தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு நாள் இன்று!

ஈழத்தின் வன்னிப் பகுதியில் அரசாட்சி செய்தவன் தான் இந்தப் பண்டாரவன்னியன். வன்னியின் இறுதி மன்னன்.  மாவீரன் பண்டாரவன்னியனின் நினைவு நாள் இன்றாகும்.
இலங்கைத்தீவில் யாழ்ப்பாணம் உட்பட பல இராசதானிகள் வெள்ளையர்களிடம் வீழ்ச்சி கண்ட பின்னரும் வன்னிமண் நீண்டகாலம் வெள்ளையரிடம் வீழ்ந்துவிடாமல் இருந்தது.
அந்த வன்னி இராசதானியின் இறுதி மன்னனான பண்டாரவன்னியன் தனது இறுதிமூச்சு வரை வெள்ளையரை எதிர்த்துப் போரிட்டான்.
ஆவணி 25ம் நாள் அம்மன்னனின் நினைவுநாளாக நினைவு கூரப்படுகிறது.
முன்பு, பண்டார வன்னியனின் நினைவு நாளாக வேறொரு நாள் தான் நினைவு கூரப்பட்டு வந்தது.
அது நடுகல்லொன்றில் குறிப்பிடப்பட்ட நாளொன்றாக இருந்தது.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கற்சிலை மடு என்னும் ஒரு கிராமத்தில் நடுகல்லொன்று உண்டு.
வெள்ளையரின் படைத்தளபதி ஒருவரால் “பண்டார வன்னியன் இவ்விடத்தில் தோற்கடிக்கப்பட்டான்” என்னும் தரவு அக்கல்லில் பொறிக்கப்பட்டுள்ளது. (இக்கல், பின்வந்த காலத்தில் சிலரால் நிறுவப்பட்டதென்ற கதையுமுண்டு).
அக்கல்லில், பண்டாரவன்னியன் தோற்கடிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்பட்ட நாளைத்தான் நீண்டகாலமாக அவனின் நினைவுநாளாகக் கொண்டாடி வந்தார்கள் தமிழர்கள்.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் தலைமைப்பீடம் வன்னிக்குப் பெயர்ந்தபின் இந்நினைவுநாள் மாற்றப்பட்டது.
ஜெயசிக்குறு நடவடிக்கை தொடங்கப்பட்ட பின் 1997ம் ஆண்டில் பண்டார வன்னியின் நினைவு நாள் ஆவணி 25ம் நாள் என அறிவிக்கப்பட்டது.
ஆவணி 25 ற்கும் பண்டார வன்னியனுக்கு என்ன தொடர்பு..?
அந்தக் காலத்தில் முல்லைத்தீவுக் கரையோரத்தைக் கைப்பற்றிய வெள்ளையர்கள் அங்கே படைத்தளமொன்றை அமைத்திருந்தார்கள்.
அப்போது வன்னிமை முற்றாகப் பறிபோய் விடவில்லை. பனங்காமத்தை மையமாக வைத்து பண்டாரவன்னியனின் அரசாட்சி நடைபெற்று வந்தது.
வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைத்தளம் மீது பண்டாரவன்னியன் போர் தொடுத்து, அப்படைத்தளத்தை நிர்மூலமாக்கினான்.
அத்தாக்குதலில் அங்கிருந்த இரண்டு பீரங்கிகளைக் கைப்பற்றியதாக வரலாற்றுக் குறிப்புகளுண்டு. அந்த நாள் தான் ஆவணி 25.
பண்டாரவன்னியன் வெள்ளையரின் முல்லைத்தீவுப் படைமுகாமைத் தாக்கி பீரங்கிகளைக் கைப்பற்றிய நாளையே தற்போது பண்டாரவன்னியனின் நினைவுநாளாக நினைவு கூருகின்றோம்.
http://www.tamilwin.net/show-RUmryIRZMVfp5.html#sthash.TDTDbHnZ.dpuf

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக