தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 13 பிப்ரவரி, 2014

இந்து தர்மத்தில் ஆத்திகமும் நாத்திகமும் - ஒரு தெளிவான பார்வை:


இறை நம்பிக்கை ஆன்மீகத்தின் படி நிலை மட்டுமே. இறை நம்பிக்கையோடு மட்டுமே வாழ்க்கை முழுதும் பயணித்து மடிவது அல்ல ஆத்திகம். இறை நம்பிக்கையை இறை உணர்வாக மாற்றும் பயணமே ஆத்திகம்.

இந்து தர்மத்தின் முக்கியமான கொள்கை - 'பிறவியின் நோக்கம் பிறவாமையை அடைவது'. வேதங்கள் காட்டும் உன்னத வழியும் இதுவே. பிறவாமையாகிய முக்தி நிலையை அடையும் லட்சியத்தை நோக்கி நம் வாழ்க்கை பயணத்தை அமைத்துக் கொள்வதே ஆத்தீகம்.

கீதையில் கண்ணன் 16 ஆம் அத்தியாயத்தில் தேவ - அசுர குணங்களைப் பட்டியல் இடுகிறார். இதில் தேவ குணங்களை வளர்த்துக் கொள்வதும் அசுர குணங்களை விட்டு ஒழிப்பதும் ஆத்தீகம்.

மேலும் 16 ஆம் அத்தியாய ஆரம்பத்தில் கண்ணன் 'சாத்திரங்கள் உரைக்கும் தர்மங்களை பின்பற்றுபவன் தேவன்' - 'சாத்திரங்கள் மேல் நம்பிக்கை அற்றும், அவற்றை அறிய முற்படாமலும், பின்பற்றாமலும் இருப்பவன் அசுரன்' என்றும் வரையறுக்கிறார். கண்ணனின் பார்வையில் தேவனாக மாறுவது ஆத்தீகம்.

சாத்திரங்களை பற்றியும், ஞானிகளின் உபதேசங்களை பற்றியும் சிறிதும் அறிந்து கொள்ளாமல் - செவிவழி செய்திகளையும், சமுதாயத்தில் நடைபெறும் முறை கேடுகளையும் மட்டுமே வைத்து 'இறைவன் இல்லை' என்று கூறுவது நாத்தீகம் அல்ல. அது பொறுப்பற்ற தன்மையின் வெளிப்பாடு.

இறைவனை இல்லை என்று கூறுவதால் ஒருவரும் தண்டனைக்கு உள்ளாவது இல்லை. ஆனால் இறை நம்பிக்கை இல்லாத காரணத்தால் சாத்திரங்கள் கூறும் தர்மங்களை அறிவதில் நாட்டம் இல்லாது போகிறது. தமக்கு எது ஏற்புடையதோ அதுவே தர்மம் என்று முடிவுக்கு வருகிறார்கள். தர்மங்களை மீறுபவர்கள் அச்செயலால் தண்டனைக்கு உள்ளாகிறார்கள்.

இந்து தர்மத்தின் உன்னதமான சாத்திரங்கள் சாலை விதிகளைப் போல. ஒரு சமுதாயம் நல்ல முறையில் செயல்பட இறைவனால் ஏற்படுத்தப் பட்ட தர்மங்கள் தான் சாத்திரங்கள். விருப்பு - வெறுப்புகளை நீக்கி விட்டு இந்து தர்ம சாத்திரங்கள் உரைக்கும் தர்மங்களை அறிந்து கொள்ளும் பொழுது இந்த உண்மையை தெளிவாக உணர முடியும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக