தொலைக்காட்சி!!

Search This Blog

Wednesday, April 24, 2013

அழிவின் விளிம்பில் ஒரு அற்புதக் குவியல்


அழிவின் விளிம்பில் ஒரு அற்புதக் குவியல்
-----------------------------------------------------------
என்னைக் கேட்டால் பனைமரத்தைப் போன்ற அற்புதமான பயனுள்ள மரம் வேறொன்றும் இருக்கமுடியாது. அது நூற்றுக்கணக்கான வருடங்கள் வாழக்கூடியது. எத்தகைய வரட்சியையும் தாக்குப்பிடித்து மற்ற எல்லா வளங்களும் வற்றி வரண்டுபோன பிறகு கூட மனித இனத்தைக் காப்பாற்றப் பயன்தரக்கூடியது.

அதன் காய்கள் இளமையாக இருக்கும்போது நுங்காக நாம் சுவைத்துச் சாப்பிடப் பயன்படுகிறது. முதிர்ந்து விட்டால் பனம் பழம் மிகவும் சத்துமிகுந்த சதைப்பகுதியைக் கொண்டது. அதனுள்ளிருக்கும் கொட்டைகளை மண்ணுக்குள் இட்டு நீர்விட்டால் அருமையான பனங்கிழங்குகள் கிடைக்கிறது.

பனைமரத்தில் இருந்து கிடைக்கும் பதநீரைவிடச் சுவையானது என்று வேறு எதைச் சொல்ல முடியும்? அதுமட்டுமல்ல (குடி) மக்களுக்காக தீங்கற்ற மலிவான மதுவையும் தருகிறது. பதநீரைக் காய்ச்சி வெல்லம், கல்கண்டு போன்ற அருமையான உணவுப்பொருட்களைப் பெறுகிறோம்.

பனை நாராலும் பனை ஓலைகளாலும் செய்யக்கூடிய பொருட்களும் அதனால் வாழக்கூடிய மக்களும் ஏராளம் என்பதும் அனைவருக்கும் தெரியுமே! இத்தனைக்கும் மேலாக அது கீழே சாய்ந்து விட்டாலோ அல்லது நாமாகவோ வெட்டிச்சாய்த்தாலோ அதன் முழு மரமுமே அருமையான மரச்சாமான்களாகி வீடுகட்டப் பயன்படுகின்றன.

இத்தனை உபயோகமுள்ள பனைமரங்களை நாம் என்ன செய்திருக்கிறோம் தெரியுமா?

செங்கல் சூளைகளில் இட்டு பெரும்பாலானவற்றை எரித்துவிட்டோம். இன்னும் மீதமிருப்பதும் அழிவின் விளிம்பில் உள்ளது. அற்பக் காசுக்காக நன்றி கொன்ற நாம் பனையை அழித்துவருகிறோம். சில வெள்ளிக் காசுகளுக்காக இயேசுநாதரைக் காட்டிக்கொடுத்த யூதாஸைப்போல.

இன்னும் ஒரு வேடிக்கையான உண்மை என்னவென்றால் நமது நாட்டில் பயிர் செய்யப்படாமல் இருக்கும் மானாவாரி நிலங்களிலும் தரிசுநிலங்களிலும் முழுவதும் பனையைப் பயிர் செய்தோமென்றால் எதிர்காலத்தில் அனைத்து மக்களுக்கும் அதைக் கொண்டே உணவளிக்க முடியும். ( யாரேனும் டாக்டர் பட்டத்துக்காகப் படிக்கும் ஆராய்ச்சி மாணவர் இருந்தால் இதை ஆராய்ச்சிக்குரிய பொருளாக எடுத்துக் கொள்ளலாம். நோபல் பரிசைக் கூட வெல்லலாம்! )

இத்தனை பயன் உள்ள பனைமரத்தை இதுகாலமும் அழித்து வந்ததற்கு ஏதேனும் பிராயச்சித்தம் செய்ய விரும்பினால் அரசு உடனே பனைமரத்தைத் தேசியமரமாக அறிவித்து அதை வெட்டுவதைத் தடைசெய்யவேண்டும்.

-Thiru.Subash Krishnasamy
source: http://www.drumsoftruth.com/

No comments:

Post a Comment