தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 மார்ச், 2014

பால லீலை!!


11/March/2014
தினந்தோறும் சங்கரரின் தாய் ஆர்யாம்பாள் குளிப்பதற்கு வெகுதொலைவில் உள்ள பூர்ணா நதி சென்று நீராட வேண்டியிருந்தது. இதனால் மிகவும் சிரமப்படுவதாக எண்ணிய சங்கரர் நதி தேவதையைப் பிரார்த்தித்தார். உடனே அந்த நதி பராசக்தியின் உத்தரவின் பேரில் தன் திசையை மாற்றிக் கொண்டு சங்கரரின் வீட்டிற்குப் பக்கத்தில் ஓட ஆரம்பித்தது. (இந்த நதி தான் தற்போது காலடியருகில் ஓடும் பூர்ணா நதி). இதைக் கண்ட மக்கள் அனைவரும் வியப்புற்று தங்களுக்கு ஒரு மகான் கிடைத்துவிட்டதாக எண்ணி ஆனந்தம் அடைந்தனர். சங்கரரின் பெருமையை கேள்விப்பட்ட கேரள தேசத்து அரசன் ஒரு சமயம் யானை முதலிய காணிக்கைகளுடன் தன் மந்திரியை சங்கரரிடம் அனுப்பினார். இது கண்ட சங்கரர் பிரம்மச்சாரியான தனக்கு இது ஒன்றும் தேவையில்லை என்று கூறி காணிக்கைகளைத் திருப்பி அனுப்பிவிட்டார். இதைக் கேட்ட அரசன் தானே சங்கரரின் இருப்பிடத்திற்கு வந்து அவரை வணங்கி சந்தோஷம் அடைந்தான். பதினாராயிரம் பொன்களையும், தான் இயற்றிய மூன்று நாடகங்களையும் சங்கரருக்கு சமர்ப்பித்தார். நூல்களின் பெருமையைப் பாராட்டிய சங்கரர் அரசனைப் பார்த்து இந்த பொன் எனக்கு அவசியமில்லை. உன் ராஜ்யத்தில் உள்ளவர்க்கே கொடுப்பாய் என்று சொன்னார். தனக்கு நற்குணங்கள் நிறைந்த புதல்வன் பிறக்க வேண்டும் என்று அரசன் வரம் கேட்க, புத்திரகாமேஷ்டி யாகம் செய்து புத்திரனை பெறுவாய் என்று சங்கரர் அனுக்ரஹித்தார். ஏழுவயதுக்குள்ளாகவே இவ்வளவு ஞானமும், வைராக்கியமும், தவமும் பெற்ற சங்கரர், உலகத்தை ரக்ஷிக்க அவதரித்த பரமேஸ்வரரின் அவதாரம் தான் என்பதை நாம் அறியலாம்.

துறவறம்: ஒருநாள் உபமன்யு, ததீசி, கௌதமர், அகஸ்தியர் முதலிய மாமுனிவர்கள் சங்கரரின் இல்லத்திற்கு வந்தனர். அவர்களை தகுந்த மரியாதையுடன் உபசரித்த ஆரியாம்பாள், எனது குழந்தை மிகச்சிறுவயதிலேயே மிகப்பெரிய வித்வானாகவும் செயற்கரிய செய்கை உடையவனாகவும் திகழக் காரணம் என்ன என்று அம்முனிவர்களிடம் கேட்டாள். அகத்தியர் சிவபெருமானே இந்த திருக்குழந்தையாக அவதாரம் செய்திருப்பதாகவும், பதினாறு வயதே இவன் ஆயுள். ஆனால் சில காரணங்களுக்காக வியாசரின் அருளால் மீண்டும் 16 ஆண்டு கிடைக்கும் என்று கூறி மறைந்தனர். இதைக்கேட்ட ஆர்யாம்பாள் மிக்க வருத்தமுற்றாள். சிறுவயதிலிருந்தே சங்கரருக்கு, உலகைத் துறந்து சன்னியாசி ஆகவேண்டும் என்ற ஆசை இருந்தது. இதற்குத் தம் அன்னையின் அனுமதியைக் கேட்டார். ஆனால் அதற்கு ஆர்யாம்பாள் அனுமதி தர மறுத்துவிட்டாள்.

ஒருநாள் குளிப்பதற்காக தாயுடன், சங்கரர் பூர்ணா நதிக்குச் சென்றார். அப்பொழுது ஒரு முதலை சங்கரரின் காலைப் பற்றிக் கொண்டது. சங்கரர் உரத்த குரலில், அம்மா! முதலை என்னை இழுத்துச் சென்று கொண்டிருக்கிறது. சன்னியாசி ஆக எனக்கு அனுமதி கொடு. அப்பொழுது தான் முதலை என் காலைவிடும் என்று சொன்னார். செய்வதறியாது தவித்த ஆர்யாம்பாள் சங்கரர் சன்னியாசியாகலாம் என்று அனுமதி கொடுத்தாள். உடனே சங்கரர் அதற்குரிய மந்திரங்களை சொல்லி துறவறம் மேற்கொண்டார். இதனால் முதலை சங்கரரின் காலை விட்டு விட்டது. பிரம்மாவின் சாபத்திற்கு உட்பட்ட ஒரு கந்தர்வன் தான் அந்த முதலையாக மாறியிருந்தான். சங்கரரின் கால்பட்டதும் சாபவிமோசனம் பெற்ற கந்தர்வன் சங்கரரை வணங்கி வாழ்த்தி விட்டு தன் இருப்பிடம் சென்றான். கரைக்கு வந்த சங்கரர் வீட்டிற்கு வராமல், துறவியாய் உலக சஞ்சாரம் செய்ய வேண்டும் என்றும் உறவினர்கள் உன்னை கவனித்துக் கொள்வார்கள் என்றும் தாயிடம் கூறினான். அதற்கு தாய், என் கடைசிக்காலத்தில் நீயே வந்து எனக்கு இறுதிக்கடன்களை செய்ய வேண்டும் என்று கேட்க, அதற்கு சங்கரர் ஒப்புக் கொண்டு சன்னியாசம் புறப்பட்டார். அதற்கு முன் தாயார் வழிபாடு செய்வதற்காக பூர்ணாநதியின் கரையில், தன் கைகளால் ஒரு கிருஷ்ணர் சிலையை பிரதிஷ்டை செய்தார். இதுவே தற்போது காலடியில் உள்ள திருக்காலடியப்பன் கோயிலாகும். இந்த சிலை குருவாயூர் கிருஷ்ணர் சிலையைப் போலவே "அஞ்சனா என்ற உலேகாத்தால் ஆனது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக