தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, June 25, 2014

காஞ்சிபுரம் வரலாறு ஒரு ஆய்வு!!!

தமிழ்நாட்டிலுள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க, ஒரு பழம் பெரும்
நகரம் காஞ்சிபுரம் ஆகும். கச்சிப்பேடு, கச்சி காஞ்சி என்ற
பெயர்களும் இந்நகருக்கு உள்ளன. வேகவதி ஆற்றின் கரையில்
இந்நகரம் அமைந்துள்ளது.
தல வரலாற்றுச் சுருக்கம்
இயேசு கிறிஸ்து பிறப்பதற்குப் பல நூற்றாண்டுகளுக்கு
முன்பே காஞ்சிபுரம் ஒரு சிறந்த நகரமாக விளங்கியிருக்கிறது.
கி.மு. 2ஆம் நூற்றாண்டில் பதஞ்சலி என்பவரால் இயற்றப்பட்ட
மகா பாஸ்யா என்ற நூல், சங்க இலக்கிய நூலான
பெரும்பாணாற்றுப்படை, ஐம்பெருங்காப்பியங்களுள்
ஒன்றான மணிமேகலை ஆகியவை காஞ்சிபுரம் நகரைக்
குறிப்பிடுகின்றன. குப்தர் காலத்தில் வாழ்ந்த வராகமிகிரர்,
சீன யாத்திரீகர் யுவான் சுவாங் போன்றோர் குறிப்பிடும்
‘திராவிடத்தின்’ தலைநகராக காஞ்சிபுரம் விளங்கிற்று.
‘நகரங்களிலேயே மிகச் சிறந்தது’ என்று காளிதாசர்
காஞ்சிபுரத்தைக் குறிப்பிட்டுள்ளார்.
சங்க காலத்தில் கரிகாற்சோழனின் ஆட்சிப் பகுதியாகக்
காஞ்சி இருந்தது. கரிகாலனின் மகன் தொண்டைமான்
இளந்திரையன் காஞ்சிபுரத்தைத் தலைநகராகக்கொண்டு
தொண்டை மண்டலத்தை (தற்காலச் சென்னை, செங்கற்பட்டு
மாவட்டங்கள், வட, தென் ஆர்க்காடு மாவட்டங்களின்
பகுதிகள் அடங்கியது) கி.பி. 2ஆம் நூற்றாண்டில் ஆட்சி
புரிந்தார் எனப்படுகிறது.
காஞ்சியில் பல்லவர் ஆட்சி
தென்னிந்தியாவில் ஆட்சி புரிந்த சிறப்புமிக்க அரச
வம்சங்களில் பல்லவ வம்சம் ஒன்றாகும். கி.பி. சுமார் 275இல்
இவர்கள் காஞ்சிபுரத்தைத் தங்கள் தலைநகராகக்கொண்டு
தொண்டை மண்டலத்தில் ஆதிக்கம் செலுத்தினர். கி.பி. சுமார்
875வரை 6 நூற்றாண்டுகள் காஞ்சிபுரம் பல்லவர்களின்
தலைநகராக விளங்கியது. சிம்மவிஷ்ணு என்ற பல்லவ மன்னன்
(கி.பி. 575 - 600) களப்பிரர்களைத் தோற்கடித்துக் காவிரி நதி
வரை தமது ஆட்சியை நிறுவினார். சிம்மவிஷ்ணுவைத் தொடர்ந்து
ஆட்சிக்கு வந்த முதலாம் மகேந்திரவர்மன், முதலாம்
நரசிம்மவர்மன் ஆகியோரின் ஆட்சி பெருமைமிக்கதாகும்.
தனது தந்தையையும் (மகேந்திரவர்மன்) வட இந்தியப் பேரரசர்
(கி.பி. 607-647) ஹர்சரையும் தோற்கடித்த மேலைச்சாளுக்கிய
மன்னனான இரண்டாம் புலிகேசியைத் தோற்கடித்து ‘வாதாபி
கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரை முதலாம் நரசிம்மவர்மன்
பெற்றார்.
சாளுக்கியர்களுடன் நடந்த போரில் காஞ்சி பெரிதும்
அழிவுற்றது. இரண்டாம் நரசிம்மன் என்ற இராஜசிம்மன்
ஆட்சிக் காலத்தில் காஞ்சி புதிதாக நிர்மாணிக்கப்பட்டது.
முதலாம் பரமேஸ்வரன் என்ற பல்லவ மன்னன் காலத்தில்
சாளுக்கிய மன்னர் விக்கிரமாதித்தன் பல்லவர் தலைநகரான
காஞ்சியைப் பிடித்தார் (கி.பி. 740). ஆனால், பரமேஸ்வரன்
தமது தலைநகரை விரைவில் மீட்டினார்.
பல்லவ மன்னர்கள் பலத்தக் கோட்டைகள் கட்டித்
தலைநகரான காஞ்சியைப் பாதுகாத்தனர். சமண சமயத்தைத்
தழுவி, இச்சமயத்திற்கு ஆதரவு கொடுத்தனர். பல அழகிய
ஆலயங்கள் கட்டி இந்து சமயத்திற்கும் கலைக்கும் பெருமை
தேடித் தந்தனர். முதலாம் நரசிம்மவர்மன் என்ற பல்லவ
மன்னன் ஆட்சிக் காலத்தில் யுவான் சுவாங் என்ற சீன
யாத்ரீகர் இந்தியாவின் பல இடங்களுக்கு விஜயம் செய்தபொழுது
(629-644) காஞ்சிபுரத்திற்கும் வந்தார். இவர் தமது குறிப்புகளில்
காஞ்சிபுரத்தின் பெருமைபற்றிக் கூறியிருக்கிறார். காஞ்சிபுரம்
சுமார் 10 கி.மீ சுற்றளவினைக்கொண்ட சிறந்த நகரமாக இருந்தது
என்றும், மக்கள் வீரத்தில் சிறந்தவர்கள் என்றும், நம்பிக்கைக்கு
உரியவர்கள் என்றும், கல்வி கற்பதில் ஆர்வமுள்ளவர்கள் என்றும்
புகழ்ந்து கூறியிருக்கிறார். காசிக்கு அடுத்துக் காஞ்சி ஒரு சிறந்த
கல்வி ஸ்தலமாக விளங்கிற்று. காஞ்சி ‘கடிகா’வில் பயின்ற
தர்மபாலர் நாளந்தாப் பல்கலைக் கழகத்தின்
துணைவேந்தராகப் பணியாற்றினார்.
Like
ஜெகன் கணேசன் 

No comments:

Post a Comment