தொலைக்காட்சி!!

Search This Blog

Tuesday, February 5, 2013

சுந்தரர் காலம்:


சுந்தரர் காலம்:
சுந்தரரின் காலத்தை அறியப்புகுமுன் பல்லவ மன்னர்களின் காலத்தைப் பற்றியும் சிறிது குறிப்பிடவேண்டி உள்ளது. திருநாவுக் கரசர் காலத்துப் பல்லவ மன்னன் முதலாம் மகேந்திரவர்மன் ஆவான். அவனுக்குபின் ஆண்ட பல்லவ மன்னர்கள் வருமாறு:

1. முதலாம் மகேந்திரவர்மன் 600-630
2. முதலாம் நரசிம்மவர்மன் 630-668
3. இரண்டாம் மகேந்திரவர்மன் 668-670
4. பரமேஸ்வரவர்மன் 670-700
5. இரண்டாம் நரசிம்மவர்மன் 700-728
மூன்றாம் மகேந்திரவர்மன் இரண்டாம் பரமேஸ்வரவர்மன்
720-728 728-730

ராஜசிம்மன்
பல்லவ மன்னர்களில் இரண்டாம் மகேந்திரவர்மன் (எண் - 3), ராஜசிம்மனாகிய இரண்டாம் நரசிம்மவர்மன் (எண் - 5) ஆகிய மன்னர்களின் செப்பேடுகள் இரண்டில் வானிலைக் குறிப்புகள் கொடுக்கப்பட்டுள்ளன. இவைகளின் துணைக் கொண்டு, பல்லவர் களின் கல்வெட்டுகள், செப்பேடுகள், சாளுக்கிய மன்னர்களின் கல் வெட்டுகள், செப்பேடுகள் இவைகளின் துணைக்கொண்டும், மேலே காட்டியுள்ள பட்டியலை ஆய்வாளர் கணக்கிட்டுத் தந்துள்ளனர். பல்லவர் சரித்திரத்திற்கு இண்டிகா தொகுதி 20 இல் கட்டுரை எண் 11இலும், எபிகிராபிகா இண்டிகா தொகுதி 32 இல் கட்டுரை எண் 9இலும் வெளிவந்துள்ளன. முப்பது ஆண்டுகளுக்கு முன் வெளியிடப் பட்ட அறிய, பலருக்கு வாய்ப்பு இல்லாத காரணத்தால் சுந்தரமூர்த்தி சுவாமிகளின் காலத்தை ஆராயப் புகுந்த பல அறிஞர்களுக்கு சில குழப்பங்கள் ஏற்பட்டன.
நிற்க, விஞ்ஞான ரீதியாக பல்லவர் காலம் கணிக்கப்பட்டுள்ள மேல்வரும் பட்டியலைக் கொண்டு சுந்தரர் காலத்தைக் காணலாம்.

சுந்தரர் திருத்தொண்டத் தொகையில், "கடல் சூழ்ந்த உலகம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கற்கு அடியேன்" என்கின்றார். காடவர் கோன் என்றால் பல்லவ மன்னன் என்று பொருள். "உலகம் காக்கின்ற பெருமான்" என்று நிகழ்காலத்தில் கூறுவதால் அப்பல்லவ மன்னனும், சுந்தரரும் சமகாலத்தவர்கள் என்பதை எளிதில் அறியலாம். கழல் என்பது மன்னனுக்கு உரிய அடைமொழி. சிங்கன் என்பது மன்னனின் இயற்பெயர். பல்லவர் களுக்கு, சிங்கன் என்ற பொதுப்பெயரைக் கூறி விட்டபடியால் மீண்டும் ஒருமுறை சிங்கன் என்ற பொதுப் பெயரைக் கூற நியாய மில்லை. எனவே இங்கு சிங்கன் என்று சுந்தரர் குறிப்பது அவர் காலத்தில் வாழ்ந்த பல்லவ மன்னனின் இயற்பெயர் என்பதில் சிறிதும் ஐயமில்லை.
திருநாவுக்கரசருக்கும் சம்பந்தருக்கும் காலத்தால் பிற் பட்டவர் சுந்தரர். இப்பிற்பட்ட காலத்தில் சிங்கன் என்று பெயர் தரித்த பல்லவ மன்னன் ஒருவனே ஆட்சி புரிந்தவன். அவன் ராஜசிம்ம னாகிய இரண்டாம் நரசிம்மவர்மன் ஆவான். அவனது காலம் கி.பி. 700 முதல் 728 வரையிலாகும். சுந்தரர் இக்காலத்தில் வாழ்ந்தவர் ஆவர். பின்வரும் ஆய்வும் இக்கருத்துக்குத் துணைநிற்கும்.

ராஜசிம்மன் காஞ்சிபுரத்தில் தன் பெயரால் ராஜசிம்மேஸ்வரம் என்னும் சிவன் கோயிலைக் கட்டினான். அதுவே இன்றைய கைலாச நாதர் கோயில். இக்கோயிலில் இம்மன்னனது கல்வெட்டுகள் வட மொழியில் உள்ளன. மன்னனுக்கு இறைவன் அசரீரியாக உணர்த்தி னான் என்று கல்வெட்டில் கூறப்பட்டுள்ளது. (South Indian Inscriptions - Tamil and Sanskrit - Volume 1 Page 14 Line 7) எண்ணற்ற எதிரிகளைத் துகளாக்கிய இம்மன்னன் சைவ சித்தாந்தப் பாதையில் நின்றவன் என் றும் கூறப்பட்டுள்ளது. இவனது வீரத்தையும், சிவபக்தியையும் கூறும் இவ்வடமொழிக் கல்வெட்டுகள் மிக விரிவானவை. (Above Volume Page 8 to 22) இடமின்மையால் விரிவுக்கு அஞ்சி விடுகின்றேன்.
பெரிய புராணத்தில் கழற்சிங்க நாயனார் புராணத்தில் கூறப் படும் பல்லவனும் வடபுல மன்னர்களை வென்றவன் என்றும், சிவ பக்தி கொண்டு சிவதர்மங்களும் தொண்டுகளும் செய்தவன் என்றும் கூறப்பட்டுள்ளது. அவையாவும் ராஜசிம்மனுடைய கல்வெட்டுகளில் - வடமொழிக் கிரந்தங்களில் விரிவாய்ச் சொல்லப்பட்டுள்ளன.

சுந்தரர் பூசலார் நாயனாரையும் குறிப்பிடுகின்றார். பூசலார் நாயனாரின் வரலாற்றைச் சேக்கிழார் பெருமான் விரிவாக எடுத் துரைப்பார். பூசலார் அவதரித்த திருத்தலம் திருநின்றவூர். அவர் சிவபெருமானுக்குக் கோயிலெடுக்க நினைத்தார். ஆனால் அவரிடம் பொருள் இல்லை. ஆகவே தன் மனத்திலேயே சாத்திர விதிப்படி கோயில் அமைத்தார், மனதில் கட்டியகோயிலுக்குக் கடவுள் மங்கலம் என்னும் மருந்து சாத்துதல், குடமுழுக்கு விழா ஆகியவற்றுக்கு நன்னாள் அமைத்தார்.

இஃது இவ்வாறு இருக்க, காஞ்சிபுரத்தில் பல்லவ மன்னன் கச்சிக் கற்றளி எடுத்தான். இறைவன் திருமேனியைத் தாபிக்கவும் நாள் வகுத்தான். ஆனால் அதற்கு முதல் நாள் இறைவன் மன்னனின் கனவில் தோன்றி "நின்றவூர் பூசல் அன்பன் நெடிது நாள் நினைந்து செய்த நன்றுநீடு ஆலயத்து நாளை யாம் புகுவோம். நீ உன்னுடைய நாளை மாற்றி அமைத்துக்கொள்" என்று அருளினார்.
மன்னனும் மறுநாள் பூசலாரைக் கண்டு வணங்கி இறைவன் கனவில் உரைத்ததைக் கூறினான். பூசலாரும் தாம் மனதில் கோயில் கட்டியதையும், குட முழுக்கு விழாவிற்கு அன்றுதான் நன்னாளாக நினைத்ததையும் கூறினார். மன்னனும் பூசலாரும் இறையருளில் மூழ்கிப் பேரின்பம் அடைந்தனர்.
காஞ்சிபுரத்தில் முதன் முதல் கச்சிக் கற்றளி எடுப்பித்தவன் இராஜசிம்மனே. அவனுக்கு அசரீரியாக இறைவன் உணர்த்தியதாகக் கல்வெட்டும் கூறுகிறது. இவை பூசலார் நாயனார் புராணத்துடன் ஒத்து இருப்பதும் கணிக்கத்தக்கது (S.I.I. XII Introduction page III - 'This is evidently an allusion to Periyapuranam wherein it is stated that the Pallava king was directed to postpone the consecration of this temple so that the Lord might be present elsewhere at a similar ceremony conducted in the mental plane by Saint Pusalar). தொகுத்து நோக்கினால், சுந்தரரும் காஞ்சி கைலாசநாதர் கோயில் கட்டிய இராஜசிம்ம பல்லவனாகிய கழற்சிங்கனும், பூசலார் நாயனாரும் சமகாலத்தவர் என்பதை எளிதில் உணரலாம். எனவே சுந்தரர் காலத்தை கி.பி. 700 முதல் 728 வரை எனக் கொள்ளலாம்.

No comments:

Post a Comment