தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 12 பிப்ரவரி, 2014

"அம்மாடா...!".


நண்பர் ஒருவர் எழுதிய அருமையான கதை!!”சொல்றேன்னு தப்பா நெனச்சுக்காதீங்க. உங்க அம்மா என்ன எப்ப மனுஷியா மதிச்சிருக்காங்க. கல்யாணம் ஆன நாள்ளேந்து நான் அனுபவிக்காத கஷ்டம் இல்ல. ஒரு நல்ல குடும்பத்தில மருமகளாகப் போறேன்னு சந்தோஷத்தில் உங்க வீட்டு வாசப்படிய மிதிச்சேன். ஆனா நடந்த்து என்ன? என்னிக்கு காலடி எடுத்து வச்சேனோ அன்னிலேந்து என் வாழ்க்கை சூனியமாப் போச்சு. நல்ல வேளை உங்க கண் பார்வையிலயே எல்லாம் நடந்ததாலே என் மேல எரக்கப்பட்டு தனியாக் கொண்டு வந்து வச்சிங்க. இப்ப நமக்கென்ன கொறச்சல். உங்கள நான் நல்லவிதமாத் தானே கவனிச்சிக்கிறேன். நானும் எல்லாத்தையும் மறந்துட்டு ரெண்டு வருஷமா உங்க கூட சந்தோஷமா இருக்கேன். இப்ப எதுக்கு பழச கிளறுறீங்க. இப்படியே விட்டுடுங்க. இனி அதப்பத்தி பேச வேணாம்”

“அதெல்லாம் பழைய கதை. இன்னுமா நெனச்சிட்டிருக்க. இப்ப அம்மா எந்த நெலயில இருக்காங்க பாரு”

”ஆமா உடம்பு சரியில்ல. வயசாயிடுச்சு. எல்லாம் விழுந்துருச்சு. உலகத்துல நடக்குறது தான். எனக்கும் அப்படித்தான் ஆவும். உங்களுக்கும் அப்படித்தான் இதுல என்ன புதுமை. ஆடுனதுக்கெல்லாம் அனுபவிச்சு தான் ஆகணும்”

”என்ன அப்படி ஆடிட்டாங்க. போனாப் போறதுன்னு நானும் பொறுத்துப் பொறுத்துப் போறேன். வாய் ரொம்ப நீளுது. நான் சொல்லிட்டிருக்கிறது என் அம்மாவைப்பத்தி. எங்களை கரை சேர்க்க ஒத்தையா நின்னு எவ்வளவு போராடிருக்காங்கறது எங்களுக்குத் தான் தெரியும். இன்னிக்கு தன் நிலையில அவங்க இல்லை. கடைசி காலத்திலயாவது நான் அவங்களுக்கு செய்ய வேண்டிய கடமைய ஒழுங்கா செய்யணும்னு நினைக்கிறேன். உன்கிட்ட ரோசனை கேக்குறதுக்காக நான் சொல்லலை. நான் அவங்களை இங்க கூட்டிட்டு வரப்போறேன். நம்மளொட வச்சிக்கப்போறேன். இவ்வளவு தான் என்னால சொல்லமுடியும்”

”வச்சிட்டா. கொண்டு வந்து வச்சிட்டா. சோறு வேணா போடலாம். பீ மூத்தரம் அள்ளுறது யாரு? அப்பவே எனன வாட்டி வதைக்கும். இப்ப வேணும்னே நடு ஹால்ல பேஞ்சு வுடும். நான் வௌக்கமாறும் கையுமா ஆயா வேலை பார்க்கணுமா? அதுக்குத்தான் என் ஆயி அப்பன் என்ன பெத்துப் போட்டாங்களா?”

சுமதியின் சப்தம் ஜாஸ்தியாகிக் கொண்டிருந்தது. அவள் ஒரு ஜிங்கு சிக்கா. கல்யாணம் பண்ணி பத்து வருஷம். ஒரு பெண். ஒரு ஆண். சந்தோஷமான வாழ்க்கை தான் தொடங்கியது.

ஒண்ணும் தெரியாத வீட்டிலிருந்து நேரடியாக வந்தாள். அம்மா தான் சமையல் கற்றுக் கொடுத்தாள். நிர்வாகம் கற்றுக் கொடுத்தாள். தன் தொடர்புகளை அறிமுகப்படுத்தி வைத்தாள். சந்தோஷமாக இருந்தபோதே ஒரு நாள்

”அடுப்புல பால் வெச்சிட்டு பக்கத்தில தான் நின்னுட்டுருந்தேன். பீரொ கதவு தொறந்திருந்துச்சேன்னு போய் சாத்திட்டு வரதுக்குள்ள பாலு பொங்கி ஸடவ் மேல ஊத்திருச்சி. இதுக்குப்போயி மாமி மூஞ்சக்காட்டுது. எப்படி வளத்துருக்கா பாருன்னு என் அம்மாவை வையுது”
அழுதாள்.

அம்மா மத்த மாமியார் மாதிரி எல்லாம் இல்லை. இளகிய மனசு. நல்ல மருமகள் வேண்டும் என்று வெறிபிடித்து அலைந்து – நெய் விளக்கு ஏத்தி – இப்படித்தான் சுமதியும் அண்ணியும் கிடைத்தார்கள். சின்ன மிஸ் அன்டர்ஸ்டாண்டிங் போகப் போக சரியாகும்..

”ச்சீ லுசு. சின்னப்பிள்ளையா நீ. போனாப்போவுது விடு. நீ அழக்கூடாது” காதல் செய்தேன் ” நீ அழுதினா என்னால தாங்க முடியாது செல்லம்”

தப்பாக போவது தெரியாமல் தப்பாக போயிற்று. படுத்திருந்த சுமதி உட்கார்ந்தாள். எழுந்தாள். நடந்தாள். ஓடினாள்.

மெல்ல மெல்ல என்னிடமிருந்து என்னை உருவினாள். அவள் என்ன சொன்னாலும் என்னை கேட்க வைத்தாள்.”இப்படியே ஏச்சுக்கும் பேச்சுக்கும் பயந்து பயந்து வாழ்ந்திட்டிருந்தா நான் சீக்கிரமே செத்துருவேன். என்னால இப்படி பயந்து வாழமுடியாதுங்க. என்ன அம்மாவீட்ல விட்ருங்க. எனக்கு ரொம்ப பயமாயிருக்குங்க”

இன்னொரு நாள் அதிகம் அழுதாள்.

மனசு கேட்காமல் அம்மாவிடம் –

”ஏம்மா அவளுக்குத தான் ஒண்ணும் தெரியாதுல்ல. நீ ஏன் அவளையே கரிச்சுக் கொட்டறே. சின்னப் பொண்ணுதானே. அவளை அவ போக்குக்கு விடு”
அம்மா கிச்சனில் அழுதாள். குலுங்கி குலுங்கி அழுதாள்.

பேசியது உறுத்த கிச்சனுக்கு போனவன் ஸ்தம்பித்தேன்.

மாமா இறந்தபோது அழுதவள்!!! அதற்குப் பிறகு அப்படி பார்த்தது இல்லை.

என்னைக் கொண்டு இது தான் முதன் முதலில்.

முடிவுக்கு வந்திருந்தாள்.

”தம்பி. நீ வீட்ல இருந்துக்கப்பா. நான் இருந்தா ஒண்ணு கிடக்க ஒண்ணு சொல்லவேன் வம்பா போவும் நான் கிராமத்துக்கே போயிடறேன் மிச்ச உள்ள காலத்தையும் கோயில் குளம்னு ஓட்டிடுறேன். அனுஷா வாழ்க்கைகாகத தான் பார்க்குறேன். அவளுக்கும் ஒரு நல்ல வாழ்க்கை அமைஞ்சிடுச்சின்னா என் கடமையெல்லாம் தீர்ந்திடும்”

”இல்லம்மா.. மன்னிச்சிரும்மா. தப்பா பேசிட்டேன். மன்னிச்சிரும்மா..”

நான் தாழ்ந்த்தை அம்மா ரசிக்கவில்லை. நீண்ட வற்புறுத்தலுக்குப்பின் சமாதானமானாள்.

”சரி சரி உட்டுடு. இனிமே நான் வாய மூடிக்கிறனே. வாய் திறந்தா தான் பிரச்னை. நான் உண்டு என் வேலை உண்டுன்னு இருந்துக்கறேன்”

அம்மாவிடம் நான் தாழ்ந்ததை சுமதி ரசிக்கவில்லை.

”இப்படி அம்மாக் கோண்டா இருந்தா – கட்டின பொண்டாட்டி என்ன தான் பண்ணுவா” மீண்டும் அழுதாள்” ஐயோ என் வாழ்க்கை இப்படி ஆயிடுச்சே நான் என்னல்லாம் கனவு கண்டுக்கிட்டிருந்தேன். என் கற்பனையெல்லாம் தவிடுபொடி ஆயிடுச்சே. இப்படி ஒரு முதுகெலும்பு இல்லாத ஆளுக்கிட்ட மாட்டிட்டனே. கடவுளே!!“

வந்த டென்ஷனுக்கு முகத்தில் அடித்திருப்பேன். கையைத் துக்கியது தப்பாகப் போயிற்று.

”அடிங்க. அடிங்க. அடிச்சு கொன்னு போடுங்க. உங்க வீரத்தை எல்லாம் காட்ட பொட்டச்சி நான் தானே கெடச்சேன்”

நொந்து போனேன். கல்யாணவலையில் மாட்டிக் கொண்டு தலைகீழாகத் தொங்கவிடப்பட்டேன்.

அம்மா ஒத்துப்போனாள். சுமதி அண்டாவையே கவுத்துவிட்டாலும் ஒண்ணும் நடக்காத மாதிரி ஒத்துப்போனாள்.

சுமதியின் நெருக்கடி தீரவில்லை. அம்மாவைப்பற்றி – தங்கையைப்பற்றி – அண்ணன் குழந்தைகள் பற்றி –

ஒரு நாள் என் முதுகில் படுத்துக்கொண்டு மறுபடியும் காதைக் கடித்தாள்.

”சரி உங்களுக்கும் வேணாம் எனக்கும் வேணாம் நாம ரெண்டு பேரும் கொஞ்சநாளைக்கு (?) தனியாப் போய் இருந்து பாப்பம். அவங்களுக்கும் கொஞசம் ஃபரீ கெடக்கும். கிட்ட இருந்தா முட்டப் பகை தான். என்ன சொல்றீங்க”

நான் தான் அதிபுத்திசாலி ஆயிற்றே.

”யோசிச்சி சொல்றேன்” என்றேன்.

”பளீஸ்” என்று என்னை சலவை செய்தாள்.

மயக்கத்தில் நான் எடுக்கும் முடிவுகள் அவள் பக்கமே இருந்தன.

நான் தனியாகப் போனது பார்த்து அண்ணியும் முயற்சித்தாள். வெற்றிகண்டாள்.

அனுஷாவுக்கும் ஒரு மாப்பிள்ளை கிடைத்தான். டெல்லி போஸ்டிங். அனுஷாவும் புறப்பட

அம்மா துண்டிக்கப்பட்டாள்.

துண்டிக்க்ப்பட்ட அம்மா நம்பிக்கையிழந்தாள். புறக்கணிக்கப்பட்டதாக உணர்நதாள்.

வலி என்பது உடலை உணர்வது. காயத்தை உணர்வது வீக்கத்தை உணர்வது. உடலுக்காக மனம் அழுவது. புறக்கணிப்பு என்பது மன வலி. நாலு பேரு போகும்போது ”வண்டில எடம் இல்ல. நீ ஏறாதே” என்பது புறக்கணிப்பு. உள்ளே நுழையும்போது உயிரானவர்கள் பேச்சை நிறுத்துவதும் மாற்றுவதும் புறக்கணிப்பு. முதுகுக்கு பின்னாலான சைகைகளும் புறக்கணிப்பு. மடியில் படுத்து உதட்டை வருடியவள் ஐ ஹேட் யு சொன்னாள் புறக்கணிப்பு. புறக்கணிப்பின் வலி கொடுமையானது.

புறக்கணிக்கப்பட்டவள் தனியாகப் புலம்பினாள். ப்ளட் ப்ரஷரும் சுகரும் தீவிரமானது. சுகரால் பார்வை புரையோடியது. கால்கள் துவண்டன. உறுப்புகள் பழுதுபட்டன. பழுதால் பலம் குறைந்தது. பலம் குறைய சஞ்சலம் மிகுந்தது. சஞ்சலம் புலம்ப வைத்தது. நோய்க் கூடியது.

நான் குற்றவாளியானேன்.

சுமதி ஒரு பிடாரி. அவளை தீர்மானிப்பது கடினம். கைமீறிப் போய்விட்டாள்.

அண்ணாவை அணுகினேன்.

”நீ ஒரு வேலை செய். நெல்லிக்குப்பம் போ. ஜெயம்மா சும்மா தான் இருக்கு நம்ம அம்மா மேல அதுக்கு அம்புட்டு உசுரு. கூட்டிட்டு வந்திரு. நல்லா பாத்துக்கும். மாசா மாசம் ஆயிரம் ஐந்நுறு கொடுத்திடலாம். நான் கொஞ்சம் நீ கொஞசம் சேத்து கொடுத்திடலாம் என்ன சொல்றே”

அவன் எனக்கு யோசனை சொன்னான்.

”அண்ணே பணம் முக்கியம் இல்லண்ணே.. அது இப்ப அன்புக்காக ஏங்குது. ஒரு ஆளாவாது கைக்கெட்டுற துரத்தில இருந்தா அதுல கிடக்கிற நம்பிக்கையே வேற. வெட்கத்தை விட்டு சொல்றேன். என் நிலைமை ரொம்ப மோசம். சுமதி பழையபடி இல்லண்ணே”

”சரி தான் பாலா. நான் இருக்கிற இந்த குருவிக்கூட்டுல அம்மாவும் வந்திச்சின்னா எங்க போடறது!! அட ஹால்ல ஒரு கட்டில போட்டு சீக்காளிய போட்டா நல்லாவா இருக்கும்! என்ன பாக்க அண்ணிய பாக்க வரவங்கள்ளாம் முகம் சுளிக்க மாட்டாங்களா? அம்மா வாய் சும்மா இருக்குமா? வரவங்க போறவங்க கிட்ட ஒண்ணுகிடக்க ஒண்ணும் பேசும். இதுலாம் நடக்கிற காரியம் இல்லை. நீ ஜெயம்மாவ கூட்டிட்டு வா. வேணும்னா மொத்த பணத்தையும் நானே கொடுத்திடறேன். ஆஸ்பத்திரி செலவு மருந்து மாத்திரை செலவு மட்டும் நீ பாத்துக்க சொல்றது சரிதானே”

வேறு வழியின்றி இன்னொரு தங்கை சுசிலாவைக் கேட்டேன்.

”அண்ணா நீ தெரிஞ்சு தான் பேசறியா. கைக்குழந்தைய வச்சிக்கிட்டு ஒத்தையா நின்னுட்டுருக்கேன். உதவி ஒத்தாசைக்கு யாரும் இல்லை பத்தாத்துக்கு சிசேரியன் வேற. முதுகுல ஊசி போட்டு முதுகு வலி வேற. வெயிட் எதுவும் தூக்கக் கூடாது. அம்மாவை துக்கி பாதரும் விட்டு குளிக்கவச்சி சாப்பாடு குடுத்து மருந்து கொடுத்து எப்படின்னா முடியும். அதுவும் அவருக்கு பிரைவசி போயிடும். ரொம்ப தர்மசங்கடப்படுவார். நீயாவது என்ன புரிஞ்சிக்கண்ணா”

ஒரு தாயால் பத்து பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள முடியும். பத்து பிள்ளைகளால் ஒரு தாயைப் பார்த்துக் கொள்ள முடியாது – எங்கோ படித்தது ஞாபகத்தில் வந்தது.

தாயின் கதகதப்பு தேவைப்பட்ட நாட்கள். பசித்த போது பால் கொடுத்த சேவை.. கண்டகண்ட இடத்தில் கழிந்தபோது முகம் சுளிக்காத சேவை.. இனி தேவையில்லை. எனக்கு நடக்கத் தெரியும். எனக்குப் பேசத்தெரியும்.. எனக்கு ஓடத் தெரியும். எனக்கு பணம் பண்ணத்தெரியும்.. உனக்கு என்னத தெரியும்?

குற்ற உணர்ச்சி வாட்டி வதைத்தது.

சுமதியிடம் போராடிப் பெறலாம். என்னமோ செய்து தொலைங்க என்பாள். அம்மாவைக் கூட்டி வரலாம். அதோடு முடியாது என் கடமை.

இனி அம்மா குழந்தை. தவழும் குழந்தை. ஒழுங்காகப் பேசத் தெரியாத குழந்தை. தன்னையே கவனித்துக் கொள்ளத் தெரியாத குழந்தை.

என் தாய் எனக்கு மட்டுமே!. எனக்கு மட்டுமே சதை ஆடும். சுமதிக்கு ஆட வேண்டிய அவசியம் இல்லை. சுமதிக்கு வரும் இந்தப் பொறுப்பை அவள் விரும்பவேயில்லை. விரும்பாத பொறுப்பை ஏற்பது ஒப்புக்கு சப்பாணி தான்.

என் வீட்டில்சுதந்திரமாக இருமக் கூட முடியாது. சுமதியின் முகக்கொட்டுரத்தை தாங்காமல் மூத்திரத்தைக் கூட அடக்கி வைப்பாள். பசிக்கு கேட்கத் தெரியாது. வலிக்கு முனக முடியாது. சித்திரவதை. மேலும் மேலும் சித்திரவதை.

நோக்கியாவை சொடுக்கினேன்.

”தமிழரஸ். எனக்கு ஒரு வீடு வேணும். சின்னதா இருந்தாலும் பரவால்லை. க்ரவுண்ட் ஃப்ளோரா இருக்கணும். பாத்ரும் அட்டாச்டு ரும் வெஸ்டர்ன் டாய்லட் .பெசிலிட்டி மஸ்ட். ஏதாவது ஹாஸ்பிடல் பக்கத்துல இருந்தா இன்னும் பெட்டர்”

”யாருக்கு பாலாஜி?”

”எனக்கும் அம்மாவுக்கும்”

My dearest friend, friends
Have a wonderful day!!!

அன்பின் உறவுக்கும், உறவுகளுக்கும்
என் இனிய வணக்கம்.!!!
அன்புடன் vicknasai.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக