தொலைக்காட்சி!!

இந்த வலைப்பதிவில் தேடு

திங்கள், 4 மார்ச், 2013

ஆனந்தக் கூத்தரின் திருவுருவத்தில் அமைந்துள்ள தத்துவங்கள்.


ஆனந்தக் கூத்தரின் திருவுருவத்தில் அமைந்துள்ள தத்துவங்கள்.
*********https://www.facebook.com/thirumarai
திருக்கைகள்:
கூத்த பிரானுக்குப் பொதுவாக நான்கு கைகளும், சிறப்பாக 8, 10, 16 கைகளும் இருக்கும். இக்கைகள் திசைகளைக் குறிக்கின்றன. எங்கும் பரந்து இருக்கின்ற ஆகாயம் இறைவனின் திருமேனி என சாஸ்திரங்கள் கூறுகின்றன. எனவே, கைகள் திசைகளைக் குறிப்பது பொருத்தமானதே.

உடுக்கை:
கூத்தபிரான் வலது பின்கையில் உடுக்கை ஏந்தியுள்ளார். இது படைத்தலைக் (சிருஷ்டி) குறிக்கும்.

தீச்சுடர்:
பெருமான் தமது இடது பின்கையில் தீச்சுடரை ஏந்தியுள்ளார். இது அழித்தலைக் (சம்ஹாரம்) குறிக்கும்.

அபயகரம்:
இறைவனின் முன் வலது கை அபய முத்திரை உடையது. இது ‘பயப்படாதே’ என்பதைக் குறிக்கும். காத்தலைக் (ஸ்திதி) குறிக்கும் கை இது.

ஊன்றிய திருவடி:
முயலகன் மீது ஊன்றிய திருவடி மறைத்தல் (திரோபவம்) தொழிலைக் குறிக்கும்.

தூக்கிய திருவடி:
எல்லா உயிர்களுக்கும் இன்னருள் புரியும் அருளல் (அனுக்கிரகம்) தொழிலைக் குறிப்பதாகும். இத்திருவடியையே ‘குஞ்சிதபாதம்’ என்பர்.

முயலகன்:
இறைவனின் ஊன்றிய திருவடியின் கீழ் இருப்பவன். ‘அபஸ்மாரன்’ என்பது மற்றொரு பெயர். கருநிறமும் விகாரமான தோற்றமும் உடையவன். இவன் கையில் பாம்பு ஒன்று இருக்கும். ஆணவத்தைக் குறிக்கும் அடையாளமே முயலகன்.

வீசிய கை (கஜ ஹஸ்தம்):
தூக்கிய திருவடியைச் சுட்டிக் காட்டும் இக்கை. இறைவனின் திருவடி அல்லாது உயிர்களுக்கு வேறு பற்று இல்லை என்பதை உண்ர்த்த தூக்கிய திருவடியைக் காட்டுகிறது.

சடைமுடி:
இது ஞானத்தின் அடையாளமாகும்.

நிலா:
சடையிலுள்ள பிறை இறைவனின் பேரறிவைக் குறிக்கும்.

கங்கை:
பெருகி வந்த கங்கையை ஓர் மயிர்க்காலில் இறைவன் கட்டினான். இது அவனது அளவில்லாத ஆற்றலைக் குறிப்பதாகும்.

ஊமத்த மலர்:
இறைவனின் விருப்பு வெறுப்பற்ற தன்மையைக் குறிக்கும்.

திருநீறு:
பராசக்தியின் வடிவமாகும்.

திருநீலகண்டம்:
இறைவனின் அருளாற்றலைக் குறிக்கும் .

முக்கண்:
சூரியன், சந்திரன், தீ ஆகிய மூன்றுமே முக்கண்கள்.

பூணூல்:
இது பிரணவ காயத்திரியைக் குறிக்கும்.

திருவாசி:
இது ஓங்காரத்தைக் குறிக்கும். திருவாசியின் மீதிருக்கும் சுடர்கள் 51 அட்சரங்களைக் குறிக்கும்.

இப்படி தத்துவமே வடிவமாக விளங்கும் கூத்தபிரானை அத்தத்துவக் கருத்துக்களை அறிந்து நாம் வழிபட்டால் மக்கட்செல்வமும் ஞானச் செல்வமும் முக்தியும் நிச்சயமாகக் கிடைக்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக