தொலைக்காட்சி!!

Search This Blog

Friday, January 17, 2014

ஒரு மலையாளியாக இருந்தும்,......................


சினிமா நடிகர், அரசியல்வாதி, எழுத்தாளர் என பன்முகம் கொண்டு எண்ணற்ற சாதனைகளை ஈட்டியவர் இதயக்கனி எம்ஜிஆர்.

எம்.ஜி.ஆர் என்ற பெயரில் புகழ் பெற்ற மருதூர் கோபாலமேனன் இராமச்சந்திரன் தமிழ்த் திரைப்பட நடிகராகவும், 1977ம் ஆண்டு முதல் இறக்கும் வரை தமிழ்நாட்டின் தொடர்ந்து மூன்று முறை முதலமைச்சராகவும் இருந்தவர்.

இளமைப்பருவம்

கோபாலமேனன், சத்தியபாமா தம்பதியினர் இலங்கையில் வசித்த போது, 1917ம் ஆண்டு ஜனவரி 17ம் திகதி கண்டியில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள ஹந்தானா என்ற இடத்தில் எம்.ஜி.ஆர். பிறந்தார்.

குடும்ப சூழ்நிலைகளின் காரணமாக படிப்பைத்தொடர முடியாததால் இவர் நாடகங்களில் நடிக்கத்தொடங்கினார். இவருடன் சக்ரபாணி என்ற சகோதரரும் நாடகத்தில் நடித்தார்.

நாடகத்துறையில் நன்கு அனுபவமான நிலைமையில் திரைப்படத்துறைக்குச் சென்றார். திரைப்படத்துறையில் தனது அயரா உழைப்புக் காரணமாக முன்னேறி முதன்மை நடிகரானார்.

பின்னர் தங்கமணி என்ற பெண்மணியை மணந்த இவருக்கு முதல் குழந்தை இறந்தே பிறந்தது, பின்னர் காலப்போக்கில தங்கமணியும் உடல்நலக்குறைவினால் உயிரிழந்தார்.

இவருக்கு குழந்தைகளே இல்லை, ஆனாலும் வளர்ப்புக்குழந்தைகளாக லதா, கீதா, சுதா, ஜானகி, தீபன் ஆகிய ஐந்து பேரையும் தத்தெடுத்து வளர்த்தார்.

திரைப்பட வாழ்க்கை

1936ம் ஆண்டில் சதிலீலாவதி என்னும் திரைப்படத்தில் முதலில் நடித்திருந்தும், 1947ம் ஆண்டு அவர் நடித்த ராஜகுமாரி படம் வெளிவரும்வரை அதிகம் புகழ் கிடைக்கவில்லை.

தொடர்ந்து வந்த அடுத்த 25 ஆண்டுகள், தமிழ் திரைப்பட உலகில் மிக முக்கியமானவர்களில் ஒருவராக விளங்கினார்.

இவருடைய சக நடிகர்களுள் ஒருவரான எம்.ஆர்.ராதாவினால் சுடப்பட்டுத் தெளிவாகப் பேசும் திறனை இழந்தபோதும் அவருடைய நட்சத்திர வலிமை குறையவேயில்லை.

இச்சம்பவத்திற்குப் பின்னர் முதன் முதலாக வெளிவந்த திரைப்படம் காவல்காரன். இது மாபெரும் வெற்றிப் படமாகவும், திரையுலகில் அவரது ஆளுமையை மீண்டும் நிலை நிறுத்தும் நிகழ்வாகவும் அமைந்தது. 1971ம் ஆண்டின் அகில இந்திய சிறந்த நடிகராக, எம்.ஜி. ஆரை மத்திய அரசு தெரிவு செய்து, “பாரத்” விருதை வழங்கியது.

இது சத்யா மூவிஸ் தயாரிப்பான “ரிக்சாக்காரன்” படத்தில் நடித்ததற்காக கிடைத்தது. தமிழ்நாட்டில் மொத்தம் 12 திரையரங்குகளில் 100 நாட்கள் முதல் 150 நாட்கள் வரை ஓடி, வசூலைக் குவித்தது படம்.

அவர் நடித்துக் கடைசியாக வெளி வந்த திரைப்படம் மதுரையை மீட்ட சுந்தர பாண்டியன். தனது திரைப்பட நிறுவனத்தின் கீழ் எம்.ஜி.ஆர். மூன்று படங்களைத் தயாரித்தார், நாடோடி மன்னன், அடிமைப் பெண் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன். நாடோடி மன்னன், மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் மற்றும் உலகம் சுற்றும் வாலிபன் ஆகிய திரைப்படங்களை அவரே இயக்கினார்.

அரசியல் வாழ்க்கை

இவர் ஒரு மலையாளியாக இருந்தும், ஒரு முன்னணித் தமிழ்த் தேசியவாதியாகவும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் முக்கிய உறுப்பினராகவும் திகழ்ந்தார்.

அக்கட்சியின் பொருளாளராகவும் நீண்ட காலம் பணியாற்றினார். கருணாநிதியுடன் நட்பாக இருந்தார். சி. என். அண்ணாத்துரையின் மறைவுக்குப் பின், மு. கருணாநிதி முதலமைச்சரானதைத் தொடர்ந்து இடம்பெற்ற சம்பவங்களால் ஏற்பட்ட முரண்பாடுகள் எம்.ஜி.ஆர் கட்சியை விட்டு வெளியேறினார்.

1972ம் ஆண்டில் அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் புதிய கட்சியொன்றை அவர் ஆரம்பித்தார். பின்பு அக்கட்சி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழமாக மாறியது. முதன் முதலாக போட்டியிட்ட திண்டுக்கல் பகுதியில் பெரும் வெற்றி பெற்றது.

திரைப்படங்களின் மூலம் அவரடைந்த புகழும், அவருடைய வசீகரமான தோற்றமும், சமூகத் தொண்டனாகவும், ஏழைகள் தோழனாகவும், கொடையாளியாகவும், வீரனாகவும் நடித்ததன் மூலம் பெற்றுக் கொண்ட நற்பெயரும், அவர் மிக விரைவில் மக்களாதரவைப் பெற உதவின.

1977ம் ஆண்டில் நடைபெற்ற தேர்தலில் பெரும் வெற்றி பெற்றுத் தமிழ் நாட்டின் முதலமைச்சரானார். 1984ம் ஆண்டு கடுமையாக நோய்வாய்ப்பட்டும், தமிழக அரசியல் வரலாற்றில் தேர்தல் பிரசாரத்திற்கே வராமல் முதலமைச்சர் ஆன ஒரே முதல்வரானார் எம்.ஜி.ஆர்.

1984ம் ஆண்டு இவரது ஆட்சிக்காலத்தில் மதுவிலக்கு அறிமுகப்படுத்தப்பட்டது.

அறிமுகப்படுத்திய திட்டங்கள்

விதவை ஆதரவற்ற பெண்களுக்கு திருமண உதவி

தாலிக்கு தங்கம் வழங்குதல்

மகளிருக்கு சேவை நிலையங்கள்

பணிபுரியும் பெண்களுக்கு தங்கும் விடுதிகள்

தாய் சேய் நல இல்லங்கள்

இலவச சீருடை வழங்குதல் திட்டம்

இலவச காலணி வழங்குதல் திட்டம்

இலவச பற்பொடி வழங்குதல் திட்டம்

இலவச பாடநூல் வழங்குதல் திட்டம்

வறட்சிக் காலத்தில் லாரிகள் மூலம் குடிநீர் வழங்குகின்ற திட்டம்.

இறப்பு

1987 வரை 10 ஆண்டுகள் தொடர்ச்சியாக முதலமைச்சர் பதவியை வகித்துப் பதவியிலிருக்கும் போதே காலமானார். மறைவிற்குப் பின் அவருக்கு பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது.

இவரது கட்சி 1991 முதல் 1996 வரையிலும், 2001 முதல் 2006 வரையிலும் 2011 முதல் இன்று வரை அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் ஜெ. ஜெயலலிதா தலைமையில் ஆட்சி அமைத்திருக்கிறது.

அவர் இந்த உலகத்தை விட்டு மறைந்தாலும் அவர் செய்த தொண்டுகளும் மற்றும் அவரின் கொள்கைகள் மறையவில்லை என்பது ஆணித்தரமான உண்மை.

No comments:

Post a Comment