தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

புதன், 15 ஜனவரி, 2014

வன்றொண்டர் நம் சுந்தரர்!!


அலுவலகத்தில் உங்களுக்குக் கீழே வேலை செய்யும் அந்தப் பேர்வழியுடன் நல்ல நட்போடு பழகுகிறீர்கள். அடிக்கடி, பணம், பொருள் என்று உதவியும் செய்கிறீர்கள். அன்றைக்கென்று பார்த்து, உங்களை, உங்கள் குடும்பத்தையெல்லாம் திட்டித்தீர்க்கிறான் அந்த ஆள். அப்படியே, "மரியாதையா எனக்கு பணம் கொடு, அப்புறம் நடக்கக்கூடாதது நடந்தா அதுக்கு என்னத் திட்டக்கூடாது " என்று மிரட்டவும் செய்கிறான். என்ன செய்வீர்கள்? நகைச்சுவையாகப் பேசுகிறான் என்று மகிழ்ந்து உதவி செய்வீர்களா, இல்லை, அவனது குடும்பத்தை - ஏழு தலைமுறைவரை திட்டித்தீர்த்து அனுப்புவிடுவீர்களா??

ஆனால், இப்படி தன் குடும்பத்தை - தன்னை ஒருவர் இகழ்ந்து பேச, அதைக் கேட்டு மகிழ்ந்து, போதும், போதும் எனனும் அளவுக்கு அவருக்கு ஒருவர் பொன்னும் மணியும் பட்டாடைகளும் கொடுத்திருக்கிறார் என்று கேள்விப்பட்டிருக்கிறீர்களா??

ஆம், பொன் கொடுத்தவர்...
சாட்சாத் அந்த சிவனாரேதான்!
திட்டித் தீர்த்தவர்..
வேறுயார்? வன்றொண்டர் நம் சுந்தரர் தான்!

தம்பிரான் தோழர் அல்லவா, திருநாகைக்காரோணம் தலத்துச் சிவனாரிடம் தான் இப்படி மிரட்டி செல்வம் கேட்கிறார் சுந்தரர். இகழ்வதுபோல் புகழும், இவ்வகைப் பதிகங்களை "வஞ்சப்புகழ்ச்சி" என்று சொல்வதுண்டு.

தோழன் என்ற பந்தம் எம்பிரானை எப்படியெல்லாம் இகழந்து பேசும் உரிமையை சுந்தரருக்கு வழங்கிவிடுகிறது, பாருங்கள்!

"நாகைக்காரோகணத்து இறைவா! நீரோ மண், விண் எல்லா உலகையும் ஆள்கிறீர். ஆனால், உம்மையோ, உம் தேவி மலைமகளையோ, இளைய மகன் முருகனையோ புரிந்துகொள்ளவே முடியவில்லை. மூத்தமகன் கணபதியோ, தின்று கொழுத்து வயிறுவளர்த்திருக்கிறானே தவிர, வேறொன்று பற்றியும் அறிபவனில்லை.உமது குடும்பமே இப்படி இருப்பது தகுமோ? நான் இந்த உலகில் வலிமையோடு வாழ தேவையானதையெல்லாம் நீர் தராவிட்டால், உம் திருமேனி வருந்தினாலும் பரவாயில்லை என்று உம்மைச் சுற்றி இறுகக் கட்டிப்பிடித்துவிடுவேன். அப்புறம் இரக்கமில்லாதவன், கொடுமைக்காரன் என்றெல்லாம் என்னைத் திட்டக்கூடாது.

பதிகம்:
மண்ணுலகும் விண்ணுலகும் உம்மதே ஆட்சி
மலையரையன் பொற்பாவை சிறுவனையுந் தேறேன்
எண்ணிலிஉண் பெருவயிறன் கணபதிஒன் றறியான்
எம்பெருமான் இதுதகவோ இயம்பியருள் செய்யீர்
திண்ணெனஎன் னுடல்விருத்தி தாரீரே யாகில்
திருமேனி வருந்தவே வளைக்கின்றேன் நாளைக்
கண்ணறையன் கொடும்பாடன் என்றுரைக்க வேண்டா
கடல்நாகைக் காரோண மேவியிருந் தீரே.
 Nanthavil Amman

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக