தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வெள்ளி, 21 மார்ச், 2014

உலக வன நாள் இன்று ( World Forest Day ) 21-03-2014 (வனத்தைக் காப்போம் வளம் பெறுவோம் )


உலக வன நாள் இன்று ( World Forest Day ) 21-03-2014

(வனத்தைக் காப்போம் வளம் பெறுவோம் )

பூமிப்பந்தின் வெப்பம் அதிகரித்துக் கொண்டேச் செல்கிறது. சுற்றுச்சூழலைக் காப்பாற்றுவதற்கு ஏதாவது முயற்சி செய்யுங்கள், இல்லைஎன்றால் எதிர்காலம் எதிர்கொள்ளும் பிரச்சனைகள் அநேகம். இப்போதாவது விழித்துகொள்ளுங்கள்" என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் எச்சரித்து கொண்டே இருக்கிறார்கள். ஆனால் அரசும் மக்களும் கவலைப்படுவது போல் தெரியவில்லை. அங்கொன்றும் இங்கொன்றுமாக மரம் நடுதல் நடைபெற்றாலும் இன்னும் முழுவீச்சில் இல்லை. விழிப்புணர்வு ஊட்டுவதிலேயே காலம் சென்றுக் கொண்டிருக்கிறது...

மரம் வெட்டுபவர்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்க படவேண்டும், . காடுகளில் மரங்கள் வெட்டுவது நடந்துகொண்டுதான் இருக்கிறது...வனப்பகுதிகள் காணாமல் போய்க் கொண்டே இருக்கின்றன. மரங்கள் குறைந்ததால் மழை குறைந்து தண்ணீர் கிடைக்காமல் வன விலங்குகள் நாட்டுக்குள் வரத் தொடங்கிவிட்டன...!? வனவிலங்குகள் பயிர்களை சேதபடுத்துகின்றன என்று சொல்ல தெரிந்த நமக்கு, அந்த விலங்குகளின் நிலையில் இருந்து யோசிக்க தெரியவில்லை .

சாலைகள் போடுவதற்கென்று வெட்டப்பட்ட மரங்கள் பல லட்சங்களை தாண்டும். சாலைகள் போட மரத்தை வெட்டியவர்கள் மீண்டும் அங்கே மரத்தை நட்டு பராமரிக்கவேண்டிய பொறுப்பையும் எடுத்துகொண்டால் நன்றாக இருந்திருக்கும். இதை முறைபடுத்தி இருந்தால் இன்று பல லட்சம் மரங்கள் உண்டாயிருக்கும். முக்கிய நாட்களில் மரம் நடுவதை ஒரு விழாவாக கொண்டாடுவதுடன் தங்களது சேவை முடிந்துவிட்டது என இருந்துவிடாமல் தொடர்ந்து அதனை பராமரித்து வளர்க்கும் கடமையும் தங்களுக்கு உண்டு என்பதை மறக்கலாகாது.

மரம் வெட்டாதே என்று சட்டங்கள், கட்டுப்பாடுகள் போட்டாலும் வெட்டுபவர்கள் வெட்டி கொண்டே தான் இருக்கிறார்கள். அதனையும் ஒரு உயிராக பார்க்கும் மனித நேயம் மிக்க மனிதர்கள் குறைந்துவிட்டார்கள்.

உலக வெப்பமயமாதல் குறித்து உலகமே கவலை கொள்ள ஆரம்பித்துவிட்ட இன்றைய நாளில் ஓடி ஓடி மரங்களை வளர்கிறோம், வளர்க்க சொல்லி விழிப்புணர்வு கொடுத்து கொண்டிருக்கிறோம். ஆனால் ஒரு மரம் நன்கு வளர குறைந்தது மூன்று ஆண்டுகளாவது ஆகும், இதை சிறிதும் சிந்திக்காமல் சில நிமிடங்களில் வெட்டி எறிந்து விடுகிறார்கள்.

மரம் வெட்டுவதை பெரிய பாவ செயலாக நம் முன்னோர்கள் சொல்வதுடன் மட்டும் இல்லாமல் நடைமுறையிலும் நடந்து கொண்டிருந்திருக்கிறார்கள் என்பதை பற்றி படித்த போது மிக பெரிய ஆச்சர்யமாக இருந்தது. அத்தகைய சில ஆச்சர்யங்களை உங்களிடம் பகிர்ந்து கொள்ளவே இந்த பதிவு.சங்க பாடல்கள் பல இருக்கின்றன அவற்றில் சில மட்டும் இங்கே...

நறுந்தண் தகரம் வகுளம் இவற்றைவெறும்புதல் போல் வேண்டாது " (திணைமாலை நூற்றைம்பது 24 )

இந்த பாடலில் "சுயநலத்திற்காக மரங்களை வெட்டுபவர்கள் எத்தகைய கொடுமை செய்யவும் தயங்க மாட்டார்கள். அத்தகையோரின் வீட்டில் பிறக்கும் பிள்ளைகளும் பிறர் படும் துன்பத்திற்கு வருந்தகூடியவர்களாக இருக்க மாட்டார்கள். எனவே அத்தகையோரின் வீட்டு பெண்ணை விரும்புவதும், மணம் முடிப்பதும் சரி இல்லை, இது குறித்து கொஞ்சம் யோசி " எனத் தோழன் ஒருவன் தலைவனுக்கு அறிவுரை கூறுகிறான்.

மரங்களை வெட்டுவதை பற்றி இப்படி சொல்வதை கூட விடுங்க,மரங்களின் நுனி பகுதியை கூட கிள்ளகூடாது. அப்படி கிள்ளுவது அறமற்ற செயல் என்று சொல்லி இருப்பதை என்னவென்று சொல்ல...

நெறிதிரிவார் இன்மையால் இல்லை முறிதிரித்து
கண்டல் அம் மண் தில்லை " (திணைமாலை நூற்றைம்பது 61)

" எம்நாட்டில் அறநெறி தவறி நடப்பவர்கள் எவரும் இல்லையாதலால் கண்டல் சோலைகளில் உள்ள தாழை மரங்களின் நுனிப்பகுதிகள் முறிந்த காட்சியைக் கூட எங்கும் காண முடியாது " தன் நாட்டின் சிறப்பை பற்றி தோழி தலைவனிடம் கூறுகிறாள்.

தாவரங்கள், நீர்நிலைகளின் மதிப்பை உணர்ந்து அதற்கேற்றபடி வாழ்ந்து சுற்றுச் சூழலின் முக்கியத்துவத்தை உலகத்திற்கு உணர்த்தி உள்ளனர் பண்டைய தமிழர்கள் !!

அவர்களின் வழி வந்தவர்கள் நாம் , இன்றைய பாஸ்ட் புட் உலகில் நாம் அவற்றையெல்லாம் மறந்து விட்டோம் , உங்கள் அனைவரையும் களத்தில் இறங்கி மரங்களை வளர்க்க சொல்லவில்லை,மரத்தின் அவசியத்தை உணருங்கள் காலம் தன் பணியை செய்யும் .

https://www.youtube.com/watch?v=H364St5v0Zs

https://www.youtube.com/watch?v=Bbjj2afkMpU

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக