம்மனை நம்பிக்கையுடன் வணங்கி சந்நிதித் திருச்சுற்று வருகிறார்கள் பெண்கள்.
பொதுவாக, பிறந்தவுடனே குழந்தைகளை ஆலயத்துக்கு அழைத்துவரக்கூடாது என்பர். ஆனால் இங்கே பிறந்த குழந்தைகளை கூட ஆலயத்தினுள் எடுத்து வருகின்றனர்.
இதனால் எந்தத் தீட்டும் கிடையாது என்பது இங்குள்ள நம்பிக்கை. பிறந்த குழந்தைகளுக்கும் திருநீறு பூசி, அபிஷேக நீர்தெளித்தல் நடக்கிறது. ஆலயத்தில் வைகாசி மாத பத்து நாள் திருவிழா வெகு விமரிசையாக நடக்கிறது.
ஆடி, தை மாத கடைசி செவ்வாய் அன்று அம்மனுக்கு சிறப்பு வழிபாடுகள் உண்டு. இங்கே கார்த்திகை தீபம், தை மாத பத்ர தீபம், கஞ்சிப் படையல் உள்ளிட்டவை சிறப்பாக நடைபெறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக