தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

செவ்வாய், 27 மே, 2014

இரத்தக் கறையோடு எழுதுகிறேன்...


நீண்ட காலமாக குழந்தையில்லாத ஒரு தம்பதி, என் நண்பர் வேலை பார்க்கும் மருத்துவமனைக்கு வந்தார்கள்.அவர்களுக்கு பலவிதமான பரிசோதனைகள் செய்யபட்டு, பரிசோதனை முடிவுகளுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. (இப்போது நோயாளிக்கு சிகிச்சை அளிப்பதில்லை; பரிசோதனை முடிவுகளுக்குத்தான் மருத்துவர்கள் சிகிச்சை அளிக்கிறார்கள்).
சிகிச்சை எடுத்துக்கொண்ட பெண்ணிற்கு உடலில் சில மாறுதல்கள் தெரிந்தன. கர்ப்பபை தொடர்பான சில தொந்தரவுகள் ஏற்பட்டன. ஸ்கேன் எடுக்குமாறு பரிந்துரைத்தார் மருத்துவர்.

கர்ப்பப்பையில் ஒரு கட்டி வேகமாக வளருவதாகவும், அதன் வேகம் புற்றுநோய் செல்களுக்கு இணையாக இருப்பதாகவும் ஸ்கேன் அறிக்கையின் வழியாக மருத்துவர் முடிவு செய்தார். அந்த கட்டியின் வேகமான வளர்ச்சி, அடுத்த கட்ட பரிசோதனைகளுக்கு செல்வதற்குக் கூட நேரம் தரவில்லை என்றும், பெண்ணை காப்பாற்றுவதற்காக கர்பப்பையை நீக்கி விடலாம் என்று பரிந்துரைத்தார் மருத்துவர். கர்ப்பை நீக்கப்பட்ட பிறகு தனக்கு குழந்தைகள் பிறப்பதற்கு வாய்ப்பே இல்லை என்ற அதிர்ச்சியை தன் மனைவிக்காக ஏற்றுக் கொண்ட கணவர் அறுவை சிகிச்சைக்கு சம்மதித்தார். அறுவை சிகிச்சை உதவியாளராகப் பணியாற்றிக் கொண்டிருந்த என் நண்பரும்,நானும் ஸ்கேன் அறிக்கைகளையும்,விசித்திரமான நோயாளிகள் பற்றியும் விவாத்திக் கொள்வோம்.

கர்ப்பபை அகற்றும் அறுவை சிகிச்சை அந்த பெண்ணிற்கு முடிந்தது. அவர் உயிர் பிழைத்து விட்டார் என்று அறிவிக்கப்பட்டது. அறுவை சிகிச்சையில் அறுத்தெறியப்பட்ட உள்ளுறுப்புகளைப் பார்ப்பதற்காக வழக்கம் போல நாங்கள் அறைக்குள் செல்கிறோம். அறுத்து குப்பையில் வீசப்பட்ட கர்ப்பையின் ஒரு பகுதியில் ஒட்டி கொண்டிருந்தது கட்டி அல்ல; அறுபது நாட்கள் வளர்ந்த கரு. அந்த சிசுவின் விரல்கள் அரிசி ஓவியம் போல நேர்த்தியாக இருந்தது. அறுவை சிகிச்சை உதவியாளர்கள் மருத்துவரிடம் தகவல் சொன்னார்கள். ஒரு நிமிடம். ஒரே ஒரு நிமிடம் அதிர்ந்தார். அவருக்குள் இருந்த மனித தன்மை வெளிப்பட்டது. அடுத்த நிமிடம் தொழில் முறை மருத்துவரானார். அதை பற்றி யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தினார். மருத்துவமனை பணியாளர்கள் அவர்கள் தொழில் தர்மத்தைக் கட்டி காத்தார்கள்... சம்பளத்தோடு.

கருவிலே வேரறுக்கப்பட்ட அந்தக் குழந்தைக்கு வாழும் வாய்ப்பை மறுத்தது யார்? ஸ்கேன் அறிக்கையா? அதை உறுதி செய்து கொள்ளாத மருத்துவரா? வணிகமயமான மருத்துவமா?

அந்த சிசு என்னோடு இரண்டு வருடங்கள் இருந்தது. அதை ஒரு கண்ணாடி குடுவையில் என்னோடு வைத்திருந்தேன். முழு வளர்ச்சி அடையாத அந்தச் சிசுவின் கைகள் ஆங்கில மருத்துவத்தை விட்டு என் கழுத்தை பிடித்து வெளியே தள்ளியது.

கருவிகளின் கற்பனையில், காகிதங்களின் முடிவுகளில் இப்படி வாழ்கையை இழந்தவர் பலர். கருவிகள் நமக்கு முதலாளிகள் அல்ல. கருவிகள் நமக்கு உதவி செய்வதற்குத்தான். முடிவுகளை எப்போதும் அவை அறிவிப்பதில்லை. அறிவின் வழியாக முடிவுகளை அடைவதுதான் அறிவியல்....

(மருத்துவ ஆய்வுக்கூடங்களில் நடப்பது என்ன?- அக்கு ஹீலர் அ.உமர் பாரூக்- நூலில் இருந்து)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக