தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

சனி, 22 ஜூன், 2013

ராஜ நாகம்


ராஜ நாகம் பற்றிய தகவல்கள்:-

பாம்புகளையும், சிலவகை பல்லிகளையும் மட்டுமே உணவாக உட்கொள்ளும் பாம்பு உள்ளது. அது ‘கிங் கோப்ரா’ என்று அழைக்கப்படும் ராஜ நாகம் ஆகும்.

இவை நாக்கினால் காற்றில் கலந்துவரும் தனது உணவின் மணத்தைக் கண்டுபிடிக்கிறது. பின் அதைக் கண்டு நெருங்கிச் சென்று கழுத்தைக் குறிவைத்து கடிக்கிறது. அப்பொழுது அதன் அரை இஞ்சு நீளமுள்ள விஷ பல்லில் இருந்து கொடிய விஷம் அந்த மிருகங்களின் உடலில் பாய்கிறது. விஷம் மிருகங்களின் நரம்பு மண்டலத்தை அடைந்ததும் சிறுக சிறுக அவை செயல் இழக்க ஆரம்பிக்கின்றன.

இராஜ நாகத்தின் விஷமானது எவ்வளவு சக்தி வாய்ந்ததாக இருந்தாலும் அவை தனது உணவை விரைவில் செயல் இழக்க செய்ய ஒரு தந்திரத்தைக் கையாள்கிறது. அதாவது, தன்னிடம் அகப்பட்ட அந்த விலங்கை சுமார் இரண்டு மணி நேரம் தன்னுடன் போராடும்படி செய்கிறது. இதன் மூலம் விஷமானது மிக விரைவாக உடல் முழுவதும் பரவி அவை விரைவில் செயல் இழக்கின்றன. வெப்ப இரத்த பிராணிகள் கடி பட்டதும் மிக விரைவாக செயலிழக்கின்றன. காரணம், அவற்றில் இரத்த ஓட்டம் வேகமாக நடைபெறுவதே ஆகும்.

அகப்படும் பாம்புகளின் மற்றும் பல்லிகளின் அளவைப் பொறுத்து அவற்றை முழுமையாக விழுங்குவற்குத் தேவையான கால அவகாசம் எடுத்துக்கொள்கிறது. இவற்றால் தனது தாடை பகுதியிலுள்ள மூட்டு எலும்புகளைத் தேவைக்கேற்ப விடுவித்துக்கொள்ள முடியும். பின் ஒரு தனி இடத்தில் சென்று ஓய்வு எடுத்தபடியே உணவை ஜீரணிக்க செய்கிறது.

16 அடி நீளத்திற்கு மேல் வளரும் இவற்றின் சராசரி நீளம் 13.2 அடி ஆகும். இவற்றின் சராசரி எடை 6 முதல்7.5 கிலோ ஆகும். இவற்றின் விஷ சுரப்பி கண்களுக்கு பின்புறத்தில் அமைந்துள்ளது. அதன் தோல் ஆலிவ் பச்சை,இடையிடையே மங்கலான கறுப்பும், மங்கிய மஞ்சள் நிறமும் கலந்து காணப்படுகின்றன. அடிப்பகுதி மங்கிய மஞ்சள் நிறத்தில் காணப்படும்.

ஒரு முறை 18 முதல் 51 முட்டைகள் இடும் இவை தனது நான்காவது வயதில் இணை சேரும் பருவத்தை அடைகின்றன. ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி மாதம் இணை சேருவதற்கான காலமாக இருக்கிறது. 70 முதல் 77நாட்கள் கர்ப்பத்துக்குப் பின் முட்டை இடுகின்றன. மீண்டும் ஓர் ஆண்டு இடைவெளிக்குப் பின் இவை இன பெருக்கத்திற்குத் தயாராகின்றன.

20 ஆண்டு சராசரி ஆயுளையுடைய இவை இந்தியா, பங்களாதேஷ்,பர்மா, தாய்லாந்து, கம்போடியா, வியட்நாம், மலேசியா, இந்தோனேஷியா, சீனா மற்றும் பிலிப்பைன்ஸ் போன்ற நாடுகளில் அபூர்வமாகக் காணப்படுகிறது. இவை கடிப்பதால் மனிதர்கள் அதிகமாக மரணமடைகின்றனர். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக