தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

வியாழன், 24 அக்டோபர், 2013

உறங்கும் உண்மைகள் -காவோலை விழ குருத்தோலை சிரித்த கதை


காவோலை விழ குருத்தோலை சிரித்த கதை தான் பாருங்கோ ,,,பிறந்து முன்று வயசு ஆகல இந்த குழந்தை என்னப்பாத்து கேலி செய்யுது இவயளும்,,,இப்படியே இருக்கவா போயினும் இவர்களுக்கும் வயோதிப காலம் வருந்தானே ,,,,,,எப்பிடி இருந்தனான் இப்பிடி ஆகிவிட்டான் என்று பொன்னம்மா ஆச்சி காமடி பண்ணுறமாதிரி சொல்ல, எனக்கு ஆச்சிமாரிட்ட கதை கேட்கின்றது என்றா சரியான ஆசை பாருங்கோ அதால நானும் அம்மாவுக்கு கடிதம் எழுதிக்கொண்டு இருந்தனான் அதை மடித்து வச்சுட்டு ஆச்சின்ர கதைய ரசிப்பம் என்று அவாட முகத்த பார்த்தா வயோதிப வயதிலையும் அந்த அம்மாட கண்ணில இவ்வளவு கண்ணீரா என்று ஒரு நிமிடம் நான் அதிர்ந்து போனேன் ஆச்சிர கண்ணை துடைத்து என்ன நடந்தது என்று கேட்டேன் இரு கைகளாலும் கண்ணை துடைத்தவாறே தன்கதையை சொல்ல தொடங்கிறார் ஆச்சி ,,,,,

பிள்ளை இந்த நாட்டில இந்த காம்பில உன்னை இன்றைக்கு என்ர ரூமுக்க கொண்டுவந்தது நான் கும்பிட்ட துர்க்கை அம்மன் தான் என்று நினைக்கின்றன் என்று தழு தழுத்த குரலில் சொன்னார் .அதாவது நான் வந்து சுவிஸ் இல் லுகானோ என்ற இடத்தில் உள்ள அகதி முகாமில் பதிந்து என்னையும் ஒரு தமிழ் ஆச்சி ஆமாம் அவா வுக்கு எங்கட அம்மம்மாவைவிட வயது கூட எனக்கென்னவோ ஆச்சி என்று கூப்பிட தான் பிடித்தது அவா இருந்த அறையில் என்னையும் அவவோட சேர்த்து விட்டார்கள் நானும் யோசித்தேன் இந்த வயதில இவா எப்பிடி இந்த இடத்தில என்று ஆனா கேட்க பயம் சிலபேர் சில வேளை பேசியும் போடுவினும் ஆனா இவா ஒரு நல்ல ஆச்சி ,,,சரி பிள்ளை கேளு பிள்ளை என்று ஆச்சிக்கு தன் சோகக்கதையை சொல்லி முடித்துவிடவேண்டும் என்ற ஆதங்கத்தில் வேறுதிசையில் சிந்தித்த என்னை தன்வயப்படுத்தி தொடங்கிறார் கதையை ,,,

நான் பிள்ள யாழ்பாணத்தில தெல்லிபளை என்ற இடத்தில துர்கை அம்மன் அருளால சிறப்பாக வாழ்தனான் சேமன் நல்லையா என்றால் அங்கு தெரியாதவர்கள் யாரும் இருக்க மாட்டார்கள் அவர்தான் எனது கணவர் ,அவர் என்ர மாமா மகன் தான் நாங்கள் இனசனத்தோட நல்ல சொத்துபத்தோட சந்தோசமாக வாழ்தவர்கள் எங்களுக்கு எட்டு பிள்ளைகள் அந்த எட்டையும் என்ர மனிசன் (குரல் தலுதளுக்குது )இந்த பிரட்சனை ஆரம்பித்த போதே ஒவ்வொருத்தரா வெளிநாட்டுக்கு அனுப்பி விட்டார் நான் அப்பவும் கடைசி பெடியன அனுப்பேக்க கேட்டனான் இவன நாம ஊரில வைத்து இருப்பம் என்று அவர் நான் சொன்னத கேட்கல இன்ச இருந்தா இந்த பிரட்சனையால பிள்ளையின்ர உயிர் போயிடும் வெளிநாட்டில போனா அவன் மற்ற பிள்ளையல் மாதிரி நல்லா இருப்பான் நீ தடுக்காத என்று சொல்லி என்ன அடக்கி போட்டார் நாங்க எங்கட காலத்தில புருசனோட திருப்பி கதைத்து பழக்கம் இல்லாததால அப்படியே போய் நல்லா இருக்கட்டும் என்று விட்டு விட்டன் பிள்ளைகளை வெளிநாட்டுக்கு அனுப்பிய பின்னும் என்ர மனிசன் கூலி ஆட்களை வைத்து விவசாயம் செய்து நாங்க ஒருத்தருடைய கையையும் எதிர்பார்க்காமல் என்ர மனிசன் சுய உழைப்பிலேயே வாழ்தம் பிள்ளைகள் இடைக்கிட கடிதங்கள் போடுவார்கள் அதோட காருக்கு பக்கத்தில தொலைக்காட்சி பெட்டிக்கு முன்னால நின்று படமும் எடுத்து அனுப்புவார்கள் முத்தவன் ஒரு முறை ஒரு வெள்ளைக்காரிக்கு பக்கத்தில நின்றும் ஒரு படம் அனுப்பினான் நான் மனுசனிட்ட இது என்னங்க என்று கேட்க அது அவனோட வேலை செய்ற பிள்ளையாம் என்று என்ர வாயை அடைத்து போட்டார் 

எட்டு பிள்ளையில மூத்தவனுக்கு பிறகு மூன்று பெண் பிள்ளைகள் பிறகு நாலும் பெடியங்கள் ,மூத்தவளுக்கு சொந்த மச்சான தான் பேசி கலியாணம் செய்து கொடுத்தம் அடுத்தவள் தான் விரும்பி இருக்கின்றன் என்று சொன்னதால அவளுக்கும் அதுவும் எங்கட தூரத்து உறவு தான் அதையும் செய்ய சொல்லி இவர் கடிதம் எழுதினார் மூத்த மகனும் அந்த வெள்ளைகாரியை கட்டி விட்டான் அதுக்கும் என்ர மனிசன் என்னத்தான் பேசுனது உன்ர பிள்ள செய்த வேலையால ஊருக்க தலை நிமிர்ந்து நடக்கேலாம இருக்கென்று முதல் மூன்று பெரும் கனடாவில அடுத்த மகள் இங்க சுவிஸ் ல தான் வாசலோ கதவோ என்று சொல்லுற இடத்தில இருக்கின்றாள் அவளும் விரும்பிதான் முடிச்சவள் அடுதவங்கள் இரண்டு பேர் லண்டன் ல அவங்களும் விரும்பி முடிசவங்கள் கடைசிக்கு மூத்தவன் என்ர தம்பிர மகளை முடிச்சவன் அவன் பிரான்சில கடைசி மகன் பிரான்சில தான் இருந்ததவன் அவன் ர கதையை மட்டும் கேட்காத என்று சொன்ன ஆச்சியின் கண்களில் மீண்டும் கண்ணீர் சரி ஆச்சி அவர்ர கதை வேணாம் நீங்க ஏன் பிள்ளையள் இருக்கேக்க நீங்க இந்த காம்பில இருக்கின்றீர்கள் என்று கேட்டேன் அது தான் சொல்ல போகின்றேன் என்று தொடங்கினார்

1988 ,,ஆண்டு மூத்தவளுக்கு ஒரு பொம்பிளை பிள்ளை பிறந்தது அவர்கள் குழந்தை படமும் அனுப்பி கடிதமும் போட்டு இருந்தார்கள் கடிதத்தில் எழுதி இருந்தது அம்மாவை பார்க்க ஆசையாக இருக்கின்றது நாங்கள் பொன்சர் செய்கின்றோம் அம்மா கனடாவுக்கு வரட்டும் என்று எழுதி இருந்தார்கள் அப்பயும் அந்த புண்ணியவான் என்ர மனுஷன் சொன்னவர் நீ என்ன விட்டு விட்டு போகாத வெளிநாடு நமக்கு சரிவராது அங்க வீட்டுக்க நாம அடைந்து கிடக்கோணும் நீ என்ன விட்டுட்டு போகாத என்று கெஞ்சும் குரலில கேட்ட மனுஷன் இப்ப இறந்தும் கடவுளாபோயிட்டார் எனக்கும் 
பிள்ளைகளை பார்க்கின்ற ஆசையும் கொஞ்சம் வெளிநாட்ட பார்கின்ற ஆசையும் இருந்தது அதால நான் மனுஷன் சொன்னத கேட்காம கனடா போனேன் அங்கு போனதும் ஆரம்பத்தில் பாசமாக இருந்தார்கள் எல்லாரும் ஒரே வேலை வேலை என்று இயந்திரம் போல் செயல்பட்டார்கள் எனக்கு வீட்டில் குழந்தை பார்க்கும் வேலை நானும் மாறி மாறி அங்கு பதின்மூன்று வருடம் பெரியவளின் மூன்று பிள்ளைகளையும் அடுத்தவளின் மூன்று பிள்ளைகளையும் பார்த்தேன் மகன் வீட்டுக்கு மருமகளுக்கு எங்களை பிடிக்காததால் நான் போவதில்லை எப்பவாவது மூத்தவன் வந்து பாத்து விட்டு போவான் அவன் நிலைமையை பார்க்க கவலையாய் இருக்கும் அவனுக்கும் இரண்டு பிள்ளைகள் இரண்டு முறை கூட்டி கொண்டு வந்து காட்டினவன் அந்த வெள்ளைகார மருமகளை ஒரு முறை காரில் போகும் போது பார்த்தேன் அவ்வளவுதான் மூத்த பேத்திக்கு சாமத்திய வீடு செய்தார்கள் வெகு விமரிசையாக அங்கு எல்லா பிள்ளைகளும் கனடா வந்தார்கள் சிறப்பாக செய்தார்கள் எனக்கு அன்று மனதில் ஒரு பெரும் கவலை என்ர மனிசன் இல்லையே என்று அவர் இறந்து அப்ப இரண்டு வரிடம் ஆச்சு ஆனா ஒரு பிள்ளை கூட போய் கடமை செய்யாமல் அனாதைபோலவே உறவுக்காரர்கள் கடமை செய்ய அந்த புண்ணியவான் போய்சேர்ந்து விட்டார் நானும் அந்த மனிசன தனிய விட்டுட்டு வந்ததன் பலனை இப்ப அனுபவிக்கின்ரன் மறுபடியும் அழுகின்றார் 

சாமத்திய வீடு முடிந்த கையோடு என்னை லண்டனில் உள்ள மகன் லண்டனுக்கு கூட்டிக்கொண்டு போக போவதாக அக்காமாரிடம் அனுமதி பெற்று என்னை லண்டனுக்கு கூட்டி வந்தார்கள் அங்கும் அதே வாழ்க்கை தான் பிள்ளை பராமரிப்பு தான் லண்டன் மாறி சுவிஸ் மாறி பாரிஸ் மாறி பிள்ளை பராமரிப்பு நான் சம்பளம் இல்லாத வேலை ஆள் ஆக எனது பதினேழு வரிடம் கடந்தது எனக்கும் உடம்பால் ஏலாத நிலைமை வந்து விட்டது பேரப்பிள்ளைகளும் வளர்ந்து விட்டார்கள் எல்லாரும் அகதிகளாக வந்து இந்த நாடுகளில் குடிஉரிமை பெற்றுள்ளார்கள் அவர்கள் இந்த நாட்டு கலாசாரங்களை பின்பற்றுகின்றார்கள் நான் விசாவுடன் கனடாவந்து கனடா குடிஉரிமை பெற்று இன்று இங்கு அகதியாய் இருக்கின்றேன் என்றார் 
இப்பவும் அவர் சில விடயங்களை பிள்ளைகளுக்காக மறைக்கின்றார் என்று நினைத்தேன் அதனால் நான் கேட்டேன் விசாவுடன் இருந்தா நீங்கள் இந்த வயதில் எவ்வாறு இந்த இடத்துக்கு அகதியாக வந்தீர்கள் என்று கேட்டேன் 

என்ர பிள்ளையல் ஒருத்தருக்கும் ஒன்றும் சொல்லகூடாது என்று கடுமையான கட்டுபாடு விதித்துள்ளார்கள் பிள்ளை ஆனால் நீ என்னட பேத்தி மாதிரி இருக்கின்ற என்று இன்றும் இரத்த உறவுக்காக எங்கும் அந்த தாயுள்ளம் தொடர்ந்தார் எல்லாருடைய பிள்ளைகளும் பள்ளிக்கூடம் போக தொடக்கி விட்டார்கள் என்னை கனடா போக சொல்லி சொன்னார்கள் கனடாவில் இருந்தவர்கள் அங்கு வரவேண்டாம் இங்கேயே இருக்கும் படி சொன்னார்கள் கனடாவில் முன்னர் எனக்கு மாதா மாதம் காசு தந்தவர்கள் நான் போய் எடுத்து கொடுக்காததால் அதை தடை செய்து விட்டார்கள் 
அதுவும் அவர்களுக்கு கோபம் அதால இங்க இருப்பவர்களுக்கும் என்னை வீட்டில வைத்திருக்க விருப்பம் இல்லாததை அவர்கள் செயல்களில் தெரிந்து கொண்டேன் கடைசி மகன் கலியாணம் கட்டாமல் பிரான்சில் இருந்தான் அவனிடம் போகபோகின்றேன் என்று சொன்னேன் சரி கொண்டு போய் விடுகின்றோம் என்றனர் சொல்லி மூன்று நாள் போகல அவன் அங்க ஒரு தேவையில்லாத காதல் பிரட்சனையில் அடிபட்டு வெட்டுபட்டு கோழைத்தனமாக செத்துபோனான் பொம்பிளை பிரட்சனையில் இறந்ததால் எல்லோரும் கேவலமாக கதைக்க தொடங்கினார்கள் சுவிஸ் இல் நான் இருந்ததால் மகள் வீட்ட துக்கம் விசாரிக்கும் வகையில் பலர் வந்து ஊர் வம்பு பேசினார்கள் இதெல்லாம் கேட்கவேண்டிய நிலை எனக்கு ,,,மகளுக்கும் மருமகனுக்கும் எனது விடயமாகவும் கடைசி மகன் விடயமாகவும் ஒரே சண்டை கடைசியில் யார் என்னை பார்ப்பது என்று எல்லாரும் மாறி மாறி சண்டை பிடித்து முடி வெடுத்து தான் என்னை கொண்டு வந்து இங்கு பதிந்தார்கள் அதுவும் நான் சுவிஸ் விசாவுடன் வந்ததால் புலனாய்வு செய்தால் பிடித்து விடுவார்கள் என்று எனக்கு இத்தாலி பக்கம் பிள்ளைகள் உறவுகள் இல்லை என்பதாலும் இத்தாலி எல்லையில் இருக்கும் இந்த காம்பில பத்து வருடத்துக்கு முன்னம் இறந்த எனது மூன்றாவது அக்கா பொன்னம்மாவின் பெயரில் அவரது அடையாள அட்டையை தேடி எடுத்து என் சொந்த பிள்ளைகள் ஆறு மாதத்துக்கு முன்னம் கொண்டு வந்து பதிந்துள்ளார்கள் 

அதுதான் முந்தநாள் ஆறுமாதத்துக்கு பின் என் சொந்த மகளே என் தங்கை மகளென்று சொல்லி வந்து பார்த்து விட்டு போனாள் அப்பத்தான் நான் தூக்கி வளத்த அந்த கடைசி பேத்தி என்னப்பாத்து கேலி செய்துவிட்டு சிரித்துகொண்டு போகுது நான் ஒரு கிழடு என்று இவ்வாறு அவர் மனதில் உறங்கிய உண்மையை கண்ணீருடனும் கவலையுடனும் சொல்லி முடித்து என்னை அன்புக்காக எங்கும் அந்த ஜீவன் அணைத்து விம்மி விம்மி அழுதார் ,,,,,,,,!!!!!!,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,சிவமேனகை

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக