தொலைக்காட்சி!!

Search This Blog

Saturday, January 11, 2014

பார்த்தனின் மைந்தனும் பப்பரவன் சல்லியும் ,,,,,,,,,,,,,,,,,


அலையோடு கடல் வந்து தாலாட்டிடும் முனையினில் 
கலை பொழில் நயினையில் உருக்கொண்ட தாயவள் 
நிலை பெறும் புனித மருதமும் நெய்தலுமே ,, நம் 
தலை முறை தோன்றிய நாக பப்பரவன் அல்லி மண் !!

இதிகாசங்கள் புராணங்கள் காப்பியங்கள் பின்வந்த இலக்கியங்கள் என பல்வேறு பட்ட வரலாறுகளுக்கு மண்வாசனை கொடுத்திருக்கின்றது நயினாதீவு .இந்த வாய்ப்பு இன்றைய இந்த தீவு இருக்கும் பகுதிக்கு கிடைத்ததற்கு காரணம் இந்தியாவில் இருந்து வரும் கடல் வழியில் இந்து சமுத்திரத்தின் தலை வாசலில் அமைந்து இருப்பதா ,,,,அல்லது குமரி கண்ட அழிவுகளின் பின் தனி சிறப்பு பெற்ற இடங்களில் ஒன்றாக இருந்து தமிழன் வரலாற்றை மீளவும் கட்டி எழுப்பிய பெருமை உடைய நகரங்களின் தலை நகராக இருந்ததா,,, .அல்லது ஆதிசத்தியின் ஆலயத்தை அகத்தில் கொண்டு இருக்கும் தனி சிறப்பா ,,,,,என்று பல்வேறு கோணங்களில் சிந்திக்க தோன்றுகின்றது .

இதிகாச புராண இலக்கியங்களில் பல இடங்களில் இந்த தீவினதும் தீவு சார்ந்த பகுதியினதும் வரலாற்று சிறப்புக்களும் சம்பவங்களும் கதைகளில் உள்வாங்க பட்டு இருக்கிறது .அந்தவகையில் இன்றைய இந்த கட்டுரையில் ,மகாபாரதத்தில் வரும் இந்த தீவும் தீவு சார்ந்த பகுதிகளினதும் வரலாற்று அம்சங்களையும் அதனோடு சம்பந்தபட்ட இந்த பகுதி மக்களின் வாழ்வியல் தொடர்புகளையும் ,அந்த நிகழ்வுகளின் ஆதாரமாக இன்றும் இந்த தீவில் நிலைத்து இருக்கும் ஆதார சான்றுகளையும், இந்த கட்டுரை மூலம் வெளிக்கொண்டுவர முயற்சிக்கின்றேன்.

உலகில் ஆதிகாலத்தில் நாகர்கள் வாழ்ந்த பகுதியாக கருதபடுவது இன்றைய வடகிழக்கு இந்தியாவின் பகுதிகளில் இருந்து இன்றைய தமிழ்நாட்டு பகுதிகளோடு இணைந்த குமரிக்கண்டத்திலும் அதனோடு இணைந்த ஈழத்தின் மகேந்திரமலைவரையான பகுதி வரை நாகர்கள் வாழ்ந்ததாக பல வரலாற்று ஆசிரியர்கள் கருத்துக்களை முன்வைத்து இருக்கின்றார்கள்.

ஈழத்தின் வீர மகேந்திரம் என்று சொல்லப்படுகின்ற இன்றைய அம்பாந்தோட்டைக்கு கீழே தண்ணீரில் மூழ்கிய இடத்தில் சூரன் இராவணன் முதலானோர் ஆண்ட இராசதானியும் ,இது இன்றைய இலங்கையின் மத்தியில் இருக்கும் சிவனொளிபாத மலையையும் உள்ளடக்கிய மிக பெரிய மலைதொடரான மகேந்திர மலையின் முக்கியபகுதியாக விளங்கியது .அடுத்து மணி மலை என்று சொல்லபடுகின்ற தென்னிந்தியாவின் சில பகுதிகளையும் ஈழத்தின் வடபகுதியையும் சார்ந்த பகுதியில் இருந்த ஆதிசேடன் ,விஸ்வகர்மா ,மயன் ,பிரபஞ்சனா ,சித்திரவாகனன் ,பப்பரவானகன் ,முதல் நாகர்கள் ஆண்ட இராசதானியும் இருந்ததாக கருதுகின்றார்கள் .இந்த நாகர்களின் சாம்ராச்சியம் முதலாம் கடல் அழிவுக்கு பின்னர் கபாடபுரத்தை தலைநகராக கொண்டும் ,அதன் பின்னர் வந்த கடல் அழிவால் தென்னிந்தியர்கள் இன்றைய மதுரையை தலைநகராக கொண்டும் ,ஈழத்தவர்கள் மணிபுரத்தை தலை நகராக கொண்டும் ஆண்டு வந்தார்கள் .

மணிபுரம் என்பது மணி மலையின் ஒரு பகுதியாக இன்றைய கீரி மலையை நாம் கருதுவதாலும் அங்கு புண்ணிய தீர்த்தம் இருப்பதாலும் கீரிமலை என்று சில ஆய்வாளர்கள் கருதுகின்றார்கள் .மணிமலையின் பாதிப்புக்கு உள்ளாகாத பகுதி கீரிமலை என்பது ஏற்றுகொள்ளதக்கது .பொதுவாக மணிமலை தென்னிந்தியாவில் இருந்து ஈழம் வரை நீண்டு இருந்த கடல் கொண்ட குமரிக்கண்டத்தின் ஒரு பெரிய மலையாகவே கருதபடுகின்றது .இந்த பகுதியில் நாகர்கள் வாழ்ந்ததாலும் நாகமாணிக்கம் பற்றிய பல்வேறு கதைகள் வருவதாலும் ,பிற்காலத்தில் முத்துமணிகள் அதிகளவில் கிடைத்த பிரதேசங்களாக இருப்பதாலும் மணி புரம் என்ற பெயர் வந்து இருக்கலாம் என்றும் கருதப்படுகின்றது .

மகாபாரதத்தில் தான் செய்த தவறுக்கு தண்டனையாக மாறுவேடம் பூண்டு ஒரு வரிடம் புண்ணிய தலங்களை தரிசித்து புண்ணிய தீர்த்தங்களில் நீராடி வரவேண்டும் என்று தண்டனை வழங்கப்பட்ட அர்ச்சுனன் //,இங்கு நான் பார்த்தன் என்று குறிப்பிட்டு உள்ளேன் ,குந்திக்கு உண்மையான பெயர் பிருதை. பிருதை புத்திரன் என்பதால் பார்த்தன் என்று அர்சுனனுக்கு ஒரு பெயர் இருக்கிறது //மணிபுரத்துக்கு வந்து அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி குமரி தெய்வத்தை வழிபட்டதாக வரலாற்றில் வருகின்றது .இந்த பிருதையின் தாய் வழி வம்சத்தினர் பிரபஞ்சனா என்ற நாக வம்சத்தை சேர்ந்தவள் என்றும் ஒரு குறிப்பு இருக்கிறது .

அர்ச்சுனன் வந்து வணக்கிய தெய்வம் கடல் கொண்ட தென்குமரி தாய் தெய்வம் என்று சில வரலாற்று ஆய்வாளர்கள் ஆய்வு செய்து குறிப்பிடபட்டு உள்ளதால் பலர் இதை கன்னியாகுமரியோடு இணைத்து பாண்டியர்கள் வரலாற்றுடன் இணைக்கின்றார்கள் .
மகாபாரத காலத்தில் நாக வம்சம் குருவம்சம் //சந்திர வம்சம் //யது வம்சம் என வம்சங்கள் கதைகளில் வருகின்றதே தவிர சேர சோழ பல்லவ ,பாண்டியர் எங்கும் கதைகளில் வரவில்லை .இவர்களும் அவர்கள் குறிப்பிட்ட வம்சங்களில் இருந்தவர்கள் என்பதில் மாற்று கருத்து இல்லை .

அர்ச்சுனன் வந்த மணி புரம் என்ற இடம் கன்னியாகுமரியா ,அல்லது கீரிமைலையா அல்லது இன்றைய நயினாதீவு சார்ந்த தீவுகள் பிரியும் முன்னம் இருந்த பகுதியா என்ற சந்தேகம் எழுகின்றது .இதைவிட இமயம் சார்ந்து சகல வரலாறுகளையும் மாற்றிய வட இந்தியரால் இமயம் சார்ந்த மணிப்பூர் என்று ஒரு இடத்தை எந்த ஒரு ஆதாரமும் இல்லாமல் கதைகளில் எழுதி இருக்கின்றார்கள் .அது பல ஆய்வாளர்களால் முழுமையாக மறுக்க பட்ட விடயம் .

பாரத கதை பற்றி பல்வேறு வகையில் விளக்க உரை எழுதியவர்களும் அர்ச்சுனன் புண்ணிய தீர்த்தத்தில் நீராடி குமரி தெய்வத்தை வணங்கினான் என்று குறிப்பிட்டு உள்ளார்கள் .அதைவிட காளி தேவியிடம் சக்தி அஸ்திரத்தையும் பெற்று கொண்டான் என்றும் வரலாற்றில் வருகின்றது .குமரி தெய்வம் என்னும் பொழுது குமரி தெய்வம் இன்றும் இருக்கும் அம்பிகை ஆலயங்கள் இருக்கும் இடங்களில் கன்னியாகுமரி சார்ந்த பகுதியும் ,நயினாதீவும் சிறப்பு பெறுகின்றது .கீரிமலையில் இருப்பது சிவன் .உடன் சேர்ந்த நகுலேஸ்வரி .அடுத்து கன்னியாகுமரியில் நீராடி பின்னர் சேது தீர்த்தத்தில் நீராடி //அதாவது சமுத்திர தீர்த்தம் //தெற்கு நோக்கி பஞ்ச தீர்த்தங்களில் நீராட சென்றான் என்று வரலாறு வருகின்றது .அப்படியாயின் கன்னியா குமரிக்கு தெற்கில் இருக்கும் மணிபுரம் இன்றைய நயினாதீவு சார்ந்த பகுதி என கருதப்படுகின்றது .ஈழத்து வரலாற்று ஆசிரியர்களுக்கு உள்ள குழப்பம் என்னவென்றால் அவர்கள் இந்த வரலாறுகள் தீவுகள் பிரிந்த பின்னர் நிகழ்ந்ததாக கருதி யாழ் குடாநாடு சார்த்து வரலாற்றை நிறுவுகின்றார்கள் .எனவே இவர்களின் குழப்பங்களை தீர்க்கும் வகையிலும் உண்மையான ஒரு வரலாற்றை நிறுவும் வகையிலும் நான் வைக்கும் உறுதியான ஆதாரம் தான் பப்பரவன்சல்லி .இந்த பப்பரவன் சல்லி என்ற இடத்தின் பெயர் வந்த விளக்கத்தை அந்த இடத்தை பாரத வரலாற்று சம்பவ இதிகாச கதையை உள்வாங்கி நிறுவுகின்றேன்.

மணி புரத்துக்கு பிராமண வேடம் தாங்கி வந்த பார்த்தன் அங்குள்ள புண்ணிய தீர்த்தத்தில் நீராடி குமரி தெய்வத்தை வணங்கின்றான் .இவ்வாறு வணங்கி வரும் நாளில் உலுப்பி என்ற நாக கன்னிகை இவன் மீது ஆசை கொள்கின்றாள் .அர்ச்சுனன் அவள் ஆசைக்கு உடன்படாது மறுகின்றான் .உலுப்பியிடம் தீராத பல நோய்களையும் தீர்க்கும் ஞான ஒளி பொருந்திய நாகரத்தினம் இருந்தது .இது ஆதிசக்தியால் நாகர்களுக்கு வழங்கப்பட்டது என்று வரலாறுகள் உண்டு .அந்த நாக ரத்தினத்தை சாதாரண கண் கொண்டு பார்த்தால் அவர்கள் மயக்கம் அடைவார்கள் .மயக்கத்தில் இருப்பவர்கள் அந்த ஒளியால் தெளிவடைவார்கள் .உலூப்பியும் அந்த சக்தி வாய்ந்த நாகரத்தினத்தை கொண்டு பார்த்தனை மயக்கி தனது இடத்துக்கு கொண்டு சென்று தனது இச்சைக்கு இணைய வைத்து.அரவன் என்ற மகனை பெற்றெடுக்கின்றாள்.இந்த அரவன் தான் வளர்ந்து பிற்காலத்தில் குரு சேஷ்திர போர் வெற்றி வேண்டி காளி தேவிக்கு தர்மன் செய்த யாகத்தில் தற்கோடையாகி தன் உயிரை துறக்கின்றான் .

ஒரு முறை தீர்த்தத்தில் நீராடி பார்த்தன் தியானத்தில் ஆழ்ந்து இருந்த வேளையில் நாக கன்னிகையின் அவல குரல் கேட்டு விழிக்கின்றான்.அந்த இடத்தில் யானை ஒன்று நாக கன்னிகையை தாக்க முற்படுகின்றது . உடனே தனது வில்லை எடுத்து அம்பு தொடுத்து யானையை கொன்று நாக கன்னிகையை காப்பாற்றுகின்றான் .சகல போர் பயிற்சிகளும் பெற்ற அந்த நாக கன்னிகைக்கு தன்னை தன்னால் யானையிடம் இருந்து காப்பாற்ற முடியவில்லை .இவனால் எவ்வாறு சாத்தியமானது இவன் பரசுராமன் வழிவந்த வீர பிராமணனா இல்லை சத்திரியனா,,, இல்லை .இவன் சத்திரியனாக தான் இருக்கவேண்டும் பிராமண வேடத்தில் இருக்கின்றான் என்று ஊகித்து உணர்ந்து அவனுடன் உரையாடி உண்மையை உணர்ந்தாள்.

யானையிடம் இருந்து காப்பாற்ற பட்ட சித்திராங்கதை .பிராமண வேடத்தில் இருந்த பார்த்தன் அருகில் சென்று நன்றி கூறி ,வில்வித்தையில் சிறந்த பிராமணரே நான் இந்த நாட்டின் அரசன் சித்திரவாகனன் மகள் எனது பெயர் அல்லி ,எனது தந்தைக்கு நான் ஒரே பிள்ளை என்பதால் என்னை இந்த நாட்டுக்கு இளவரசியாக அறிவித்து எனக்கு சித்திராங்கதை என்று பெயர் சூட்டி இருக்கின்றார்.உங்களை பார்த்தால் எனக்கு பிராமணராக தெரியவில்லை நீங்கள் யார் உண்மையை சொல்லுங்கள் என்று கேட்டு இருக்கின்றாள்.

முதல்பார்வையிலேயே அவளது அழகில் மயங்கி தன்னிலை மறந்து நின்ற பார்த்தனால் அவளிடம் பொய் சொல்ல முடியவில்லை காலகணிப்பில் தான் மாறுவேடத்தில் இருக்கவேண்டிய காலமும் நிறைவானதால் தன்னை அர்ச்சுனன் என்று வெளிப்படுத்தினான் .சந்தோசத்தில் துள்ளி குதித்த அவள் அவனை தனது அரண்மனைக்கு அழைத்து சென்று தந்தைக்கு அறிமுகபடுத்தினாள்.

தன் அரண்மனைக்கு வந்திருப்பவன் அஸ்தினா புர குருவம்ச அரச வாரிசும் இந்திரபிரஸ்தத்தை பேரரசாக்கியவனும் தன் மூதாதையான நாக அரசன் பிரபஞ்சனா வழியில் வந்த சகோதரியான பிருதையின் மகன் பார்த்தன் என்பதை அறிந்த சித்திரவாகனன் மிகவும் சந்தோசம் அடைந்தான் .தங்களுக்குள் உள்ள உறவு முறை பற்றிய விளக்கங்களை பார்த்தனுக்கு கூறினான் .
பார்த்தனும் சிறுவயதில் துரியோதனனால் நச்சு பாயாசம் கொடுத்து கடலில் விட்ட வீமனை நாகர்கள் கடலில் காப்பாற்றிய பொழுது எங்கள் தாய் தான் நாகலோகத்தை பூர்வீக மாக கொண்டவள் என்றும் குந்துபோஜனின் வளர்ப்பு மகள் என்றும் தங்களுக்கு உண்மையை கூறியதாகவும் கூறினான் .சித்திராங்கதையை கண்டதும் காதல் கொண்டு மனத்தால் அவளை அடைந்துவிட்டேன் அவளை எனது மனைவியாக்க விரும்புகின்றேன் என்று சித்திரவாகனனிடம் தனது விருப்பத்தையும் கூறினான் .

சித்திரவாகனுக்கு சம்மதம் இருந்தாலும் எங்கள் நாகர்குல வழக்கப்படி நாங்கள் தாய்வழி உறவு முறையை பின்பற்றுபவர்கள் .அந்த வகையில் பார்த்தா நீயும் தாய் வழி உறவில் வருகின்றாய் அதனால் திருமணத்தில் சம்மதிப்பதில் தயக்கம் இல்லை .ஆனால் எங்கள் வழக்கப்படி எனது மகளை கன்னிகாதானம் செய்து உங்களோடு இந்திர பிரஸ்ததுக்கு அனுப்ப முடியாது .அவள் இங்கேயே இருக்கவேண்டும் .இந்த நாகர் குல அரசை அவளும் அவளுக்கு பிறக்கும் பிள்ளையும் ஆளவேண்டும் அதற்கு சம்மதமானால் நான் உங்கள் திருமணத்துக்கு சம்மதிகின்றேன் என்று கூறினான் .அர்ச்சுனன் சம்மதித்ததால் அல்லிக்கும் அவனுக்கும் சித்திர வாகனன் இனிதே திருமணத்தை நிறை வெற்றி வைத்தார் .இவர்கள் இருவரும் சில வருடங்கள் இல் வாழ்வில் இன்புற்று இருந்தார்கள் இவர்களுக்கு பிறந்த பிள்ளைதான் பப்பர வாகனன் .இவன் பிறந்து சிறிது காலத்தில் தர்மனிடம் இருந்து அழைப்பு வர அர்ச்சுனன் மணிபுரத்தில் இருந்து கோகர்ணம் சென்று அங்கிருந்து துவாரகை சென்று அங்கு கிருஷ்ணர் தங்கை சுபத்திரையை அவள் விருப்பத்தின் பெயரில் கடத்தி கொண்டு இந்திர பிரஸ்தம் செல்கின்றான் .

அர்ச்சுனன் சென்ற பிரிவு துயர் தாங்க முடியாமல் சித்திராங்கதை இன்று நயினாதீவு மக்களால் முனை சல்லி என்று அழைக்கப்படும் இடத்தில் அதாவது இன்று அம்பாள் கோவில் நாக சாந்தி செய்யும் மண்டபம் உள்ள இடத்துக்கு அண்மையாக கருதப்படுகின்றது .அந்த இடத்தில் இருந்த தாய் தெய்வத்தின் ஆலயத்தின் முன் தன் மகனான பப்பரவனையும் வைத்துகொண்டு அழுது கண்ணீர் விட்டு பிரிவால் தவிக்கின்றாள் என்று நாவலர் தனது கவிதையில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார் .

கற்பகத்து இறையை வென்ற
கைதவன் கடற்று என் கன்னித்
தற்பரை கோயில்முன் உன்
தவம், தவம் கிடக்க, அன்னான்
அற்பு, அறம் குழைந்து ஆங்கு ஓர் சேய்
அமிழ்து எழு தமிழில் அன்னை
கற்பு அறம் மிழற்றக் கண்டேன்;
காண நீ நோற்றாய் அல்லை.,,,,,

இதில் நாவலர் குறிப்பிடும் கற்பகத்து இறை என்பது இந்திரன் இந்திரனை வென்ற இந்திரஜித்து வம்சத்தில் வந்தவள் என்ற கருத்தில் அவர் கூறி இருக்கலாம் .இந்திரஜித்துவின் மனைவி சுலோட்சணா ஆதிசேடனின் மகள் என்று ஒரு வராலாறு இருக்கிறது .அவள் வம்சத்தில் வந்தவள் என்ற கருத்தாக இருக்கலாம் ,இன்னும் ஆய்வுக்கு உரிய விடயம் .

இவ்வாறு சித்திராங்கதை பிரிவு துயரால் வாடுவதை அறிந்த அர்ச்சுனன் இன்னொரு மனைவியான உலோப்பி பார்த்தனிடம் வாலிபனாய் இருந்த தன் மகனை தூது அனுப்புகின்றாள் .அரவன் சென்று தந்தையை இந்திரன் சபையில் சந்தித்து தாயும் சிறிய தாயும் தங்களை காணாது படும் துன்பங்களை கூறுகின்றான் .ஆனால் அர்சுனனால் அந்த சமயம் இவர்களை பார்க்க வரமுடியவில்லை.
சில காலத்தில் பின்னர் பாரத போரின் தொடக்கத்தில் அரவானும் இறந்து போக சித்திராங்கதை மகன் பப்பரவன் குரு வம்சத்தினர் மீதும் தந்தை மீதும் யது வம்சத்தினர் மீதும் கோபம் கொண்டவனாய் வளர்ந்து நாக நாட்டை ஆள்கின்றான் .அண்ணனான.அரவனை சதி செய்து கொன்றதாகவும் தாய்மாரை தவிக்க விட்டதாகவும் கருதி குருவம்சதினரையும் அதற்கு உடந்தையாக சூழ்சிகள் செய்த யது வம்சத்தினரையும் பழிவாங்க நினைக்கின்றான் .அதற்காக காலம் பார்த்து இருக்கின்றான் .

பாரத போரில் வெற்றி பெற்ற பின்னர் கிருஷ்ணரும் அர்சுனனும் சேர்ந்து நாகர்கள் வாழ்ந்த காண்டவ வனத்தை அழிகின்றார்கள் அதில் பெரும் தொகை நாகர்கள் இறக்க தப்பி பிழைத்தோர் இடம்பெயர்ந்து செல்கின்றார்கள் .இவ்வாறு நாகர்களுக்கும் குருவம்சத்தினருக்கும் யது வம்சத்தினருக்கும் பகை உருவானது .அந்த காலத்தில் தர்மர் செய்த அஸ்வமேத யாக குதிரையை சென்று பப்பரவன் சிறைப்பிடித்து நாக நாட்டுக்கு கொண்டு வருகின்றான் .அதை தேடி வரும் குருவம்சத்தினரை போரில் வென்று சிறைப்படுத்துகின்றான் .இறுதியில் அர்ச்சுனன் யாக குதிரையை தேடி வந்து பப்பரவனுடன் போர் புரிகின்றான் வந்து இருப்பது தந்தை என்று அறியாமலே பப்பரவன் வீரமாக போர் புரிந்து அர்சுனனை போரில் தன் நாக கணையால் தாக்கி மூர்சை அடைய செய்கின்றான் .படுகாயங்களுக்கு உள்ளாகி அர்ச்சுனன் மரணிக்கும் ஆபத்தில் இருந்த வேளை உலோப்பி அவ்விடத்துக்கு வந்து ஒளி பொருந்திய நாக ரத்தினத்தின் துணையுடன் வைத்தியம் செய்து நாக பாணத்தினால் கட்டப்பட்ட அர்சுனனை காப்பாற்றி வந்து இருப்பது உன் தந்தை என்று கூறி பப்பரவனுக்கு உண்மையை புரியவைக்கின்றாள் .

பின்னர் சித்திராங்கதையிடம் அழைத்து சென்று அனைவரும் ஒன்று சேர்ந்து யாக குதிரையுடன் அஸ்தினா புரத்துக்கு செல்கின்றார்கள் .அங்கு யாகத்தின் பின்னர் யாகத்தில் கலந்து கொள்ள மட்டுமே பப்பரவன் வந்தான் அரசில் பங்கு கேட்க அல்ல என்பதை புரிந்துகொள்ளாத அபிமன்யு மகன் பரீட்சித்தோடு ஏற்பட்ட கருத்து முரண்பாட்டால் தாயையும் பெரியதாயான உலோப்பியையும் அழைத்துக்கொண்டு பப்பரவன் மீண்டும் நாக நாட்டுக்கு வந்து சிறப்பாக அரசாட்சி செய்து வந்தான் .பிற்காலத்தில் பரீட்சித்தும் பப்பரவன் வழி வந்த நாக அரசனாலேயே கொல்லபட்டான்.அதற்கு பின் பரீட்சித்து மகன் ஜெனமே ஜெயன் நாகர்களை பழிவாங்க நாகர்கள் உலகின் பல்வேறு பகுதியிலும் பரந்து வாழ வேண்டிய நிலை ஏற்பட்டது .நாகர்களுடனான போரினாலும் சம காலத்தில் ஏற்பட்ட கடல் அழிவினாலும் குருவம்சமும் யதுவம்சமும் பெரும் அழிவுகளை சந்தித்தது .இதுவே துவாரக யுகத்தின் முடிவாகவும் கொள்ளபடுகின்றது .கி மு 3114 இந்த காலம் தான் நாகர்கள் இடம் பெயர்ந்த துவாரக யுகத்தின் முடிவாக கருதப்படுகின்றது அதன் 12 வருடங்களின் பின்னர் கலியுகத்தின் ஆரம்பமாக கி மு 3102 குறிப்பிடுகின்றார்கள் .

இவ்வாறு மகா பாரத கதைகளிலும் அதன் பின்னர் எழுதப்பட்ட கிளை கதைகளிலும் வரலாறுகள் நீண்டு செல்கின்றது .வரலாறுகள் எழுதப்பட்ட வகையில் பல்வேறு மாற்றங்களுக்கும் தாக்கங்களுக்கும் உள்ளாகி இருந்தாலும் .அந்த வரலாற்றின் ஒரு சிறு பகுதி நடந்த இடம் இன்றைய நயினாதீவு என்பதற்கு சான்றாக இங்கு இன்றும் வரலாற்று ஆசிரியர்களாலும் நயினை மக்களாலும் அழைக்கப்படும் பப்பரவன் சல்லி என்ற இடம் அம்பாள் ஆலயம் அமைந்துள்ள பெரும் பகுதியும் அதனுடன் சேர்ந்த கல்யாண மண்டபம் சார்ந்த பகுதியும் ,வள்ளுவர் மடம் அமைந்துள்ள பகுதியும் வடக்கு கரை ஐயனார் ஆலய பகுதியும் அதனோடு இணைந்த பகுதியும் பப்பரவன் சல்லி என்று அழைக்கப்படுகின்றது .அம்பாள் ஆலய பல்வேறு குறிப்புக்களிலும் ஆலய வரலாறு கூறும் நூல்களிலும் உறுதிபடுத்தும் ஆதாரங்கள் இருக்கின்றது .அதற்கு மேற்கு புறமாக கடலோடு சேர்ந்த நாக சாந்தி செய்யப்படும் மடம் அமைந்துள்ள கடல் சார் பகுதி முனை சல்லி அல்லது பப்பரவன் முனை சல்லி என்று அழைக்கப்படுகின்றது .

சில வரலாற்று குறிப்புக்களில் வரும் விடயங்களில் இருந்து பப்பரவன் என்ற அரசன் இராச தானியாக இருந்து ஆட்சி செலுத்திய இடமாக இன்றைய வங்களாவடி ஞானவைரவர் ஆலயம் அமைந்துள்ள பகுதி சார்ந்ததாக குறிப்பிட படுகின்றது.அது எதிர்காலத்தில் வரும் ஆய்வாளர்களால் சரியாக ஆய்வு செய்து நிறுவப்படுமாயின் ஏற்புடையதே ,,,அல்லது பப்பரவனுடைய இராசதானி அங்கிருந்து இன்றைய பப்பரவன்சல்லிவரை நீண்டு இருந்து இருக்கலாம் .இன்று நாம் பப்பரவன் சல்லி என்று அழைக்கப்படும் இடம் பப்பரவன் தாய் அல்லி வாழ்ந்த இடம் என்பதை கொண்டு முன்னர் பப்பரவன் அல்லி என்று கூறப்பட்டு பிற்காலத்தில் பெயர் மருவி பப்பரவன் சல்லியாக வந்து இருக்கலாம் .

மேலும் இன்று நயினாதீவில் இருக்கும் மயானம் சல்லி பரவை என்ற பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றது .இதுவும் பப்பரவன் தாய் அல்லியின் பெயரை கொண்டு ஒருகாலத்தில் அல்லி பரவை என்று அழைக்கப்பட்டு பிற்காலத்தில் பெயர் மாறி இருக்கலாம் .எழுதப்படாத வரலாறுகள் செவிவழி கதைகள் பேச்சு வழக்கில் பெயர்கள் மாறி வருவது உலக இயற்கை அந்த வகையில் பெயர்மாற்றங்கள் ஏற்பட்டு இருக்கலாம் .இவை இன்னும் ஆய்வுக்கு உட்படுத்த படவேண்டிய விடயங்களாக இருந்தாலும் நான் எனது சக்திக்கு உட்பட்டவகையில் இந்த கட்டுரையில் எனது கருத்தை முன் வைத்து நிறைவான வரலாற்றை எதிர்காலத்தின் கைகளில் விட்டு செல்கின்றேன் ,,,,,, ,,,

,,,,,,நன்றியுடன் சிவமேனகை ,,,,,,,,

No comments:

Post a Comment